|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அந்தச் சக்தியும் இந்தச் சக்தியும்! |
|
பக்தி கதைகள்
|
|
“அண்ணா உடனே பெரியாஸ்பத்திரிக்கு வர முடியுமா? ஒரு ஆளு சாகக் கெடக்கான்.“ அழைத்தவள் அரசு மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரிகிறாள். துாரத்துச் சொந்தம். எனக்காக மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்தாள். “அந்தாளுக்கு இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கு. உறவுன்னு யாருமே கெடையாதுண்ணா.நாப்பது வயசு தான்.” “அப்படி என்னம்மா வியாதி?” “எய்ட்ஸ். சின்ன வயசுல போடாத ஆட்டம் இல்ல. பொண்டாட்டி விட்டுட்டுப் போயிட்டா. அதுக்கப்பறம்தான் ஹெச். ஐ. வி இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க. இப்ப எய்ட்ஸ் நோய் வந்திருச்சி. “உனக்கு எப்படிம்மா தெரியும்?” “பத்து வருஷமா மருந்து வாங்க வரும். டாக்டர்கிட்ட சொல்லி மருந்து வாங்கிக் கொடுப்பேன். உயிர் போற நேரத்துல ஏதாவது நல்ல விஷயம் சொன்னீங்கன்னா...’’ “ஒழுக்கமில்லாத வாழ்க்கைக்கு இயறகை கொடுக்கற உச்சகட்ட தண்டனை தான் எய்ட்ஸ். இவனாக் கேட்டு வாங்கிக்கிட்டது. .இவன்கிட்ட நான் என்ன பேசறது?” “சாகக் கெடக்கற மனுஷனுக்குக் கருணை காட்டுங்கன்னு மடிப்பிச்சை கேக்கறேண்ணா.” “தப்பு செஞ்சவன்கிட்ட என்னால அன்பு காட்டமுடியாதும்மா. வரேன்..” விடுவிடுவென விலகி நடந்தேன். நடைபாதையில் ஒரு கட்டில் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு பெண் நோயாளி இருந்தாள். “அறிவிருக்கா உனக்கு? போற வழியில கட்டிலப் போட்டு வழிய மறிக்கறியே!” “தப்பான வழியில் சென்றால் வழியை மறிக்கத்தான் செய்வேன். சரியான வழியில் போ. நானே வழிநடத்திச் செல்கிறேன்.” வேறு யாரால் இப்படிப் பேச முடியும்? “சரியான வழி எதுவென்று...” “நான் காட்டுகிறேன். அங்கே நடக்கும் காட்சியைப் பார்” நகரின் பிரபலமான பட்டயக்கணக்காளரான பாலகுமாரின் முன் நறுங்கலாக ஒரு பெண் அமர்ந்திருந்தாள். “சி.ஏ., கஷ்டமான படிப்பும்மா. உன்னால முடியுமா?” “அது என் கனவு, வெறி சார். நிச்சயமா முடியும்.” ‘உன் குடும்பச் சூழலைப் பத்தி..” “மத்தியதரக் குடும்பம். அப்பா, அம்மா ரெண்டு பேரும் பட்டதாரிகள். அம்மாவுக்கு தனியார் கம்பெனில கிளார்க் வேலை. அவங்க சம்பளத்துல தான் வண்டி ஓடுது.” “அப்பா?” “நல்ல திறமையான தச்சு வேலைக்காரர். ஆனா குடிக்கு அடிமையாயிட்டாரு சார். ரெண்டு வருஷமா வேலை பாக்கல.’’ அவளின் நேர்மையும், உறுதியும் பாலகுமாருக்குப் பிடித்திருந்தது. ஈஸ்வரியைத் தன் அலுவலகத்தில் அப்ரெண்டிஸாகச் சேர்த்தார். கற்றுக் கொள்வதில் ஈஸ்வரி காட்டிய முனைப்பு பாலகுமாரை ஆச்சரியப்படுத்தியது. நான்கு மாதங்களில் எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்டாள். விரைவிலேயே ஈஸ்வரி மூலம் அந்த அலுவலகம் பல லட்சங்களைச் சம்பாதிக்கத் தொடங்கியது. ஓராண்டுக்குப் பின் பிரச்னை வெடித்தது. ஈஸ்வரியின் தந்தை மிக ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். ஈஸ்வரி பாலக்குமாரிடம் கதறினாள். அவர் தன் வாடிக்கையாளரான பிரபல மருத்துவர் ஒருவரிடம் உதவி கேட்டார். “ஆடிட்டர் சார்... உங்களுக்காக அவரை பெரிய ஆஸ்பத்திரில சேர்க்க ஏற்பாடு பண்றேன். கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைங்கிறதால என் டிப்பார்ட்மெண்ட் கீழ தான் வருது..” சொன்னபடியே மருத்துவர் செய்தார். ஆனால் அடுத்த பிரச்னை வெடித்தது. மருத்துவமனையிலிருந்து தப்பியோடினார் ஈஸ்வரியின் தந்தை. டாஸ்மாக் கடை வாசலில் அவரைக் கண்டுபிடித்தனர். . “நல்ல வேளையாக குடிக்கிறதுக்கு முன்னால பிடிச்சிட்டாங்க. அந்தக் கண்றாவிய சாப்ட்டிருந்தா நிச்சயம் செத்திருப்பாரு.” மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தாள் ஈஸ்வரியிடம், ‘‘உங்கப்பனைத் திருத்த முடியாதும்மா. போனாப் போறாருன்னு விட்ரு’’ என கத்தினார் மருத்துவர். “எப்படி சார் விட முடியும்?” “லிவர் பாதிக்கு மேலே டேமேஜ் ஆயிருச்சி! அந்தாளால குடிய விட முடியல.” “என்னாலயும் அவர நேசிக்காம இருக்க முடியல... சார்.” “தொடர்ந்து தப்பு செஞ்சிக்கிட்டே இருக்கறவர எதுக்கு நேசிக்கணும்?,” “தப்பு செஞ்சா நேசிக்கவே கூடாதுன்னா உலகத்துல நேசம் என்பதே இல்லாமப் போகும் சார்! யார் சார் தப்பு பண்ணல? அளவு வேணும்னா வித்தியாசப்படலாம். “நீங்க சொல்றபடி மீனாட்சி – அந்தப் பச்சைப்புடவைக்காரி – கடைப்பிடிச்சா நாம எல்லாரும் அழிஞ்சி போயிருவோம் சார்! தப்பு செய்யற குழந்தைங்கள அதிகமா நேசிக்கறவ தான் சார் உண்மையான தாய். அப்படி நேசிச்சா தான் அந்தக் குழந்தை தப்பு செய்யறத தடுக்க முடியும். எங்கப்பாவ நான் ஒரு குழந்தையாத் தான் சார் பாக்கறேன். “அவரத் துரத்தினா ரெண்டு நாள்ல குடிச்சு செத்துருவாரு! ஆனா இப்போ அவர் மேல அன்பு காட்டினா அவர் திருந்தி வாழ வாய்ப்பு இருக்குல்ல சார்? இந்த இருபது வயசுல நான் அப்பாவ இழக்கக் கூடாதுங்கறதுக்காகவாவது வைத்தியம் பண்ணுங்க சார். மீண்டும் தப்பு நடக்காம பாத்துக்கறேன் சார்’’ ஈஸ்வரி கைகூப்பினாள். மருத்துவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனதில் பல மாற்றங்கள் நடந்தேறிவிட்டன. “உங்கப்பாவ என்னோட நர்சிங் ஹோமுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் ராஜ வைத்தியம் பாக்கப் போறேன். சிகிச்சை முடிஞ்சதும் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கிறேம்மா.” “என்கிட்ட அந்த அளவுக்குக் காசு... “ பணமே தரவேண்டாம்மா. எல்லாச் செலவும் என்னோடது. நீ ஆடிட்டர் ஆபீசுக்குப் போயிட்டு வாம்மா. மனசுக்கு ஒரு மாறுதலா இருக்கும். சாயந்தரம் ஆஸ்பத்திரிக்கு வந்துரும்மா.” ஈஸ்வரி மருத்துவரைப் பார்த்துக் கண்ணீர் விட்டாள். மாலை ஐந்து மணிக்கு பாலகுமாரின் தணிக்கையாளர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. ஈஸ்வரி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள். “மேல இருக்கற கான்ஃபரன்ஸ் ரூமுக்கு ஆடிட்டர் வரச் சொன்னாரும்மா.” என செக்யூரிட்டி சொன்னார். ஈஸ்வரியும் ஓடினாள். பணியாளர்கள் அங்கே கூடியிருந்தனர். பாலகுமார் ஈஸ்வரியை வரவேற்றார். “இன்னிக்கு மதியம் டாக்டர் போன் பண்ணாரும்மா. உங்கப்பா திரும்பக் குடிக்கப் போயிட்டாரு. பிடிச்சிக்கிட்டு வரதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம். அந்தப் பொண்ணுகிட்டச் சொல்லி அப்பாவத் துரத்தி விடுன்னு சொல்லப் போறேன்னு சொன்னாரு. வேற வழியே இல்லையான்னு கெஞ்சினேன். எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை பண்றது தான் வழின்னு சொன்னாரு. உண்மையாச் சொன்னாரா, கேலியாச் சொன்னாரான்னு தெரியலம்மா. அதையும் பண்ணிப் பாத்திடலாமுன்னு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செஞ்சிட்டோம்மா. பச்சைப்புடவைக்காரியவிட்டா எனக்கு வேற தெய்வம் தெரியாதும்மா. அதுதான் அவகிட்ட...’’ அந்த அறையில் நடுநாயகமாக இருந்த மீனாட்சியின் படத்தைப் பார்த்து ஈஸ்வரி ஏன் விம்மி விம்மி அழுகிறாள் என அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை. மவுனமாக அழுது கொண்டிருந்தேன். “திரும்பி உள்ளே செல். உன்னை அழைத்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேள். சாகும் நிலையில் இருக்கும் அந்த நோயாளியைப் பார். அவனது கையைப் பிடித்துக் கொண்டு அவன் கண்களைப் பார்த்தபடி இதமாகப் பேசு. உனக்கு ஒன்றும் எய்ட்ஸ் தொற்றாது. ஆனால் வேறு ஒன்று தொற்றிக் கொள்ளும். ஆமாம் சொல்லி விட்டேன்.” “அது என்ன தாயே?” “அன்பு. தவறு செய்தவன் மீதும் தடங்கல் இன்றி பாயும் அன்பு என்னும் சக்தி உன்னிடம் ஒட்டிக் கொள்ளும். அந்தச் சக்தியும் இந்தச் சக்தியும் ஒன்றுதானடா.“ அன்னையை வணங்கி விட்டு உள்ளே ஓடினேன். |
|
|
|
|