|
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தினார் ஆசிரியர். “வருங்காலத்தில் நீங்கள் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்? சொல்லுங்கள்’’ எனக் கேட்டார். மாணவர்களும் வரிசையாக எழுந்து, ‘மருத்துவர், இன்ஜினியர், பாடகர், ஆசிரியர்’ என ஆளுக்கு ஒன்றைக் கூறினர். ஒருவன் மட்டும், ‘நான் குதிரை வண்டி ஓட்டுபவனாக ஆவேன்” என்றான். அனைவரும் சிரித்தனர். அந்த மாணவன் வருத்தமுடன் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்றான். மகனின் சோர்வு கண்ட தாய் காரணம் கேட்டாள். நடந்ததைக் கூறினான். அவனது முதுகில் தட்டிக் கொடுத்த தாய் அங்கிருந்த கிருஷ்ணர் படத்தைக் காட்டினாள். கிருஷ்ணர் கீதோபதேசம் செய்யும் சித்திரம் அது. ‘‘குதிரை வண்டி ஓட்ட விரும்பினால் கிருஷ்ணர் போல நீயும் சிறந்த தேரோட்டியாக ஆக வேண்டும்’’ என வாழ்த்தினாள். நரேந்திரன் என்னும் அச்சிறுவனே பிற்காலத்தில் வீரத்துறவி விவேகானந்தராக விளங்கினார். செய்யும் தொழிலில் இருக்கும் மேன்மையை மட்டும் சிந்திக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய உண்மை! இந்த நல்ல செய்தியை ஒவ்வொரு பெற்றோரும் அறிந்திருப்பது அவசியம்.
|
|
|
|