|
திருமாலுக்கு மலர் கைங்கர்யம் செய்தவர் தொண்டரடி பொடியாழ்வார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை அடுத்த திருமண்டங்குடி என்ற ஊரில் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். இயற்பெயர் விப்ர நாராயணன். நந்தவனம் அமைத்து பூப்பறித்து மாலை கட்டி ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு சேவை செய்தார். திருச்சி உத்தமர் கோவிலில் தேவதேவி என்றொரு தாசி இருந்தாள். ஒருநாள் தோழியருடன் நந்தவனம் அருகில் நின்றிருந்தாள். அவளைக் கண்ணெடுத்தும் ஆழ்வார் பார்க்கவில்லை. அவமானம் ஏற்பட்டது தேவதேவிக்கு. தனக்கு அடிமை ஆக்குவேன் என சபதமிட்டாள். ஏழை போல் வேஷமிட்டு ஆழ்வாரிடம் சென்றாள். ""யார் அம்மா நீ?”எனக் கேட்க, ""சுவாமி! முற்பிறவியில் செய்த பாவத்தால் இப்போது தாசியாக பிறந்தேன். தாங்கள் அனுமதித்தால் தோட்டப்பணிகளைச் செய்து மாலை தொடுக்கிறேன்” என்றாள்.
ஆழ்வாரும் சம்மதித்தார்.
ஒருநாள் இரவு கனமழை பெய்யவே, குடிலுக்குள் இருந்த விப்ரநாரயணர், அவளை உள்ளே வர அனுமதித்தார். ஆழ்வாரின் இரக்கத்தை சாதகமாக்கி அவரைத் தன் வசப்படுத்தினாள்.
தன் சொந்த ஊரான உத்தமர் கோவிலுக்கு சிலகாலம் கழிந்ததும் அவள் ஓடினாள். பிரிவைத் தாங்காத ஆழ்வார், தேவதேவியின் வீட்டு வாசலில் காத்துக் கிடந்தார். ஆனால் அவளோ அவரை புறக்கணித்தாள்.
அதைக் கண்ட மகாலட்சுமிதாயார், முன்பு போல பக்தியில் ஆழ்வரை ஈடுபடச் செய்யும்படி பெருமாளை வேண்டினாள்.
கோயிலில் உள்ள தங்கத்தட்டை தாசியான தேவதேவியிடம் கொடுப்பதற்காக இளைஞன் போல மாறுவேடத்தில் புறப்பட்டார் ஸ்ரீரங்கநாதர். "நீ யார் என தேவதேவி விசாரித்தாள். " நந்தவன கைங்கர்யம் செய்யும் விப்ரநாராயணனே இதை தங்களிடம் கொடுக்கச் சொன்னார் என்றார். தன்னை சந்திக்குமாறு ஆழ்வாருக்கு அழைப்பு விடுத்தாள் தேவதேவி.
மறுநாள் காலையில் ஸ்ரீரங்கம் கோயில் தட்டு திருட்டு போனது தெரிய வந்தது. விசாரணையில் தேவதேவியிடம் தட்டு இருப்பது தெரிந்தது. அவளோ விப்ரநாராயணர் மூலம் கிடைத்ததாக தெரிவித்தாள்.
""ஏழையான என்னிடம் இது எப்படி இருக்கும்?” என மறுத்தார் ஆழ்வார். அன்றிரவு மன்னரின் கனவில் ரங்கநாதர் தோன்றி, "எல்லாம் என் விளையாட்டே” என்றார்.
தன் தவறை உணர்ந்த ஆழ்வார் அடியவர்களின் பாதம் பட்ட நீரை "ஸ்ரீபாத தீர்த்தம் என குடித்து தன்னை தூய்மைப் படுத்தினார். அதனால் "தொண்டரடிப் பொடியாழ்வார் என பெயர் பெற்றார். |
|
|
|