|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » கர்மக்கணக்கும் தர்மக்கணக்கும் |
|
பக்தி கதைகள்
|
|
டாக்டர் நாதன் என்னைப் பார்க்க வந்திருந்தார். ""டாக்டர் ஷ்யாமளா என் கூட வேலை பாக்கற ஒரு மகப்பேறு மருத்துவர். அதீத திறமை. ரொம்ப நல்லவங்க. தேவையில்லாம ஸ்கேன் பண்றது, சாதாரணப் பிரசவத்தக் கூட சிசேரியனாக்கிக் காசு சம்பாதிக்கறதெல்லாம் அவங்களுக்கு தெரியாது. திடீர்னு எங்க டீனோட சொந்தக்காரப் பொண்ண சீஃப் (தலைமை) கைனகாலஜிஸ்டா நியமிச்சிட்டாங்க. அவங்க ஷ்யாமளாவை விட 15 வயசு சின்னவங்க. இனிமே ஷ்யாமளா அவங்க கீழதான் வேலை பாக்கணும்னு உத்தரவிட்டாரு டீன். ஷ்யாமளா வேலைய விட்டுட்டுத் தனியா மருத்துவமனை ஆரம்பிக்கலாம்னு முடிவு எடுத்தாங்க. ஆனா அம்பது வயசுக்கு மேல கடனை வாங்கி மருத்துவமனை கட்டி அதுல சம்பாதிக்கமுடியுமான்னு ஒரு குழப்பம். குறி சொல்ற ஒருத்தர்கிட்டக் கேட்டிருக்காங்க.”
""அவரு என்ன சொன்னாரு?” ""அதுக்கு முன்னால இன்னொரு விஷயம். அவங்க ஒரே பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு. இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம். மதுரையில நடக்கப்போகுது.”
""அதுக்கும் அவங்க பிரச்னைக்கும்...”
""சம்பந்தம் இருக்கு சார். "நீங்க ஆஸ்பத்திரி கட்டற பிரச்னைய அப்புறம் பார்க்கலாம். ஆனா உங்க மக கல்யாணத்துலயே நீங்க கலந்துக்க முடியுமான்னு சந்தேகமா இருக்கே ன்னு குறி சொல்றவர் சொன்னவுடன ஷ்யாமளா ஆடிப்போயிட்டாங்க. ஒரு வாரமா ஆஸ்பத்திரிக்கும் வரல. குடும்பமே சோகத்துல இருக்கு. அதான்..”
மேலும் பல விபரங்களைச் சொல்லி விட்டு விடை பெற்றார் டாக்டர் நாதன். அன்று மாலை அடுத்த தெருவில் உள்ள துணிக்கடையைக் கடந்த போது ஒரு நடுத்தர வயதுப் பெண் இரு கைகளிலும் நிறைய பைகளைத் துாக்கி வந்தாள்.
""கொஞ்சம் பிடிக்கறது?”
""ஊர்ல உள்ளவங்க பாரத்தை சுமக்க நான் என்ன போர்ட்டரா?”
""பின்ன? இது வரை நீ பார்க்காத பாரத்தை டாக்டர் ஷ்யாமளாவுக்காக சுமக்கிறாய்? எனக்காக மாட்டாயா? ஆனால் உன்னால் என் பாரத்தை சுமக்க முடியாதடா!”
வேறு யார் இப்படி பேசுவார்? பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன்.
""குறி சொல்பவன் சொன்னது உண்மையே. அவளால் தன் மகளின் திருமணத்தில் பங்கேற்க முடியாது. ""
""தாயே!”
""பதறாதே! அவள் நல்லவள். அவளுக்கு ஒரு நெருக்கடி வரும். அப்போது அவள் மனம் நிறைந்த அன்புடன் நடந்தால் எல்லாம் சுபமாக முடியும்.”
""இல்லாவிட்டால்..”
""விதி விட்ட வழி.”
இரண்டு வாரம் கடந்தது. அன்று மாலை தான் டாக்டர் ஷ்யாமளாவின் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி..
மாலையில் பூங்காவில் நடைப்பயிற்சி செய்தேன். நான்கு பேர் எதிரே வந்தனர்.
""சார் கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நடங்க. எங்க பாஸ் வராங்க.”
""”யோவ் உங்க பாஸ் எந்த தேசத்து மகாராணி?” குரலை உயர்த்தினேன்.
""எல்லா நாட்டுக்கும் தான்.” ... அந்த இனிய குரலே பச்சைப்புடவைக்காரியை அடையாளம் காட்டியது.
""இன்றும், நாளையும் அந்த மருத்துவரின் வாழ்வில் என்ன நடக்கிறது என பார்க்கலாம், வா.”
திருமண வரவேற்புக்காக டாக்டர் ஷ்யாமளாவின் மகளை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். ஷ்யாமளா மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசியபடி இருந்தாள். இன்னும் அரை மணி நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கி விடும். ஷ்யாமளாவின் அலைபேசி ஒலித்தது.
""டாக்டர் பெரிய ஆபத்து. முப்பதாம் நம்பர் வார்டுல இருந்த ப்ரியாவுக்கு வலி எடுத்துருச்சி.”
""அவளுக்கு அடுத்த வாரம் தானே ட்யூ?”
""ரொம்ப சிக்கலாயிடுச்சு டாக்டர். சீஃப் தான் பாத்துக்கிட்டு இருக்காங்க. அவங்களால முடியும்னு எனக்குத் தோணல... டாக்டர்.”
நர்ஸ் சீஃப் எனக் குறிப்பிட்டது டீனின் சொந்தக்காரப் பெண்ணை. அவள் பலமுறை ஷ்யாமளாவைக் காயப்படுத்தி அழ வைத்திருக்கிறாள். டீனின் உறவு என்பதால் எதிர்த்துப் பேச முடியவில்லை.
""ப்ரியா பெரிய தொழிலதிபரின் ஒரே மகள். விபரீதம் ஏதும் நடந்தால் ஆஸ்பத்திரியை உண்டு இல்லை என செய்து விடுவார். படட்டும்.. பட்டால்தான் புத்தி வரும்.
அடுத்த நிமிடமே ஷ்யாமளாவின் மனதில் அன்பு பொங்கியது. மருத்துவர்களின் அகங்கார மோதலில் உயிர் பலியாக வேண்டுமா?
""நான் என்ன செய்யட்டும்.. சிஸ்டர்?”
""நீங்க உடனே கிளம்பி வந்தாக் காப்பாத்தலாம். நான் ஆம்புலன்ஸ அனுப்பி வச்சிட்டேன். சைரன் அடிச்சிக்கிட்டே வந்தா சீக்கிரமா வந்துடலாம்.”
""நான் எப்படி இப்போ.... கிளம்பி.. ..”
""நீங்க உடனே கிளம்பலேன்னா ரெண்டு உசுரு பலியாயிடும். அப்புறம் காலம் பூரா நிம்மதியாத் தூங்கமுடியாது. ஆமா, சொல்லிட்டேன்.”
ஷ்யாமளா தன் மகளிடம் கேட்டாள்.
""தாராளமா போய்ட்டு வாங்கம்மா. நான் தப்பா நினைக்க மாட்டேன். ரெண்டு உயிரக் காப்பாத்தற திறமைய மீனாட்சி கொடுத்திருக்கா. எல்லாம் நல்லபடியா முடிஞ்சா அந்தக் குடும்பமே வாழ்த்தும்மா. அது எனக்கும் நல்ல வாழ்வைத் தரும்மா.”
மகளின் கன்னத்தில் முத்தமிட்டு புறப்பட்டாள் ஷ்யாமளா. ஆம்புலன்ஸ் நின்றிருந்தது.
நான்கு மணி நேரம் போராடி தாய், சேயைக் காப்பாற்றினாள்.
அவள் மண்டபத்திற்குத் திரும்பிய போது இரவு மணி பத்தரை. வரவேற்பு நிகழ்வு முடிந்திருந்தது. சாப்பிடக் கூட மனம் இல்லாமல் சோர்ந்து படுத்தாள்.
மறுநாள் திருமணம் சிறப்பாக நடந்தது. மகளின் கழுத்தில் தாலி ஏறியதும் ஷ்யாமளாவும், கணவரும் அட்சதை தூவினர். கண்களும், மனமும் நிறைந்திருந்தன.
ஷ்யாமளாவை நோக்கி கோட் சூட் அணிந்த ஒருவர் வந்தார். கைகூப்பி வணங்கினார்.
""நான் ராஜன். இண்டஸ்ட்ரியலிஸ்ட். நேத்து நீங்க காப்பாத்தின ப்ரியாவோட அப்பா. ப்ரியாவுக்கு ஏதும் ஆகியிருந்தா செத்திருப்பேம்மா. அதனால நீங்க மூணு உசுரைக் காப்பாத்திட்டீங்க”
""நீங்க ஆஸ்பத்திரி ஆரம்பிக்கிறதா சிஸ்டர் சொன்னாங்க. வருஷா வருஷம் நாங்க எங்க கம்பெனிகள்லருந்து கோடிக்கணக்குல தர்மகாரியம் செய்யறோம். சட்டப்படியும் செய்ய வேண்டியிருக்கு. உங்களுக்கு "பிரசவ மருத்துவமனை கட்டித்தர செலவை நாங்க ஏத்துக்கறோம். உங்ககிட்ட வர பாதி பேருக்கு இலவசமா சிகிச்சை செஞ்சாப் போதும். மீதி பேர்கிட்ட வழக்கமான கட்டணம் வாங்கலாம். இதுல உங்க வருமானம் குறையாம இருக்கற மாதிரி நாங்க பாத்துக்கிறோம்”
ராஜன் பேசிக் கொண்டே போனார். ஷ்யாமளாவுக்கு பேச்சே வரவில்லை. கண்ணீர் தான் வந்தது..
பக்கத்தில் இருந்த பச்சைப்புடவைக்காரியைக் கண்ணீர் மல்கப் பார்த்தேன். ""அவள் கர்மக் கணக்கை தர்மக் கணக்கு முறியடித்தது. அதனால் தான் அவளது பிரச்னை எல்லாம் நொடியில் தீர்ந்தது”
""தர்மக் கணக்கா?”
""ஆமப்பா..மனிதனின் தர்மக் கணக்கே அன்பு தான். அன்பு குறையும் போது தான் துன்பம் வருகிறது. தன்னை அவமானப்படுத்தியவள் துன்பப்படுகிறாள் எனக் கொக்கரிக்காமல் "ஐயோ இரண்டு உயிர்கள் தவிக்கிறதே என மகளின் திருமண வரவேற்பையும் தியாகம் செய்து விட்டு ஓடினாளே... அந்த அன்பில் அவளது கர்மக் கணக்கு எரிந்து சாம்பலானது”
""தாயே” எனக் கதறினேன். அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை.
இன்னும் வருவாள் தொடர்புக்கு: திச்ணூச்டூணிttடி@ஞ்ட்ச்டிடூ.ஞிணிட் |
|
|
|
|