Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » விடுதலை கொடு விபீஷணா!
 
பக்தி கதைகள்
விடுதலை கொடு விபீஷணா!

விபீஷணனின் மகள் திரிசடையை அசோகவனத்தில் இருந்த சீதையின் பணியாளாக நியமித்தான் ராவணன். ஆனால்  பெரியப்பாவான ராவணனின் போக்கு அவளுக்கு பிடிக்கவில்லை. ராவணன் பிடியிலிருந்து சீதையை விடுவிப்பது குறித்து சிந்தித்தாள். ஒருநாள் இது பற்றி தந்தை விபீஷணனிடம் ஆலோசித்தாள். அப்போது மாளிகையின் வாசலில் யாரோ நிற்பது போல நிழல் தெரிந்தது.
அதிர்ச்சியுடன் பார்த்தான் விபீஷணன். அங்கு கும்பகர்ணன் நின்றிருந்தான்.
மகளுடன் தான் பேசிய ரகசியத்தை கேட்டிருப்பானோ? என பயந்தான் விபீஷணன்.
 ‘‘விபீஷணா’’ என அழைத்த கும்பகர்ணனின் குரலிலும் கடுமை தெரிந்தது!
 ‘‘ தம்பி...சீதையை அபகரித்ததை எதிர்ப்பவன் நீ! நானும் அதற்குக் கண்டனம் தெரிவித்தேன். ஆனால் ராவணன் சற்றும் திருந்துவதாக தெரியவில்லை. கருத்தை தெரிவித்த நிலையில் என் கடமை நிறைவேறியதாகவே கருதுகிறேன். இனி நான் அமைதியாக இருப்பதே சரி’’ என்றான் கும்பகர்ணன்.
‘‘அதற்காக ராவணன் தர்மத்தை மீறலாமா? குற்றம் புரிபவரை இடித்துச் சொல்வது  நம் கடமை அல்லவா?’’ எனக் கேட்டான் விபீஷணன்.
‘‘உண்மை தான். இருந்தாலும் ஏற்க மறுக்கும் போது நம்மால் என்ன செய்ய முடியும்? அர்க்கர் இனத்தில் பிறரது மனைவியை விரும்புவதில் தவறில்லையே?’’
‘‘ நம் இனத்துக்குள் என்றால் சரி. மனிதர், தேவர் போன்ற மற்ற இனத்தவர் மீது உரிமை கொண்டாடலாமா? சரி, அரக்கரான நாமும் ஏன் திருந்தக் கூடாது? நல்லது, கெட்டது தெரிந்த பின்னும் தீமையில் ஈடுபடலாமா? அப்படி ஈடுபட்டாலும் அதை நாம் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும்?’’
‘‘அரக்கர் குல இயல்பை மீறி வாழ்பவன் நீ தான். மனைவியை இழந்த நிலையிலும், மறுமணம் பற்றி துளியும் நீ நினைக்கவில்லை. உன் ஒருவனால் மட்டுமே மொத்த அரக்கர் குலத்தின் இயல்பையே மாற்ற முடியாது? நீரில் வரைந்த கோலம் போன்றது வாழ்க்கை. அதை நிரந்தரம் என எண்ணுவது எத்தனை முட்டாள்தனம்’’
‘‘இதை ராவணனுக்கு ஏன் நீ சொல்லக் கூடாது? அவமானம் அடைந்து கடைசியில் அழிவது கேவலமானது இல்லையா?’’
‘‘ராவணனைப் பொறுத்தவரை காலம் கடந்து விட்டது. வாழ்வின் நிலை இல்லாத தன்மையை உனக்காகத் தான் இப்போது  சொன்னேன். சகோதர ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய முக்கிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். தவறு செய்ததற்காக ராவணனைப் புறக்கணிப்பது சரியல்ல. ராவணன் மீது காட்டும் எதிர்ப்பு, உன்னைத் துரோகப் பட்டியலில் சேர்த்து விடும். இறுதி வரை சகோதரர்களான நாம் ஒற்றுமையுடன் இருப்போம்’’
விபீஷணன் மேலும் வாக்குவாதம் செய்ய விரும்பாமல், ‘‘கும்பகர்ணா! என்னை மன்னித்து விடு. அதர்மத்தை நான் ஏற்க மாட்டேன்’’ என வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தான்,.  
‘‘இப்படி சொல்ல உனக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அண்ணனின் உறவை துண்டித்து செல்வது நியாயமா?  எதிரியான ராமனிடம் அடைக்கலம் செல்லத் தான் வேண்டுமா?’’  என்றான் கும்பகர்ணன்.
‘‘என்னால் ராவணனுக்குக் கொடுக்க முடிந்த தண்டனை இதுவே. நான் ஒரு தம்பியாக இந்த முடிவுக்கு வரவில்லை. தர்மத்தின் பக்கம் நின்று எடுத்த முடிவு இது. நீங்கள் ராவணன் பக்கம் இருக்க தீர்மானித்தது போல, நான் அவனை விட்டு விலகத் தீர்மானித்திருக்கிறேன்’’ என்றான் விபீஷணன்.
‘இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நல்ல வேளையாக என்னையும் உன்னுடன் வரச் சொல்லவில்லை. அதுவரைக்கும் நன்றி,’’ என்று சொல்லிய கும்பகர்ணனுக்கு கண்ணீ்ர் பெருகியது.
சீதை கடத்தி வரப்பட்ட நாளில், இலங்கையை விட்டு  தர்ம தேவதை விடைபெற்றதை கும்பகர்ணன் அறிந்து தான் இருந்தான்.
 ‘‘விபீஷணா, என் கண்முன்னே இலங்கையின் எதிர்காலமே தெரிகிறது. ராவணனின் புகழ், வீரம் எல்லாம் நகைப்புக்கு இடமாகப் போகப் போகிறது. நம் பாரம்பரியம் கேலிக்குரியதாகப் போகிறது. இதையும் விட நம் சந்ததி என்று சொல்லிக் கொள்ள ஒருவராவது மிஞ்சுவாரா என பயமும் எழுகிறது’’ என வருந்தினான் கும்பகர்ணன்.
‘‘ராமன் கருணை மிக்கவன் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் ராவணனி்ன் நண்பனான வாலியையே வீழ்த்தியவன் ராமன். கோபம் மிகுந்த அவனது அம்புகளுக்கு எத்தனை பேர் இரையாகப் போகிறோமோ தெரியவில்லையே?’’ என வேதனைப்பட்டான் விபீஷணன்.
‘‘நம் அரக்க இனம் அழிவது உறுதி. இதை உணர்ந்து தானோ நீ மட்டும் ராமனை சரணடைய தீர்மானித்தாயோ?’’ என்றான்  கும்பகர்ணன்.
‘‘என்ன சொல்கிறாய்?’’ எனக் குழம்பினான் விபீஷணன்.
‘‘ஆமாம், தம்பி. நீ ஒருவனாவது மிஞ்சிட இது தான் சரியான வழி. உன் செயலால்  நம் இனத்தின் பாவமெல்லாம் நீங்கும்.  நல்ல வேளையாக நீ எடுத்த முடிவு, எங்களை எல்லாம் கரையேற்றும் என்றே தோன்றுகிறது...’’
விபீஷணனின் குழப்பம் மேலும் அதிகமானது.  
‘‘ஆமாம் விபீஷணா! நம் அரக்கர் குலம் எத்தனையோ பாவங்களில் ஈடுபட்டிருந்தாலும், அவற்றில் சீதையை அபகரித்த பாவமே எல்லாவற்றையும் விட கொடியதாகி விட்டது. இதற்கு விமோசனம் கிடைப்பது சந்தேகமே! தெரிந்தே பிறருக்குத் தீங்கு செய்யும் ஆன்மாக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டாமா? நாங்கள் நற்கதி அடைவது உன் கையில் தான் இருக்கிறது விபீஷணா.... எஞ்சியவர் யாருமில்லை என்ற அவல நிலையை விட, ஒருவனாவது மிஞ்சியிருந்து ஈமச்சடங்கு செய்ய முடிந்தால் அதுவே நம் வம்சத்தின் பேறு தானே? நீ எடுத்த முடிவின் படி ராமனுடன் சேர்ந்திடு. ராவணனை வீழ்த்த ஆலோசனை சொல். எல்லாம் முடிந்த பிறகு, ராமனிடம் அனுமதி பெற்று எங்களுக்கெல்லாம் ஈமச்சடங்கு செய். அதற்காகவாவது நீ ஒருவன் மிஞ்சியிருக்க வேண்டியது அவசியம் தான். இதுவும் கடவுளின் திருவுள்ளம் போலும்’’ என்ற கும்பகர்ணனுக்கு கண்ணீர் பெருகியது.
அண்ணனின் சம்மதத்துடன் ராமனிடம் சரணடையத் தயாரானான் விபீஷணன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar