|
இலங்கை கடற்கரையில் காலடி வைத்த அனுமன் சுற்றுமுற்றும் பார்த்து திகைத்தான். இத்தனை வளமான பகுதியை இதற்கு முன் அவன் கண்டதில்லை. கிஷ்கிந்தைக்கும், இலங்கைக்கும் தான் எத்தனை வித்தியாசம்! இயற்கை வளத்துடன் கிஷ்கிந்தை இருக்கிறது என்றால், இலங்கையில் தங்கம், நவரத்தினத்தால் இழைத்த மாளிகைகளும், கூட கோபுரங்களும் ஜொலித்தன. இலங்கையைக் காக்கும் கேடயமாக இருந்த கோட்டைக்குள் நுழைவது எளிதல்ல என ஊகித்தான். அதுவும் பகலில் நுழைய வேண்டாம் எனக் கருதி இரவு வரை காத்திருந்தான்.
சீதை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான் அனுமன். தன் மனைவியுடன் நடந்த அந்தரங்க நிகழ்வுகளை ராமன் சொல்லிய போது, மிக கூச்சப்பட்டான் அனுமன். ஆமாம்..
அந்தளவுக்கு உணர்வு பூர்வமாக விவரித்தான் ராமன்.
இதில் பாராட்ட வேண்டியது என்னவென்றால், ராமன் சொன்னதை கேட்டானே தவிர, எந்நிலையிலும் அனுமன் உணர்ச்சி வசப்படவில்லை. பயணத்தின் போது கண்ட காட்சி போல எடுத்துக் கொண்டான்.
சீதை எப்படியிருப்பாள் என்பதை யூகிக்க முடியாவிட்டாலும், அவளைச் சுற்றி தெய்வீகம் நிறைந்திருக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது.
இரவு வந்ததும் கண்காணிப்பு இருக்காது என ஊகித்த அனுமன் மதில் மீது ஏறினான். அவனது கண்கள் பரபரத்தன. நேர்த்தியாக அமைந்த சாலைகளில் மெல்ல நடந்தான். இருபுறமும் அரண்மனை போல் இருந்த வீடுகளை வியந்தபடி கடந்தான். இவற்றில் சீதை எங்கு சிறை வைக்கப்பட்டிருப்பாள்? என யோசித்தான். திருடர் பயம் இல்லாததால், அங்கிருந்த வீடுகள் எல்லாம் திறந்தபடியே கிடந்தன.
மங்கலான ஒளியில் அந்தந்த வீடுகளில் உறங்கும் பெண்களை உற்று நோக்கினான். இவர்களில் யாராவது சீதையாக இருக்க மாட்டார்களா என ஏங்கினான். யார் கண்ணிலும் படாமல் இருக்க இருளும், நிழலும் துணை செய்தது. இப்படியே நடந்த அனுமன் ராவணனின் அரண்மனையை அடைந்தான். அங்கு காவல் கடுமையாக இருந்ததால் தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டு, காவலுக்கு மத்தியில் புகுந்தான். அரண்மனையில் ஆடை நழுவியது கூட தெரியாமல் பெண்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அந்தப்புரத்துக்கு வந்த அனுமன் முகமலர்ச்சியுடன் உறங்கிய ராவணனின் மனைவி மண்டோதரியைக் கண்டான். ராமன் வர்ணித்த சீதை இவள் தானோ என்ற சந்தேகம் வந்தது அனுமனுக்கு. பளிச்சென தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். ராமனைப் பிரிந்த சீதை இந்நிலையில் இருக்க வாய்ப்பில்லையே என்பது புரிந்தது.
ஒவ்வொரு பெண்ணையும் உறங்கும் நிலையில் இப்படி உற்றுப் பார்க்கிறோமே என்பது அனுமனுக்கு தோன்றவில்லை. அவனது ஒரே நோக்கம் சீதையை அடையாளம் காண்பது தான். அதற்கான முயற்சியில் தான் என்ன செய்கிறோம் என்பதை அவன் உணரவில்லை.
எங்கெல்லாமோ அலைந்த அனுமன், பொழுது புலரும் நேரத்தில் அசோக வனத்தை அடைந்தான். அரக்கியர் சூழ ஒரு பெண் அங்கு சோகத்தில் அமர்ந்திருந்தாள். கண்களில் பெருகிய நீர் கன்னத்தில் வழிந்தன. ஆனால் முகவாட்டத்தையும் மீறி தெய்வீக ஒளி அவளிடம் தெரிந்தது. அவள் நிர்ப்பந்திக்கப்படுவதும், விரக்தியால் உடல் மெலிந்திருப்பதும் புலப்பட்டது. வாடியிருக்கும் இவள் தான் சீதை என உணர்ந்தான். அனுமன். இதனை மேலும் உறுதிப்படுத்த அங்கிருந்த சிம்சுபா மரத்தின் மீது அமர்ந்தான்.
அடுத்தடுத்த நடந்த சம்பவங்கள் அவனைக் கோபம் கொள்ள வைத்தன. அரக்கியர் ராவணனைத் துதி பாடத் தொடங்கினர். அதைக் கேட்க சகிக்காத சீதை காதைப் பொத்தினாள். அனுமனுக்கு ஆவேசம் பொங்கியது.
சிறிது நேரத்தில் ராஜ அலங்காரத்துடன் அங்கு வந்த ராவணன் அட்டகாசமாகச் சிரித்தான். முகத்தைத் திருப்பிக் கொண்ட சீதை, "என் பார்வை உன் மீது எங்கு பட்டாலும் அந்த இடத்தை விட்டு நகர மறுக்கிறது என பிதற்றினான். அவளைக் கண்ணியமாக நடத்துவதாகவும், தனக்கு இணங்குவது தான் நல்லது என்றும் மிரட்டினான்.
""உன் மனைவியிடம் அன்பு செலுத்துவது தான் முறையானது. அரக்கர் குலத்தின் வழக்கப்படி ஒருத்திக்கு மேற்பட்ட பெண்கள் உனக்கு மனைவியராக இருக்கலாம். ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே மானுட இலக்கணம். அதை மாற்ற உனக்கு உரிமை இல்லை. நான் இங்கே சிறை வைக்கப்பட்டிருப்பது ராமனுக்குத் தெரிந்தால், உன்னைக் கொல்வது உறுதி. ஆகவே என்னை ஒப்படைத்து, உயிர் பிழைத்துக் கொள் ” என்றாள் சீதை.
இதைக் கேட்ட ராவணனுக்கு கோபம் எழுந்தது. அனுமனோ அவனது இயலாமையை ரசித்தான். கற்புக்கரசியான சீதையை இனியும் காக்க வைக்கக் கூடாது. விரைவில் காப்பாற்ற வழி காண வேண்டும் என தீர்மானித்தான். அதற்கு முன் ராவணனின் கொடுமை தாங்காமல் சீதை தன் உயிரை மாய்த்து விடக் கூடாதே என வருந்தினான். அதற்காக ஒரு உபாயத்தை மேற்கொண்டான்.
ராவணன் அங்கிருந்து சென்றதும், சீதையைச் சூழ்ந்திருந்த அரக்கியர் கண் அயர்ந்தனர். இதுவே சரியான தருணம் என அனுமன் மரத்தில் இருந்து குதித்தான். அனுமனைக் கண்ட சீதை இதுவும் ராவணன் சூழ்ச்சியோ என பயந்தாள். ஆனால் அவன் தான் வைத்திருந்த கணையாழியைக் காட்டியதும் ஆச்சரியப்பட்டாள். சீதையின் கண்களைக் கண்ட அனுமனுக்கு கண்ணீர் பெருகியது. கைகூப்பியபடி "ராம், ராம்... எனக் குரல் எழுப்பி விட்டு, ""அஞ்சாதீர்கள் அன்னையே! நான் ராமபிரானின் தூதன். தங்களைக் கண்டுபிடிக்கவே ராமனால் அனுப்பப்பட்டு இங்கு வந்துள்ளேன். இதோ தங்களின் திருமண வைபவத்தில் ஜனகர், மாப்பிள்ளை ராமருக்கு அணிவித்த ஆபரணம்....” என்றும் தெரிவித்தான்.
ஏதும் பேசாமல் சிலை போல சீதை ஆச்சரியமுடன் நின்றாள். அப்போது சீதையின் மனோதிடத்தை அறிய, ""அம்மா! தாங்கள் இங்கிருப்பதை ராமனிடம் சொல்லி, அதன் பின் அவர் போர் தொடுத்து தங்களை மீட்பதற்கு எவ்வளவு காலம் ஆகுமோ? கடலை ஒரே தாவாகத் தாவி கடந்து நான் இலங்கையை அடைந்தேன். என்னுடன் வர சம்மதித்தால் இப்போதே என் தோளில் சுமந்து சென்று ராமனிடம் தங்களைச் சேர்ப்பேன்...”
""நிறுத்து உன் பிதற்றலை,” என வெகுண்டு எழுந்தாள் சீதை. கோபத்தால் முகம் சிவந்தது. ""உனக்கும் அந்த ராவணனுக்கும் என்ன வேறுபாடு? அவனாவது என்னைத் தொடாமல் நான் இருந்த பர்ணசாலையைப் பெயர்த்து கொண்டு இலங்கைக்கு வந்தான். நீயோ என்னை தொட்டு சுமந்து செல்வதாக கூச்சம் இல்லாமல் சொல்கிறாயே!” என வெடித்தாள்.
""மன்னியுங்கள் தாயே! உணர்ச்சிவசப்பட்டு இப்படி சொல்லி விட்டேன். உடனடியாக தங்களை ராமனிடம் சேர்க்க வேண்டும் என்ற ஆவலில் சொன்ன வார்த்தைகள் இவை” என்றான் அனுமன்.
""ராமன் இலங்கைக்கு வந்து என்னை மீட்பது தான் முறை. அப்போது தான் ராமனின் மனைவி சீதை என இந்த உலகம் சொல்லும். உன் தயவில் நான் அங்கு வந்தால், "சீதையின் கணவர் ராமன் என அனைவரும் இளக்காரம் செய்வார்கள்.” என மனதில் இருப்பதை வெளிப்படுத்தினாள்.
மேலும் ""அனுமனே! நான் சொல்வதைக் கேள், இன்னும் ஒரு மாத காலம் தான் உயிர் தரித்திருப்பேன். இந்த மன உறுதியில் இருந்து பின்வாங்க மாட்டேன்.” என்றும் தெரிவித்தாள்.
இதையே அனுமனும் எதிர்பார்த்தான்! இனி அந்த ஒரு மாத காலத்திற்குள் சீதை தன் உயிரை மாய்க்க மாட்டாள் என்ற நிம்மதியுடன் அவளை வணங்கிப் புறப்பட்டான்.
|
|
|
|