|
மன்னன் ஒருவன் கிருஷ்ணர் மேல் தீவிர பக்தி கொண்டிருந்தான். எந்த வேலையையும் கிருஷ்ணனின் பெயரைச் சொல்லாமல் தொடங்க மாட்டான்.
என்னதான் கடவுள் நாமம் சொன்னாலும் முன்வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால், யாரானாலும் அதை அனுபவித்துதானே தீரவேண்டும்!
மன்னனுக்கும் அந்த நேரம் வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்தபடுக்கையாகக் கிடந்தான். அந்நிலையிலும் அவனுக்கு கிருஷ்ணரின் பெயர் மட்டும் மறக்கவில்லை.
""கிருஷ்ணா கிருஷ்ணா.. என் வாழ்வை முடித்துவிடு. உன்னோடு சேர்த்துக்கொள்” எனப்புலம்பிக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் முனிவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவரிடம், ""சுவாமி! நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் வாழ்வை முடிக்க விரும்புகிறேன். உயிர் பிரிய மறுக்கிறதே...” என அழுது புலம்பினான்.
முனிவர் அவனைத் தேற்றி, ""மன்னா! நீ அன்னதானம் செய்தாயா?” என்றார்.
""ஆமாம் சுவாமி! இப்போதும் கூட தினமும் பசியோடு வருவோர்க்கு வயிறார உணவு படைக்கிறேன்” என்றான்.
""இனிமேல் அப்படிச் செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு உன் உயிர் பிரிந்து விடும்” என்றார்.
""அய்யா அது மேலும் எனக்குப் பாவத்தைச் சேர்த்து அதனால் நோய் தீவிரமாகுமே?” என்று கேட்டான் மன்னன்.
""மன்னா! அரைகுறை உணவிட்டால் சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர் சாபத்தின் கடுமையால் இறந்து போவாய்” என்றார் முனிவர்.
அவர் சொன்னது பிடிக்காவிட்டாலும், முனிவர் சொல்கிறாரே என ஏற்றுக்கொண்ட மன்னன், அரை வயிற்றுக்கு உணவிட உத்தரவு போட்டான்.
சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும் மன்னனின் உயிர் பிரியவில்லை. வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில் முனிவர் மீண்டும் வந்தார்.
""சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே...” என்றான் மன்னன்.
""மன்னா! வரும் வழியில்தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் "அச்சுதா அனந்தா என்றெல்லாம் கிருஷ்ணரின் பெயரைச் சொல்லி அன்னம் இடுகின்றனர். பரந்தாமன் பெயர் சொன்னால் உயிர் பிரியாது. பகவான் அவர்களைக் கைவிடுவதில்லை. இனி நீ இறைவன் பெயரைச் சொல்வதையும் நிறுத்தச் சொல்லு நீயும் சொல்லாதே!” என்றார்.
ஆனால் மன்னன், ""என் கிருஷ்ணரின் பெயரைச் சொல்வதால், எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்துவிட்டுப் போகட்டும். அவர் பெயர் சொல்வதை மட்டும் நிறுத்தவே மாட்டேன்” என்றான் உறுதியாக.
அவனது மனஉறுதி கண்ட முனிவர் கிருஷ்ணராக மாறி அவனுக்குக் காட்சியளித்து அவனது பிணி நீக்கி குணமடையச் செய்தார்.
|
|
|
|