|
ஐயப்பன் பூஜை ஒரு இடத்தில் அதி விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. அதில் விசேஷ அம்சமாக ஐயப்பன் விக்ரஹத்தை யானை மீது இருத்தி ஊர்வலமாகக் கொண்டு வந்தார்கள்.
வழியெங்கும் விசேஷ வரவேற்பு. ஐயப்பனை வணங்கிய பக்தர்கள் எல்லாம், யானையையும் தொட்டுக் கும்பிட்டார்கள். சிலர் சுற்றி வந்து அதன் முன்னால் விழுந்து வணங்கினார்கள்.
ஒவ்வொன்றையும் பார்க்கப்பார்க்க யானைக்குப் பெருமை பிடிபடவில்லை. எல்லோரும் தன்னைக் கும்பிடுகிறார்கள். விசேஷமாக வணங்குகிறார்கள். தேங்காய், பழமெல்லாம் தருகிறார்கள் என்று ஆனந்தப்பட்டது. தனக்கு ஏதோ விசேஷத் தகுதி வந்துவிட்டதாக சந்தோஷப்பட்டது.
சுவாமி உலா வந்து முடிந்த பிறகு, யானை எங்கிருந்து வந்ததோ அங்கேயே அழைத்துப் போனார்கள். வழியில் மக்களைப் பார்த்தபோதெல்லாம் யானை அவர்கள் தன்னை வந்து கும்பிடப் போகிறார்கள்.... வாழை, தேங்காயெல்லாம் தரப்போகிறார்கள் என்றெல்லாம் நினைத்தது. அதனால், அவர்களை நெருங்கிச் சென்று முன்னே நின்றது. எல்லோரும் விலகியும் பயந்தும் சென்றார்களே தவிர, யாரும் அதைக் கும்பிடவில்லை.
ஏன் என்று புரியாத யானை, தவித்தது. தன்னுடைய விசேஷத் தகுதி பறிபோய்விட்டதோ என்று பதறியது. எனக்கு பூஜை செய்யுங்கள் என்று வழிமறிப்பதுபோல் சென்று நின்றது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பாகன், யானை ஏதோ முரண்டு பிடிக்கிறது என்று அங்குசத்தால் குத்தினான், அதட்டினான். அடங்கிப் பணிந்து ஒடுங்கிச் சென்றது யானை. சில நாட்கள் கழித்து அது வேறொரு கோயிலுக்குச் சென்று சுவாமி விக்ரஹத்தைச் சுமந் தபோது, பழையபடி அதை வணங்கினார்கள் பக்தர்கள். அப்போதுதான் அதற்குப் புரிந்தது. மதிப்பு, மரியாதை எல்லாமும் தனக்கு அல்ல, தன் மீது இருக்கும் கடவுளுக்கு என்று.
நாமும் அப்படித்தான் பக்தியோடு பகவானை மனதில் சுமக்கும்போது அவரே நமக்குக் கிடைக்கும் எல்லாப் பெருமைகளுக்கும் காரணமாக இருக்கிறார். அவரை இறக்கி வைக்கும்போதே நாம் எல்லாவற்றையும் இழக்கிறோம். இதை உணர்ந்து அகத்தில் இறைவனை இருத்தினாலே போதும், எல்லா நன்மைகளும் தாமாகவே நம்மை வந்து சேரும். |
|
|
|