|
மகாவிஷ்ணுவின் திருநாமங்களில் கோவிந்த நாமம் புனிதமானது. கோவிந்தா என அழைத்த திரவுபதியின் மானம் காக்க ஓடோடி வந்தார் கிருஷ்ணர். திருப்பதியில் எங்கும் கேட்பது கோவிந்த நாமம் தான்.
ஒருநாள் ஏழுமலையானை தரிசிக்க வந்த பெரியவர் ஒருவர் அங்குள்ள குளத்தில் நீராட வந்தார். அப்போது முடிகாணிக்கை செலுத்திய ஒருவர் நீராட குளத்திற்குள் மூழ்கி எழுந்தபடி, ‘கோஹிந்தா! கோபாலா!’ என சப்தமாகச் சொல்லி வணங்கினார். ‘கோவிந்தா’ என்றே சொல்ல வேண்டும் என தடுக்க வாயெடுத்தார் பெரியவர். அதற்குள் பக்தர் உரத்த குரலில், ‘‘அப்பனே! கோஹிந்தா! வருடந்தோறும் முடிக் காணிக்கை செலுத்தறதா சொன்னது போலவே, இந்த வருஷமும் செலுத்திட்டேன். கடந்த காலம் போலவே, இப்போதும் சந்தோஷமா வாழ அருள் புரியணும்’’ என்றார். உடனே பெரியவருக்குள் சிந்தனை எழுந்தது. ‘போன வருஷமும் ‘கோஹிந்தா! கோபாலா! என்று தானே இவர் அழைத்திருப்பார். அதற்கு ஏழுமலையான் ஒன்றும் கோபப்படவில்லையே! போன வருஷம் போலவே, இந்த வருஷமும் அருள் செய்யணும் என்று தானே இவர் வேண்டிக் கொண்டார்! குழந்தையின் மழலை கேட்டு மகிழும் தாய் போல, தவறான உச்சரிப்பு கூட கடவுளுக்கு சந்தோஷம் தரும் போலும்’ என்ற முடிவுக்கு வந்தார். ஏழுமலையானின் கருணையை என்னவென்று சொல்வது? |
|
|
|