Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வரதா வரம்தா...
 
பக்தி கதைகள்
வரதா வரம்தா...

நான் செத்த பிறகு வா எனச் சொன்ன திருக்கோட்டியூர் நம்பியின்  வார்த்தைகளைக் கேட்டு ராமானுஜர் வருந்தினார். ""ஆச்சார்யன் இப்படி  சொல்லலாமா?  இப்படி அலைக்கழிக்கவும் செய்யலாமா? இதற்கு... உனக்கு  உபதேசம் செய்ய இஷ்டமில்லை என்று கூறலாமே!” என சீடர்களான கூரேசரும்,  முதலியாண்டானும் வருந்தினர்.

குருவின் வருத்தத்தை தங்களின் வருத்தமாக கருதினர். உபதேசத்திற்காக  வேறொரு ஆச்சார்யனைப் பார்க்கலாமா? ஸ்ரீரங்கத்தில் யாராவது இருப்பர் என்றும்  அவர்களிடம் எண்ணம் தோன்றியது.  

""ஒரு முறையா? இரு முறையா? பதினேழு முறை..!”

காஞ்சி எங்கே இருக்கிறது –  இது சோழநாடு என்றால் காஞ்சி தொண்டை நாடு.  இதை எண்ணியாவது இந்த நம்பியின் மனம் இரங்காதா?”

இப்படி எல்லாம் சீடர்கள் கேட்டனர்.

ஆனால் ராமானுஜர் தெளிவுடன், ""அன்புச் சீடர்களே! அமைதியாக இருங்கள். எந்த  ஒரு ஆச்சார்யனும் கருணை இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதிலும்  எம்பெருமானை நெஞ்சில் நிறுத்தி அவனே எல்லாம் என எண்ணுபவர்கள்,  காண்பவர்களிடமும் அவனையே காண்பர்? அப்படி இருக்க என்னிடம்  பாரபட்சமாக நடப்பாரா? விருப்பம் இல்லை என்றால் தான் எடுத்த எடுப்பில்  மறுத்து விடுவாரே....என்னிடத்தில் தான் ஏதோ பிழை! அதனால் தான் உபதேசம்  தள்ளிப் போகிறது” என தன் மீதே குறை கூறினார். அதைக் கேட்ட  திருவரங்கத்தமுனார், எம்பிரானே! தங்களின் திருஉள்ளம் பொன்னால் ஆனதோ?
இத்தனை தடவைக்கு பின்னும் எப்படி ஆச்சார்யனை மதிக்க முடிகிறது.  எங்களால் முடியவில்லையே” என்றார்.

""அமுதனாரே!  குரு என்பவர் எப்படி வேண்டுமானாலும் பாடம் நடத்தலாம்.  இப்படித் தான் நடத்த வேண்டும் என அவரை வற்புறுத்தக் கூடாது. ஒரு  தாயானவள் பசியறிந்து குழந்தைக்கு சோறு ஊட்டுவது போல குருவும், சீடனின்  பக்தி, ஒழுக்கத்தை அறிந்து ஞானம் ஊட்டுகிறார். எந்த நிலையிலும்  ஆச்சார்யனை விமர்சனம் செய்யாதீர்கள்.  இது ஒரு வைணவன் பின்பற்ற  வேண்டிய முக்கிய நெறிமுறை” என அமுதனாரைத் திருத்தினார். பின்  பதினெட்டாம் முறையாக ஆச்சார்ய நம்பி இல்லம் நோக்கி செல்லும் போது  மனதுக்குள் உருக்கமான ஒரு பிரார்த்தனை.

""எம்பெருமானே!

என் பிழை எது என நீ காட்டியருள வேண்டும். அதை நான் உணர்ந்து நீக்கிய பின்  உபதேசத்தை பெற்றிட வேண்டும். காஞ்சிக்கும், திருக்கோட்டியூருக்கும் அலைய  முடியாத நிலையில் இதை நான் வேண்டவில்லை. ரகஸ்யார்த்தம் உணர்ந்து  உன்னை தியானிக்கும் காலம் வீணாகிறதே என்ற வருத்தத்தில் தான்  பிரார்த்திக்கிறேன்” என்றார். வழக்கம் போல கூரேசரும், முதலியாண்டானும்,  அமுதனாரும் உடன் சென்றனர்.

ஆச்சார்யன் மனைக்கு செல்லும் போது அங்கு ஒருவர் காத்திருந்தார்.  தோற்றப்பொலிவு மிக்க அவரது காதில் வைரத்தோடு, கையில் வைர மோதிரம்  மின்னியது. பட்டுக் கச்சமுடன் பன்னிரு காப்பும் அணிந்து திருச்சன்னதியில்  இருந்து பெருமாளே எழுந்து வந்தாற் போலிருந்தார். மேனி எங்கும் நறுமணம்.  ராமானுஜர் பணிவுடன் வணங்க அவரிடம் ஒரு இதமான புன்னகை. பின்  உரையாடல் தொடங்கிற்று.

""தாங்கள்?”

""நான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன். ஆச்சார்ய தரிசனத்திற்காக வந்திருக்கிறேன்”

""உங்கள் ஊர்?”

""இதே ஊர் தான்..”

""பெயர்?”

""சவுமிய நாராயணன்”

""எம்பெருமானின் திருப்பெயர்”

""ஆம்..என் பெயர் தான் எம்பெருமானின் பெயரும்...” பதிலுக்கு அவர் கூறியதில்  சன்னமாய் ஒரு செருக்கு. அது சீடர்களை வருந்த வைத்தது. ஆனால் சவுமிய  நாராயணனிடமோ ஒரே புன்னகை மயம். மனதிற்குள் ஒரு கீர்த்தனை ஓடுகிறதோ  என்னவோ – உதட்டில் முணுமுணுப்பு. அப்படியே ""நீர் தான் அந்த  விடாக்கண்டரோ?” என்றும் கேள்வி.

திகைத்த ராமானுஜர், ""என்னைத் தாங்கள் அறிவீரா?”

""தினமும் தான் திருச்சன்னதியில் பார்க்கிறேனே?”

""ஆனால் நான் உங்களைப் பார்த்ததில்லையே..?”

""அப்படியானால் உங்கள் கவனம் எம்பெருமானின் மீது இல்லை. வேறு எதன்  மீதோ என நினைக்கிறேன்...”

""ஐயோ என்ன இது.... வருவதே எம்பெருமானின் திவ்ய தரிசனம் பெறத் தானே?”

""அப்படியானால் என்னைத் தெரிந்திருக்க வேண்டுமே?”

""எங்கேயோ தவறு நடந்திருக்கிறது. இம்முறை வரும் போது பார்க்கிறேன்”

""நானும் பார்க்கிறேன்”

அந்த சவுமிய நாராயணன் பேச்சு ராமானுஜரை ஆழம் பார்ப்பது போலவே  இருந்தது. அப்போது உள்ளே ஆச்சார்ய நம்பியிடம் இருந்தும் அழைப்புக்குரல்.

""யார் வந்திருப்பது?”

""அடியேன் சவுமிய நாராயணன் வந்திருக்கிறேன்”

""அப்படியாயின் உள்ளே வரலாம்” என்றவுடன் அவரும் உள்ளே சென்றிட  ராமானுஜரிடம் ஒருவித திகைப்பு. கூரேசர் கவனித்துக் கேட்டார்.

""எம்பிரானே... எதனால் இந்த திகைப்பு?”

""அவர் என்ன சொல்லிச் சென்றார் என கவனித்தீரா?”

"" கவனிக்கவில்லையே...”

""இவர் உத்தம வைஷ்ணவர். என்ன பணிவு.. என்ன பணிவு!”

ராமானுஜர் சொல்வதைக் கேட்ட சீடர்கள் மூவரும் திகைத்தனர்.

""இவரிடமா பணிவு... ஒரே அலட்டல்... எப்படி இவரை பணிவானவர் எனக்  கருதுகிறார் நம் குருநாதர்!”  என ஆராயத் தொடங்கினர்.

அதற்குள் சவுமிய நாராயணனும் திரும்ப வந்து சிரித்தபடியே ""பார்த்து நடந்து  கொள்ளுங்கள்” என்றார். அதில் பல உட்பொருள்.

""நிச்சயம் சுவாமி. உங்களிடம் தான் ஆச்சார்ய நம்பி கடந்த முறை  பேசியதற்கான பொருளை முழுமையாக உணர்ந்தேன். உங்களுக்கு என் நன்றி”

""நன்றி கிடக்கட்டும் எதை உணர்ந்தீர்? அதைச் சொல்லும்” என்றார் அவர்.

""நான் என்ற செருக்கு மிக்க சொல்லின் கசடு தெரியாமல் அதைப் பயன்படுத்தி  வந்த எனக்கு இதமான அடியேன் என்ற பதத்தை காட்டி அருளினீர்.  எம்பெருமானே உம் வடிவில் வந்ததாக கருதுகிறேன்” என்றார்.

""புரிய வேண்டியது புரிந்து விட்டது” என சிரித்தபடி சென்றார் அவர்.

""அடடா... நன்றி சொல்ல மறந்தோமே” என எட்டிப் பார்த்தார் ராமானுஜர்.
அவரோ மாயமாகி விட்டார். ஒரே வியப்பு ராமானுஜருக்கு... இந்நேரம் பார்த்து  ஆச்சார்யனின் குரல்.

""யார் வந்திருப்பது?”

""அடியேன் திருக்கச்சி ராமானுஜன் சுவாமி”

""அப்படியாயின் உள்ளே வா...”

ஆச்சார்யனின் குரல் ராமானுஜரை சிலிர்க்கச் செய்தது. இது நாள் வரை இல்லாத  அழைப்பு!

நான் செத்த பிறகு வா எனக் கூறியது இதற்கு தானா? நான் என அவர்  தன்னைக் குறிப்பிடவில்லை. நான் என்ற மமகாரம் மிக்க சொல்லைக்  கூறியுள்ளார். இந்த நான் என்ற சொல்லை எந்த தொனியில் சொன்னாலும் அது  அகங்காரச் சொல்லே! ஒரு துறவி முதலில் துறக்க வேண்டியது நான்
என்பதைத் தான். இது புரியாமல் இதுநாள் வரை சிரமப்பட்டு விட்டேனே...?”

ஒரு கோணத்தில் இது சிறிய விஷயம் தான். இன்னொரு கோணத்திலோ இதுவே
பெரிய விஷயம்!

இது விஷயம் மட்டுமல்ல... விஷமும் கூட! இன்று அந்த விஷம் நீங்கியது. அந்த  இடத்தில் அடியேன் என்ற பணிவிலும் பணிவாக இதமான சொல் சேர்ந்தது.

ராமானுஜரும் அடியேன் ராமானுஜராக ஆச்சார்ய நம்பிகள் முன் கூப்பிய  கைகளுடன் சென்றார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar