|
இரு அணில்கள் நண்பர்களாக வாழ்ந்தன. அதில் ஒரு அணில் பக்தியுடன் கடவுளுக்கு நன்றி சொல்லும். இன்னொரு அணிலோ கேலி பேசும். பக்தியுள்ள அணில் அதை பொருட்படுத்தாது. ஒருநாள் உற்சாகமுடன் விளையாடும் போது பிடி நழுவி மரத்திலிருந்து பக்திமான் அணில் விழுந்தது. காயப்படவில்லை என்றாலும் உடம்பு எங்கும் வலித்தது.
ஆனாலும் கடவுளுக்கு நன்றி சொல்லியது. இதை பார்த்து நாத்திக அணில் ”எதுக்காக உன்னை கடவுள் தள்ளி விட்டாருன்னு சொல்லேன்” எனக் கிண்டல் செய்தது.
”கடவுள் துன்பத்திலும் கைவிட மாட்டார். எதற்கும் காரணம் இருக்கும்” என்றது. ”ஆமாம்! கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை என்பது இது தானோ” என்றது. உடல் வலியை விட கிண்டல் பேச்சால் மனம் அதிகம் வலித்தது.
கண்களை மூடி, ’கடவுளே! நான் ஏதும் தவறு செய்திருந்தால் மன்னியுங்கள்” என பிரார்த்தித்தது. அது கண் விழித்த போது கண்ட காட்சி குலை நடுங்க செய்தது. நாத்திக அணில் அருகில் பாம்பு ஒன்று நெருங்கியபடி வந்தது. ’உன் பக்கத்துல பாம்பு’ எனக் கத்தியும் பலனில்லை. கண் இமைக்கும் நேரத்தில் பாம்பு, நாத்திக அணிலைக் கவ்வியது. எது நடந்தாலும் அதை நம் நன்மைக்கு தான் கடவுள் செய்கிறார் என்பதை உணர்ந்தால் வேதனைக்கு இடம் ஏது? |
|
|
|