|
ஏழை நம்பூதிரி ஒருவர் மகளுக்குத் திருமணம் நடத்த பணம் இல்லாமல் தவித்தார். பிச்சை எடுத்தாவது திருமணம் நடத்த வேண்டும் என பக்கத்து ஊரிலுள்ள கோயில்களுக்கு சென்று பிச்சை எடுத்தார்.
ஒருமுறை கோயில் ஒன்றுக்கு சென்ற இடத்தில் நீராட விரும்பி, குளக்கரையில் பணப்பையை வைத்தார். குளித்து விட்டு வந்த போது அதைக் காணவில்லை. அதிர்ச்சியான அவர், ” சுவாமி! நான் எடுப்பதே பிச்சை. அதுவும் திருடு போனால் என் மகளின் திருமணம் என்னாவது? காலம் முழுக்க அவள் கன்னியாகத் தான் வாழ வேண்டுமா” எனக் கண்ணீர் விட்டார். வெறுங்கையுடன் வீடு திரும்பினார். ஓராண்டு கழித்து அதே கோயிலுக்கு மீண்டும் பிச்சை எடுக்கச் சென்றார். கோயில் பூஜாரி, ”சுவாமி! தங்களை பார்த்தால் நல்ல மனிதராகத் தோன்றுகிறது. என் வீட்டில் ஒருவேளை சாப்பிட்டால் நானும், என் மனைவியும் மகிழ்ச்சி அடைவோம்” என்றார். சம்மதித்த நம்பூதிரியும் உடன் வந்தார். பூஜாரியின் மனைவி சாப்பாடு பரிமாறினார். திருப்தியாகச் சாப்பிட்ட நம்பூதிரி, கடந்த முறை வந்த போது, குளக்கரையில் பணப்பை காணாமல் போன விஷயத்தை அவர்களிடம் சொல்லி வருந்தினார்.
உடனே பூஜாரியின் மனைவி அடுப்படிக்குள் சென்று பை ஒன்றை எடுத்து வந்தார்.
” சுவாமி ! இது உங்களின் பையா என்று பாருங்கள்” எனக் கொடுத்தார். அதிர்ச்சியுடன் நம்பூதிரி,” ஆமாம். இது என்னுடையது தான். தங்களுக்கு எப்படி கிடைத்தது?” எனக் கேட்டார்.
” சுவாமி! நான் தினமும் பசுஞ்சாணம் எடுக்க குளக்கரைக்குச் செல்வேன். ஒருநாள் சாணம் அள்ளிய போது பணப்பை ஒன்று அதில் புதைந்து கிடந்தது. உரியவரிடம் ஒப்படைக்கும் வரை பாதுகாக்க முடிவு செய்தேன். கடவுள் அருளால் இந்த பை என் கையில் கிடைத்தது. இதோ...பணம் சரியாக இருக்கிறதா எனப் பாருங்கள்” எனக் கேட்டார்.
நம்பூதிரிக்கோ ஆனந்தம். ”அம்மா! உங்களுக்கு புத்திசாலியான குழந்தை பிறக்கும். நீண்டகாலம் இந்த மண்ணில் பேரும் புகழுமாக வாழும்” என ஆசியளித்தார். அந்த குழந்தையே பாமர மக்களை கவர்ந்த மலையாளக் கவிஞர் குஞ்சன் நம்பியார். தங்க மனம் படைத்த அந்த தாயைப் போல நல்லவர்களாக நாமும் வாழ்வோம்! |
|
|
|