|
சிவகங்கைக்கு அருகிலுள்ள காளையார்கோவிலில் அருள்புரியும் சிவனுக்கு புதிய தேர் செய்ய மருதுபாண்டிய மன்னர் உத்தரவிட்டார். தச்சர்கள் மரம் தேடி அலைந்தனர். சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட சிவத்தலமான திருபுவனம் பூவணநாதசுவாமி கோயிலில் பருத்த மரம் ஒன்று இருந்தது. அதனை வெட்டி வேலையைத் தொடங்க முடிவெடுத்தனர். அதற்காக ஒருநாள் காலையில் கூலியாட்கள் வந்தர். ஆனால் அக்கோயில் அர்ச்சகருக்கு நிழல் தரும் மரத்தை வெட்ட விருப்பமில்லை. ஆவேசப்பட்ட அர்ச்சகர், ‘‘மன்னரின் மீது ஆணை! இந்த மருத மரத்தை வெட்ட யாரும் நெருங்காதீர்கள்!” எனக் கத்தினார். பணியாளர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர். விஷயம் அறிந்த மன்னருக்கு கோபம் வந்தது. ‘‘என் கட்டளையை மீறும் அதிகாரம் அர்ச்சகருக்கு எப்படி வந்தது?” என திருப்புவனம் விரைந்தார். ‘‘வணக்கம் மன்னா! உங்களைப் போலவே இந்த மருத மரமும் எங்களுக்குக் குளிர்ச்சி தருகிறது. நீங்களும் மருது. இந்த மரமும் மருது. இதைக் காணும் போதெல்லாம் உங்களின் நல்லாட்சியே எங்களின் நினைவுக்கு வருகிறது. அதனால் வெட்ட அனுமதிக்காதீர்கள்’’ என்று சொல்லி வணங்கினார். அர்ச்சகரின் நல்ல மனதை அறிந்த மன்னர் வாழ்த்தி பரிசளித்தார். நல்ல விஷயத்துக்கு கூட மரங்களை வெட்டுவதில் கட்டுப்பாட்டைக் கடைபிடித்த உண்மையை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
|
|
|
|