|
அசோக வனத்தில் இருந்த சீதையின் மனதில் குற்ற உணர்வு பாரமாக அழுத்தியது. "நான் ஏன் பொன்மானுக்கு ஆசைப்பட்டேன்! என வருந்தினாள். "எனக்கு அந்த பொன்மான் வேண்டும் என கேட்ட போது அவர் தயங்கியதில் காரணம் இருக்கிறது என்பதை ஏன் நான் உணராமல் போனேன்? இப்படி மோசமான விளைவு ஏற்படும் என அவர் ஊகித்தாரோ அல்லது நான் தான் அவசரப்பட்டு அவரை விரட்டினேனோ! "வினாச காலே விபரீத புத்தி என்பதன் அடையாளமாகி விட்டேனோ!” அசோக வனத்தில் இருந்த அரக்கியரைக் கண்டு குழப்பம் அடைந்தாள் சீதை. தன் முன் வைக்கப்பட்ட உணவை வெறுப்புடன் பார்த்தாள். அவநம்பிக்கையுடன் நடந்ததன் விளைவு தான் இந்த துன்பம் என்ற எண்ணியவளாய், தானே தீர்வும் காண வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். தன்னை மீட்டெடுக்க அவர் எத்தனை இன்னல்களை அனுபவிக்க வேண்டுமோ! அதற்கு ஈடாக தானும் தியாகம் செய்வது தான் முறையானது என மனதில் சொல்லிக் கொண்டாள். அதற்கு முதல் கட்டமாக உணவை ஏற்க மறுப்பது என முடிவு செய்தாள். ராம நாமத்தை மனமுருகி ஜபித்தாள். அதுவே பசியைப் போக்கி ராமன் வரும் வரை தன்னை காக்கும் என நம்பினாள். சீதையின் அவல நிலையைக் கண்ட இந்திரன் வருந்தினான். ராமர் போர் புரிந்து மீட்கும் வரை அவள் உயிர் தரித்திருக்க வேண்டியது அவசியம். ராவண வதம் நிகழ வேண்டிய காலகட்டத்தில் அதற்கு காரணமான சீதை, தன் உயிரைப் போக்கிட அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானித்தான். சீதை இணங்க வேண்டும் என்பதற்காக எந்த உத்தியையும் ராவணன் கையாள்வான். அவனது கொடுமை தாளாமல் உயிரை மாய்க்கவும் வாய்ப்புண்டு. ஆகவே அதற்கு இடம் தரக் கூடாது என கருதினான். .
உடனே சத்தியலோகம் சென்ற இந்திரன், பிரம்மனைச் சந்தித்து குவளையில் பாயாசம் வாங்கி வந்தான். அமிர்தத்திற்கு ஈடான அதை சாப்பிட்டால் பசி தோன்றாது. அதை குடித்தால் சீதை உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு. மேலும் உறக்கத்தை வரவழைக்கும் தேவதையையும் அழைத்துக் கொண்டு அசோக வனம் வந்தான்.
சோகப் பதுமையாகக் காட்சியளித்தாள் சீதை.
பொலிவுடன் இருக்கும் மகாலட்சுமியான சீதைக்கு இந்த கதி நேர்ந்ததே என வருந்தினான். மிதிலாபுரியில் இவள் ராஜகுமாரியாக வாழ்ந்த காலம் என்ன! அதன் பின் அயோத்தி அரண்மனையில் மருமகளாக வந்த பிறகு ராஜ வாழ்க்கை மேற்கொண்ட அழகு தான் என்ன! யார் கண்பட்டதோ, யார் என்ன சொன்னார்களோ, ராஜபோகம் இழந்து காட்டுக்கு வர நேர்ந்ததே! இப்போது ராவணனால் கடத்தப்பட்டு சிறைப்பட்டும் கிடக்கிறாளே!
ராவணனும் அரக்கிகள் மூலம் சீதையை பயமுறுத்தி பணிய வைக்க முயன்றான். தன் செல்வச் செழிப்பைக் காட்டி அவளைத் தன் பக்கம் இழுக்க நினைத்தான். அறுசுவை உணவுகளை அளித்து மனதை மாற்றப் பார்த்தான். ஆனால் எதற்கும் அவள் மசியவில்லையே! ராவணன் பலவாறாக உருவத்தை மாற்றிக்கொண்டு நாடகமாடினான். அதிலும் தோல்வியே கண்டான்.
இருந்தாலும் அபலையான சீதை, தன்னை மீட்க ராமன் வரத் தாமதமாவதை எண்ணி உயிரை மாய்க்கவும் துணிந்து விடுவாள். அந்நிலைக்கு போவதற்குள் காப்பாற்ற வேண்டும் என்றே இந்திரன் அசோக வனத்திற்கு வந்திருந்தான். இந்திரன் பற்றி தெரிந்தாலும் அவனைக் கண்டதும் "இதுவும் ராவணனின் ஒரு உத்தி தானோ எனக் குழம்பினாள்.
அவளது எண்ணத்தை அறிந்து, ""தாயே! பயப்பட வேண்டாம். நான் இந்திரன் தான். என் பாதம் தரையில் ஒட்டாமல் இருப்பதைப் பாருங்கள். தேவர்களைத் தவிர மற்றவருக்கு இந்நிலை ஏற்படாது என்பதைத் தாங்கள் அறிவீர்கள் தானே” என விளக்கம் அளித்தான். சீதையும் மனம் தெளிந்தாள்.
உற்சாகமான இந்திரன், ""தங்களுக்கு நேர்ந்த துரதிருஷ்டம் கண்டு வருந்துகிறேன். ஆனால் இத்துன்பம் நீண்டகாலம் நீடிக்காது. விரைவில் ராமர் தங்களை மீட்பார். அதுவரை உண்ணாமலும், உறங்காமலும் இருப்பது ஆகாது. தங்களுக்காக விசேஷ பாயாசம் கொண்டு வந்திருக்கிறேன். இதை குடித்தால் பசி, களைப்பு, மனச் சோர்வு ஏற்படாது. நீங்கள் உயிர் வாழாமல், ராவண வதம் நடந்தால் அதில் ராமனுக்கு பெருமை இல்லை. சுபாகு, கவந்தன் போல ராவண வதமும் சாதாரண அரக்கனைக் கொன்றது போலாகி விடும். போரில் வெற்றியடைந்த பின் சீதாராமராக அயோத்தியின் அரியாசனத்தை தாங்கள் அலங்கரிக்க வேண்டும். இதுவே நியாயம், தர்மம். ஆகவே அருள் கூர்ந்து பாயாசம் குடியுங்கள். ராமன் வருகைக்காக காத்திருங்கள்” என மனதில் பட்டதை தெரிவித்தான்.
அதைக் கேட்டு சீதை மகிழ்ந்தாள். அருகில் நின்ற பெண் தேவதையை காட்டிய இந்திரன், ""இவள் உறக்கம் அருளும் தேவதை. இவளின் உதவியால் நிம்மதியான உறக்கத்தையும் மேற்கொள்வீர்கள்” என்றான் இந்திரன்.தன் பொருட்டு இந்திரன் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்த சீதை பாயாசத்தை பருகினாள். ராமன் வந்து விரைவில் மீட்பான் என்ற எண்ணம் அவளுக்குள் வலுப்பெற்றது. இனி எந்த சூழ்நிலையும் தன்னை அசைக்காது என உறுதி கொண்டாள். வந்த பணி சிறப்பாக நிறைவேறியதைக் கண்டு இந்திரனும் மகிழ்ந்தான். |
|
|
|