|
கடவுள் மீது பக்தியுள்ள ஒருவன் மிகவும் சந்தேகப் பேர்வழியாக இருந்தான். ஒருமுறை அவனது சந்தேகம் கடவுளைப் பற்றியே எழுந்தது. கடவுள் ஒருவரே, ஆனால், அவர் யாரென்று கேட்டால் ஆளுக்கு ஒரு விடை சொல்கிறார்களே என்பதுதான் அவன் சந்தேகம். துறவி ஒருவரைக் கண்டவன், தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைச் சொன்னான். “சுவாமி, கடவுள் ஒருவரே என்றால், பதில்கள் ஏன் பலவிதமாக அமைய வேண்டும்?” என்று கேட்டான். துறவி உடனே பதில் கூறவில்லை “நாளை அதிகாலை உன்னால் வரமுடியுமா?” என்று கேட்டார். “வருகிறேன் சுவாமி?” என்றான் அவன். மறுநாள் அதிகாலையில் வந்தான். துறவியும் பக்தனும் நடந்தார்கள். அப்போது, கோயில் மணியோசை ’டாண் டாண் டாண்’ என்று கேட்டது. முனிவர், “என்ன மணிச்சத்தம்?” என்று அந்த வழியே வந்த குருக்களிடம் கேட்க, “விடியற் காலை பூஜை ” என்றார் அவர்.
துறவியும் பக்தனும் மதியம் வரை திண்ணை ஒன்றில் தங்கியிருந்தார்கள். மறுபடியும் கோயில் மணி ’டாண் டாண் டாண்’ என்று ஒலித்தது. துறவி அங்கு வந்த வீட்டுக்காரரைப் பார்த்து, “அய்யா... இது என்ன மணிச்சத்தம்?” என்று கேட்க அவர், “இது உச்சிக்கால பூஜை வேளை!” என்றார். துறவியும் பக்தனும் கடைவீதிப்பக்கம் போனார்கள், சாப்பிட்டார்கள் நேரம் ஓடியது. மீண்டும் கோயில் மணி ’டாண் டாண் டாண்’ என்று ஒலித்தது. அங்கிருந்த பழக்கடைக்காரரிடம் துறவி, “ஐயா, இது என்ன மணியோசை?” என்று கேட்க, அதற்கு அவர், “சாயரட்சை பூஜை நடக்கிறது!” என்றார். இருவரும் சிறிது நேரம் சுற்றிக்கொண்டிருந்தார்கள். இரவு நெருங்கியது. சுமார் 8 மணியிருக்கும். மறுபடியும் கோயில் மணி ’டாண் டாண் டாண்’ என்று ஒலித்தது. “பூக்கடைக்காரரே, இது என்ன சத்தம்?” என்று கேட்க அவர், “இது அர்த்தஜாம பூஜை என்றார்.
துறவி கேட்டது ஒரே கேள்விதான். பதில்கள் பலவிதமாக வந்தன. பக்தனான சந்தேகப் பேர்வழியைப் பார்த்து அவர் சொன்னார், “அன்பனே! இங்கு ஒரே கடவுளுக்கு நடக்கும் பூஜைதான் - காலத்தின் காரணமாக ஒவ்வொருவர் சொல்லும் முறை வேறு வேறாக இருந்தாலும், அவர்கள் குறிப்பிடும் தெய்வம் ஒன்றே! பக்தர்கள் அணுகும் முறை, போகும் பாதை வேறு வேறு. அதனால் வெவ்வேறு பெயர்களை பதில்களைக் கூறுகிறார்கள். ஆனால் எல்லாரும் வந்து சேருமிடம் ஒன்றே! இப்போது புரிந்ததா?” என்று கேட்டார். “சுவாமி, என் சந்தேகம் தீர்ந்தது. மிக்க மகிழ்ச்சி!” என்றான் பக்தன்.
|
|
|
|