|
அன்னை சீதையைத் தேடி வந்த அனுமன், இலங்கை நகர் எங்கும் அலைந்தான். இறுதியாக அசோகவனத்தில் அவள் சிறை வைக்கப்பட்டது கண்டு ஆறுதல் அடைந்தான். அதே நேரம் ராவணன் மீது கோபமும் எழுந்தது. அதனால் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினான். மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தான். கட்டிடங்களை இடித்துத் தரைமட்டமாக்கினான். சட்டென உயர்ந்து நின்று நகரமே அதிர அலறினான். மரங்களில் இருந்த பறவைகள் ஒலி தாக்குதலுக்கு உள்ளாகி மடிந்து வீழ்ந்தன. வீசியெறிந்த மரங்களால் குளங்களில் செம்மண் கலந்து நீர் செவ்வண்ணமாக மாறியது. இதைக் கண்ட அரக்கியர் அச்சம் அடைந்தனர். சீதையிடம், ‘‘யார் இவன்? உன்னிடம் பேசிக் கொண்டிருந்தானே? உனக்கு தெரியுமா? இத்தகைய பலவானை இதுவரை நாங்கள் பார்த்ததில்லையே!’’ எனக் கேட்டனர். ‘‘எனக்கு என்ன தெரியும்? மாயம் செய்வதில் நீங்கள் தான் வல்லவர்கள். உங்களில் யாராவது இந்த கோலத்தில் வந்திருக்கலாம்; பொன்மானாக வந்து என்னை ஏமாற்றிய மாரீசன் போல!’’ என்றாள் ஏதும் அறியாதவள் போல! இப்போது அவன் யார் எனத் தெரிந்து கொள்வதை விட அவனிடம் இருந்து தப்பிக்க வேண்டுமே என அரக்கியர் பயந்தனர். ஆனால் அனுமனின் பலம், வேகத்தை பார்த்த பின், சுய முயற்சியில் தப்பிக்க முடியாது என்பது புரிந்தது. ஆகவே ஓலமிட்டு ராவணனின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். நகரம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் அறிந்ததும், ‘கேவலம் ஒரு குரங்கா இப்படி செய்தது?’ என்ற அலட்சியமே ராவணனுக்கு எழுந்தது. குரங்குக்கான குறும்புத்தனத்தைக் கடந்து இப்படி பெரிய அளவில் அழிசாட்டியம் செய்கிறதே.. என வெகுண்டான். தன் படைகளை ஏவி விட்டு கொல்ல உத்தரவிட்டான். ஆனால் அவர்கள் யாரும் திரும்பி வரவில்லை. இறுதியாக தன் மகன் அட்சகுமாரனுக்கு வாய்ப்பு கொடுத்தான். ஆனால் அவனும் போரிட்டு இறக்கவே ராவணனுடைய பத்துத் தலைகளும் துடித்தன. ராவணனின் மற்றொரு மகனான இந்திரஜித், தன்னால் அந்தக் குரங்கை சிறை பிடிக்க முடியும் என உத்தரவாதம் அளித்தான். முதலில் வழக்கமான தாக்குதலை தொடங்கினான் இந்திரஜித். அவனது அம்புகளை எல்லாம் கையில் பிடித்த அனுமன் ஓடித்து வீசினான். இறுதியாக பிரம்மாஸ்திரத்தை ஏவவே, அது கை, கால்களை அசைக்க விடாமல் அனுமனைப் பிணைத்தது. திகைத்துப் போய் சிலையாக நின்றான். ராம பக்தியால் உள்ளமும், உடலும் உறுதியாக இருந்தும் அஸ்திரத்திற்கு நான் எப்படி கட்டுப்பட்டேன்?’ என தனக்குத் தானே கேள்வி கேட்டான் அனுமன். பளிச்சென காரணம் புரிந்தது. சீதையைத் தேடிய போது ஒவ்வொரு மாளிகையிலும் உள்ள பெண்களையும், ‘இவள் சீதையாக இருப்பாளோ’ என உற்றுப் பார்த்து தர்மத்தை மீறியது நினைவுக்கு வந்தது. அதாவது உறங்கும் பெண்ணை கணவர் தவிர்த்த மற்ற ஆண்கள் பார்ப்பது கூடாது என்பது தானே தர்மம். சீதையை அடையாளம் பார்க்கத் தான் என்றாலும், உற்று நோக்குவது அதர்மம் அல்லவா? அதற்கு தண்டனையாகவே அஸ்திரத்திற்கு கட்டுப்படும் நிலை ஏற்பட்டதை உணர்ந்தான். அதுவும் கூட நன்மையாகவே தோன்றியது. ராவணனிடம் நேரில் சென்று நியாயம் கேட்கலாமே? ஆனால் அடுத்தடுத்த சம்பவங்கள் அரக்கர் குணம் ஒருபோதும் மாறாது என்பதை உணர்த்தியது. ராமதுாதன் என்று சொல்லியும் கூட அனுமனுக்கு உட்கார ஆசனம் தராமல் அவமானப்படுத்தினான். அந்நிலையில் கடமை முடிந்தது என்பது போல அனுமனைப் பிணைத்திருந்த பிரம்மாஸ்திரம் அகன்றது. ராவணன் உள்ளிட்ட அனைவரும் அனுமனுக்கு என்ன தண்டனை கொடுப்பது? என ஆலோசித்தனர். ‘ குரங்குக்கு வாலில் தான் பலம். அதனால் வாலில் தீயிட்டு விரட்டலாம்’ என்றான் ராவணன். அதைக் கேட்டதும், ‘அழிவு காலம் நெருங்கினால் அறிவு செயல்படாது என்பதற்கு உதாரணமாகி விட்டானே ராவணன்’ எனத் தோன்றியது அனுமனுக்கு. ராவணனின் உத்தரவிட்டதும் அரக்கர்கள் ஆரவாரம் செய்தபடி அனுமனின் வாலைப் பிடித்து அதன் நுனியில் துணியைச் சுற்றி எண்ணெய் வார்த்து தீயை மூட்டினர். தனக்கு கொடுத்ததை பன்மடங்காகத் திருப்பிக் கொடுப்பது அனுமனுடைய பழக்கம். அதனால் வாலில் வைத்த தீயை பல இடங்களிலும் வைக்க வேண்டும் எனத் தீர்மானித்தான். தீயிடப்பட்ட வால் எதையெல்லாம் தீண்டியதோ அங்கெல்லாம் தீ பரவியது. எங்கும் புகை மண்டலமானது. பழிக்குப் பழி தீர்த்துக் கொண்ட அனுமனுக்கு சட்டென சீதையின் நினைவு வந்தது. அன்னை பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என பதைபதைத்தான். அசோக வனத்தை வட்டமிட்டு தீ அங்கே பரவாதபடி பார்த்துக் கொண்டான். வாயு புத்திரன் அல்லவா! பிறகு அன்னையின் உத்தரவைப் பெற்றுக் கொண்ட அனுமன், அவள் அடையாளமாக அளித்த சூளாமணியுடன் ராமனை நோக்கி விரைந்தான். |
|
|
|