|
ராமாவதாரத்தில் எத்தனையோ பொருள்கள் இருக்க. பரதன் ஏன் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி புரிந்தார்?
வைகுண்டத்தில் ஒரு நாள் திருமால் வழக்கத்துக்கு மாறாக ஒரு காரியம் செய்தார். தனதுபாதுகையை பள்ளியறையில் விட்டுவிட்டு பாம்பணையில் துயில் கொண்டார். உடனே அவரது திருமுடிக்கு கோபம் வந்தது. பாதுகையைப் பார்த்து திருமுடி சத்தம் போட ஆரம்பித்தது. ""ஏ பாதுகையே... கண்ட கண்ட இடமெல்லாம் மிதிக்கும் நீ, இப்படி படுக்கை அறைக்குள்ளே வரலாமா? போ வெளியே... ” என்று கத்தியது.
பாதுகை அதற்குப் பணிவாக பதில் சொல்லியது. ""திருமுடியே நீ சொல்வது சரிதான். இருந்தாலும் நானாக இந்த இடத்துக்கு வரவில்லை. பகவானுடைய திருவடிதான் என்னை இங்கே கொண்டுவந்து விட்டது. என்னை ஏன் வீணாகக் கோபப்படுகிறாய்? என்றது.
இதைக் கேட்டதும் திருமுடிக்கு கோபம் இன்னும் அதிகமானது, ""பாதுகையே... நான் பெருமாளுடைய தலைக்கு மேலே இருக்கக்கூடிய தகுதி உடையவன். என்னோடு சரிக்குச் சரியாக பேசுவதற்குக்கூட உனக்குத் தகுதி கிடையாது. அதனால் இங்கே இருக்காதே... சீக்கிரமாக வெளியில் செல்” என்றது.
""முடியே.... எதற்கு இப்படி வீணாகப் பெருமை பேசுகிறாய்? எனக்கு என்று தனியாக ஒரு செயலும் கிடையாது. நான் எப்பவும் ஐயன் திருவடியை ஒட்டிக் கொண்டிருப்பவன். அந்தப் பாதத்தை நம்பினவர்க்கு நல்லது நடக்கும். அடியார்கள் எல்லோரும் அடியைத் தானே விரும்புகிறார்கள்?!” என்றது.
இவ்வளவு நேரமும் இந்த விவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கும் சக்கரமும் திருமுடி பக்கம் சேர்ந்துகொண்டு பாதுகையை விரட்ட ஆம்பித்தன.
""உனக்கென்ன இவ்வளவு திமிர்? பேசாமல் வாயை மூடிக்கொண்டு வெளியே போ” என்று இரண்டும் கத்தின.
பாதுகையின் நிலைமை பரிதாபமாக இருந்தது. பாதுகை, நாராயணனைப் பார்த்து, ""கருணைக்கடலே... நீங்கள் இப்படி என்னை உள்ளே கொண்டுவந்து விட்டு விட்டு, இவர்களை இப்படிப் பேசச் செய்வது சரியா?” என்று கேட்டது.
திருமால் உடனே, ""பாதுகையே... நீ கவலைப் படாதே ” என்று சொல்லிவிட்டு, திருமுடியிடம், ""நீ பாதுகையை அவமானப்படுத்தி விட்டாய். அதனால் அடுத்துவரும் ராமாவதாரத்தில் 14 வருடம் இந்த பாதுகை அரியாசனத்தின் மேலே இருக்கக் கடவது, சங்கு, சக்கரமே... நீங்கள் இரண்டு பேரும் என முன்னிலையிலேயே பாதுகையை பழித்துப் பேசி உள்ளீர்கள். அதனால் நீங்கள் இருவரும் ராமாவதாரத்தில் பரதன், சத்ருக்கனனாகப் பிறந்து 14 வருடங்கள் இந்தப் பாதுகையை வழிபட்டு வர வேண்டும்” என்று திருமால் கூறி விட்டார்.
அதனால் தான் பரதன் பாதுகைக்கு முடிசூட்டி அரசாண்டு வந்தார். இதுதான், "கொன்றைவேந்தனில் வரும், "கீழோராயினும் தாழவுரை என்பதற்கான விளக்கம்.
நம்மைவிட வயதில், வசதியில், பதவியில் குறைந்தவர்களை இகழக்கூடாது. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தகுந்த சன்மானம் கண்டிப்பாக ஒரு நாள் கிடைக்கும். நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். பிறர் மனதை புண்படுத்தாமல் பேச வேண்டும் என்பதை ராமர் தெளிவுபடுத்திய கதை இது.
|
|
|
|