|
யாராவது பாராட்டி, ஒரு சில வார்த்தைகள் சொல்லி விட்டால், நம்மை கையில் பிடிக்க முடிவதில்லை. நமக்குத் தெரிந்ததை விட, கைபேசிக்கு அதிகம் தெரியும். ஒரு தட்டு தட்டினால், எந்த தகவலாக இருந்தாலும் வந்து விழுகிறது. நம்மை விட அதிகம் தெரிந்ததால், கைபேசி பெருமை பாராட்டிக் கொள்கிறதா என்ன? கைபேசி, ஜடப்பொருள் என்று பேசிப் பயன் இல்லை. தற்பெருமை பேசித் திரிவதால், பலன் என்ன... யாராக இருந்தாலும், இந்த தற்பெருமை, ஒரு கை பார்த்து விடுகிறது. வீணை வாசிப்பதில், மகா நிபுணராக திகழ்ந்தார், நாரதர். அவரது வாசிப்பை கேட்ட அனைவரும், ஆகா... ஆகா... நீங்கள், வீணை வாசிப்பதைக் கேட்டால், அப்படியே மெய் சிலிர்க்கிறது. உங்களை போல, வீணை வாசிக்க, யார் இருக்கின்றனர்... என்று, முகஸ்துதி செய்தனர்.
நாரதருக்கு, கர்வம் தலைக்கு மேல் ஏறி விட்டது. கண்ணனுக்கு இத்தகவல் தெரிந்தது. நாரதரின் கர்வத்தை நீக்க தீர்மானித்தார். நாரதரே... வீணையில், உங்களுக்குள்ள திறமையை கண்டு, ஊரே வியக்கிறது. சிவபெருமானும் - பார்வதியும் கூட, உங்கள் வீணை வாசிப்பை கேட்க விரும்புகின்றனர். நீங்கள் ஒப்புக்கொண்டால், சொல்லுங்கள்... அவர்களிடம், இப்போதே உங்களை அழைத்துச் செல்கிறேன்... என்றார். கண்ணனின் வார்த்தைகளை கேட்டு, உச்சி குளிர்ந்தார், நாரதர்; ஆணவம் மேலும் அதிகரித்தது. சிவபெருமானும் - பார்வதியுமே, என் வீணை வாசிப்பை கேட்க ஆசைப்படுகின்றனர் என்றால், மற்றவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன... அவர்கள், என் வீணை வாசிப்பை புகழ்வது நியாயம் தான். சரி... வாருங்கள், இப்போதே கைலாயம் போய், சிவன் - பார்வதிக்கு, என் வீணை வாசிப்பை காண்பிக்கலாம்... என்றார், நாரதர்.
நாரதரை அழைத்து புறப்பட்டார், கண்ணன். செல்லும் வழியில், அழகான பெரிய மாளிகை ஒன்று இருந்தது. அதை பார்த்ததும், கண்ணனும், நாரதரும் உள்ளே நுழைந்தனர். அங்கே, ஏராளமான பெண்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும், இளமையும், அழகும் கொண்டவர்களாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஓர் ஊனம் இருந்தது. அவர்களை பார்த்த நாரதர், பெண்களே... யார் நீங்கள், உங்களை இவ்வாறு ஊனப்படுத்தியவர்கள் யார் என சொல்லுங்கள்... எனக் கேட்டார். ஐயா... நாங்க அனைவரும், சங்கீத தேவதைகள். நாங்கள் இருக்கும் இந்த மாளிகை, சங்கீத மாளிகை. நாரதர் என்பவர், வீணை வாசிக்கிறேன் பேர்வழி என்று, எங்களையெல்லாம் இவ்வாறு அங்கஹீனப்படுத்தி, அலங்கோலமாக்கி விட்டார்... என்றனர். காற்று பிடுங்கிய பலுானை போல, நாரதரிடம் இருந்த கர்வமெல்லாம் விலகியது.
நாம் இப்போது, கைலாயம் சென்று, சிவபெருமான் - பார்வதியை பார்க்க வேண்டாம். வீணை வாசிப்பில், நான் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது, இங்கே தெளிவாக தெரிந்து விட்டது. ஆகையால், வீணை வாசிப்பில், நான் நன்றாக தேர்ச்சி பெற்ற பின், கைலாயம் செல்லலாம்... என்றார், நாரதர். கண்ணன் முகம் மலர்ந்தது. அப்பாடா... நாம் நினைத்தது பலித்து விட்டது. நாரதரின் கர்வம் நீங்கியது... என மகிழ்ந்து, அவருடன், வந்த வழியே திரும்பினார். ஆணவம் என்பது, வேகத்தடை போன்றது. சற்று யோசித்து, நிதானித்து, அதைக் கடந்து விட்டால், வாழ்க்கை பயணம் சுகமாக இருக்கும்; உயர்வாகவும் இருக்கும்!
|
|
|
|