|
தன் முன்னால் வந்து நின்ற ராமானுஜரை ஆச்சார்யநம்பி உற்று பார்த்தார். அதில் பலவித அர்த்தங்கள்... கூடவே உன்னை அலைக்கழித்தது எதனால் என புரிந்ததா? என்றும் ஒரு கேள்வி.
ராமானுஜரோ கூப்பிய கைகளும், கனிந்த முகமுமாக பார்த்தார்.
ராமானுஜா
சுவாமி
சந்தோஷம் தானே?
மிகுந்த சந்தோஷம் சுவாமி
உன்னை மிக அலைக்கழித்து விட்டேனோ?
இல்லை சுவாமி... என்னுள் பொறுமையை வளரச் செய்துள்ளீர்! என்னுள் இருந்த நான் என்னும் அழுக்கை நீக்கினீர். இன்று தான் அடியேன், பூரண வைஷ்ணவனாக இருக்க சீர்படுத்தினீர்.
நேர்மறையாகப் பேசுகிறாய். விடாமுயற்சியும் உன்னிடம் உள்ளது. குருபக்தியால் நன்கு கனிந்து விட்டாய். உன்னோடு வந்த சீடர்கள் எங்கே?
வெளியே காத்திருக்கின்றனர். அழைக்கட்டுமா?
அவசியம் இல்லை. அவர்கள் தாங்களாகவே வந்தவர்களா? இல்லை உனக்காக வந்தவர்களா?
எனக்கு துணையாக வந்தார்கள் சுவாமி!
உபதேசம் பெற தன் பொருட்டு தான் வர வேண்டும்
புரிந்தது சுவாமி
உபதேசிக்கும் முன் சில கருத்துக்களை கூறப் போகிறேன். கேட்கச் சித்தம் தானே?
சித்தமா... பாக்கியம் சுவாமி
நான் என்னும் எண்ணம் துளியும் இல்லாதவனே வைஷ்ணவன். சுயநலச் சிந்தனைக்கு அவனிடம் இடமில்லை. நாம், நமது என்னும் பரந்த நோக்கமே முக்கியம் புரிகிறதா?
புரிகிறது சுவாமி
நித்ய தியானம், நித்ய சேவை, நித்ய பாராயணம் துளியும் தவறக் கூடாது
உத்தரவு சுவாமி
ஆச்சார்ய ஆராதனை, பாகவத சேவையும் மிக முக்கியம்
உத்தரவு சுவாமி
ரகஸ்யாத்ரம் அறிந்த நிலையில் அதை உயிராக காத்திட வேண்டும்
நல்லது சுவாமி
நான் இப்போது உபதேசம் செய்யப் போகிறேன். மண்டியிட்டு கைபொத்தி உன் செவிகளை மட்டும் கொடு பார்ப்போம்
ராமானுஜரும், ஆச்சார்ய நம்பியின் கட்டளைப்படி செயல்பட்டார். ரகஸ்யாத்ர விளக்கமும், மந்திர உபதேசமும் பிறர் அறியா வண்ணம் தொடங்கியது. ஆச்சார்ய நம்பியின் ஆசனத்திற்கு அருகில் குத்துவிளக்கு ஒன்று எரிந்தது.
வெளியே முதலியாண்டானும், கூரேசரும், அமுதனாரும் மனம் தவித்தபடி இருந்தனர். ஒருவேளை இம்முறையும் பிரச்னையா? என்ன என்றே தெரியவில்லையே என எம்பெருமானை பிரார்த்திக்க உள்ளே உபதேசம் முடிந்திருந்தது.
ராமானுஜர் முகத்தில் புளகாங்கிதம். தன் தெய்வீகத் திருமேனியை எழுப்பி ஒருமுறைக்கு நான்கு முறை ஆச்சார்யனின் காலடியில் விழுந்து வணங்கி கண்ணீரை துடைத்தார். ஆச்சார்ய நம்பியும், ராமானுஜா! நீ இந்த நொடி முதல் பூரண வைஷ்ணவனாகி விட்டாய். எம்பெருமானின் திருவருள் உனக்கு சித்திக்கட்டும். இப்போது நான் கட்டாயமாக கூற வேண்டிய ஒன்றும் உள்ளது
சொல்லுங்கள் சுவாமி
நீ குடும்பஸ்தனாக இருந்தும் அதிலிருந்து விலகி சன்யாசி ஆனவன். ஆன போதிலும் பூரண வைஷ்ணவனாக இன்றே ஒரு ஆச்சார்ய நிலைக்கு தயாராகி விட்டாய். உபதேசித்த எதையும் நான் இருக்கும் வரை பிறருக்கு உபதேசிக்க கூடாது.
ராமானுஜரிடம் பெரும் அதிர்ச்சி. இருந்தும் வெளிக்காட்டாமல் ஏன் சுவாமி அப்படி?என்றார்.
ரகஸ்யார்த்தம், மந்திர உபதேசம் இரண்டும் நாராயணப் பதம் அளிப்பவை. மோட்ச கதிக்கும் மேலானது அது! அதை அனைவருக்கும் உபதேசித்து மலிவாக்கி விடக் கூடாது. பெரும் முயற்சி கொண்டவர்களுக்கே உபதேசிக்க வேண்டும்
இப்படித்தான் செயல்படுத்த வேண்டும் என பிரமாணம் உண்டா சுவாமி?
இல்லை. இது ஆச்சார்யன் திருவுள்ளம் தான்
என் சீடர்களுக்காக, அவர்கள் காட்டும் விசுவாசத்திற்காகக் கூட உபதேசிக்க கூடாதா?
கூடவே கூடாது
மீறினால்?
இது என்ன கேள்வி... நரகம் செல்வாய். ஆச்சார்யன் வாக்கு என்பது வரம் போன்றது. அப்படியே நடக்கும்
நல்லது சுவாமி
சென்று வா...சொன்னது நினைவில் இருக்கட்டும்
நம்பி விடை தந்திட வெளியே வந்தார் ராமானுஜர். காத்திருந்தவர்கள் ஓடி வந்து தவறாக ஏதும் நடக்கவில்லையே? எனக் கேட்டனர்.
ரகஸ்யார்த்தம் முழுதும் அறிந்து மந்திர உபதேசம் பெற்றேன்!
அற்புதம்.. ஆனந்தம்.. நாங்கள் சென்றால் எங்களுக்கும் உபதேசம் கிடைத்திட தடையில்லை எனக் கூறுங்கள்
மன்னிக்க வேண்டும். எனக்காக வந்தவர்கள் நீங்கள். உபதேசம் பெற்றிட அதன் பொருட்டே முயற்சிக்க வேண்டும்
உங்களைப் போல நாங்களும் அலைய வேண்டுமா?
அவசியமில்லை அதைக் கேட்டு ஆச்சர்யமுடன் பார்த்தனர்.
அப்படியானால்...?
என்னை நம்பி வந்த உங்களை கைவிட மாட்டேன். ஆச்சார்ய உபதேசம் பெற்றதாலும், சன்னியாசியாக வாழ்வதாலும் உபதேசிக்கும் தகுதி எனக்கு உண்டு
வேறென்ன வேண்டும். நாங்கள் பாக்கியசாலிகள்
நீங்கள் மட்டுமல்ல. எம்பெருமான் கருணை வேண்டுவோர் அனைவரும் பாக்யசாலிகளே
சொல்வது புரியவில்லையே
உங்களுக்கு மட்டுமல்ல... ஊருக்கே உபதேசிக்கப் போகிறேன். அஷ்டாட்சரம் ஆசைப்பொருள் அல்ல.. பெட்டியில் பூட்டி வைக்க... அது உயிர்களின் விடுதலைக்கான விமோசனம். அது பொதுவாக இருக்க வேண்டும்
அப்படி இருந்தால் எப்போதே உபதேசம் ஆகியிருக்குமே?
அப்படி நடக்காததும் நல்லதற்கே... நான் பாடாய் பட்டதால் தான் அதன் மகத்துவம் புரிந்தது. இனி பொதுவாக போகின்றது..
அப்படியானால்?
வாருங்கள் என்னோடு... என்ற ராமானுஜர் திருக்கோட்டியூர் கோயில் நோக்கி நடந்தார். அவர்கள் பின்தொடர்ந்தனர்.
வாருங்கள் எல்லோரும். செவியுடையோர் அனைவருக்கும் மந்திர உபதேசம் ஆகப் போகிறது. பிறவிக்கடன் தீரும் வழி தெரியப் போகிறது என கூரேசர் அழைத்திட ராமானுஜர் விறுவிறு என கருவறை விமானத்தின் மீதேறினார். அனைவருக்கும் தெரியும்படியாக ஓரிடத்தில் நின்றார். ஊரே திரண்டிருக்க அதில் கூரேசர், முதலியாண்டான், அமுதனாரும் நின்றனர்.
ராமானுஜரும் உரத்த குரலில் ஓம் நமோ நாராயணாய மந்திரத்தை உபதேசம் செய்யத் தொடங்கினார்.
|
|
|
|