|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அர்ச்சகருக்கு நேர்ந்த கொடுமை |
|
பக்தி கதைகள்
|
|
சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் மாகாளியம்மன் கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். அக்கோயிலின் அர்ச்சகர் அம்மனுக்குச் செய்யும் அலங்காரத்தைப் பார்க்கவே ஆயிரம் கண்கள் வேண்டும். அன்னையின் 108 திருநாமங்களை அவர் ராகம் போட்டுச் சொல்லும் அழகே தனி. அன்று கோயிலை விட்டு வெளியேறிய போது அர்ச்சகர் என்னிடம், ‘‘அண்ணா! அம்பாளுக்குத் தொண்டு செய்யறது தாண்ணா என் மொத்த வாழ்க்கையும். கல்யாணம் கூட செஞ்சிக்கல. அப்படி இருந்தும் அவ இப்படி அம்போன்னு கைவிடலாமா?’’ ‘‘என்னாச்சு?’’ ‘‘ரொம்ப நாளா சர்க்கரை வியாதி இருக்குண்ணா. மருந்து சாப்பிடுறேன். சில நாள் மறந்துருவேன். சாப்பாடு விஷயத்துல கட்டுப்பாடா இருக்க முடியல. பிரசாதம் தானே சாப்பிடறோம் என்ன ஆயிடப் போகுதுன்னு அலட்சியமா இருந்துட்டேன். இப்போ கால்ல பிரச்னை பெரிசாகி வலது காலையே எடுக்கணும்னு சொல்லிட்டாண்ணா. கால் இல்லாம எப்படி அர்ச்சனை பண்ணுவேன்? அலங்காரம் பண்ணுவேன்? பச்சைப்புடவைக்காரி ஏன் இந்தக் கொடுமையச் செஞ்சிருக்கான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கண்ணா.’’ அவரிடம் ஆறுதலாக பேசி விட்டுக் கிளம்பினேன். அன்றிரவு ரயிலில் மதுரைக்குப் பயணம். நான் இருந்த முதல் வகுப்புப் பெட்டியில் யாரும் இல்லை. “சார் டிக்கெட்” இனிய பெண் குரல் கேட்டது. பெண் டிக்கட் பரிசோதகர். கையிலிருந்த சீட்டைக் காண்பித்தேன். ‘‘என் மேல் வருத்தமா?’’ அந்தத் தொனியே அன்னையை அடையாளம் காட்டியது. இருக்கையில் அமரச் செய்து நான் காலடியில் அமர்ந்தேன். “நீங்கள் என்னைக் கொன்றாலும் வருத்தம் இருக்காது தாயே! நான் உங்கள் கொத்தடிமை என்பதை மறந்துவிட்டீர்களா?” “ அந்த அர்ச்சகன் காலை இழக்கப் போகிறானே என வருத்தம் இருக்கிறதோ?” “தாயே...வருத்தம் இல்லை. அது பயம்.” “இதில் பயப்பட என்னப்பா இருக்கிறது?” “தாயே! அவர் வேளை தவறாமல் பூஜை செய்பவர். நேர்த்தியாக அலங்காரம் செய்பவர். எப்போதும் உங்கள் சன்னதியிலேயே இருக்கும் உத்தமர். அவருக்கே இந்த கதியென்றால்....சுக போகங்களில் உழலும் என் போன்ற பாவிகளின் கதியை நினைத்தேன். பயந்து விட்டேன்.” அன்னை அழகாகச் சிரித்தாள். ‘‘அவன் துாயவன். நன்றாக பூஜையும் அலங்காரமும் செய்கிறான். ஆனால் அவனுக்கு என் மீது அன்பில்லை’’ “வாய்க்கு வாய் உங்கள் பெயரைத் தான் சொல்கிறார். கோயில், பூஜை, அர்ச்சனை...இதைத் தாண்டி வேறு எதையும் பேசியதில்லை. அவர் மீது அபாண்டமாக பழி சொல்கிறீர்களே!?” “பூஜை செய்யும் போது யாராவது குறுக்கிட்டால் கன்னா பின்னா வென்று கத்துகிறான். நைவேத்யம் செய்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போகும் போது யாராவது கேட்டால் திட்டுகிறான். அன்று ஒரு பானை நிறைய பொங்கல் கோயிலுக்குள் இருந்தது. ஏழைச் சிறுமி ஒருத்தி பிரசாதம் கேட்டாள். “இதெல்லாம் கட்டளைக்காராளுக்குத் தான். உனக்குக் கிடையாது போ!” என விரட்டினான். அவள் அழுதபோது எனக்கு வலித்தது.’’ “தாயே! அவருக்கு உங்கள் மீது அபரிமிதமான அன்பு இருக்கிறது. வழிபாட்டின் போது குறுக்கீடு செய்தால் கோபம் வருவது இயற்கை தானே! யாருக்கோ வைத்திருந்த பிரசாதத்தைக் கொடுக்க மறுத்ததால் அவருக்கு அன்பில்லை என சொல்ல முடியுமா என்ன?” “நான் சொல்கிறேன் – அவன் மனதில் அன்பில்லை.” அவளின் அன்பு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். “வரும் சனிக்கிழமை மீனாட்சி கோயிலுக்கு வா. உண்மையைப் புரிய வைக்கிறேன்.” அன்னை மறைந்தாள். சனிக்கிழமை. கோயிலில் சிறப்புத் தரிசன வரிசையில் ஆளே இல்லை. சீட்டை வாங்கிக்கொண்டு ஓடினேன். அன்று அந்த மாயக்காரி பச்சைப்பட்டில் பளபளத்தாள். அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். தாயன்புடன் அவளும் பார்ப்பது போல் தோன்றியது. கண்ணீர் பெருகியது. மோன நிலையில் இருந்த என்னை யாரோ திடீரென முதுகில் அடித்தார்கள். பலமான அடி. நிலைகுலைந்தேன். சுதாரிப்பதற்குள் அதை விடப் பலமா கஇன்னொரு அடி விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். “நீ என்ன செவிடா? எவ்வளவு நேரம்யா சாமி பாப்ப? பின்னாடி வரிசை இருக்குன்னு தெரிய வேணாம்? நானும் எவ்வளவுதான் கத்தறது? அடிச்சாத் தான் நகருவாங்க போலிருக்கு.” அடித்தவனுக்கு முப்பது வயது இருக்கும். அவனோடு மூன்று நான்கு பேர் இருந்தனர். “என்னை மன்னிச்சிருங்கய்யா. கவனிக்கல.” சொல்லிவிட்டு சன்னதியை விட்டு வெளியேறினேன். பொற்றாமரைக் குளத்தின் படியில் அமர்ந்த போது மனம் இன்னும் அந்த மோன நிலையில் தான் இருந்தது. என் மீது விழுந்த அடிகளையும், என்னை அடித்தவனையும் மறந்து விட்டேன். அன்னை மட்டுமே மனதில் வியாபித்திருந்தாள். அருகில் ஒரு பெண் போலீஸ் வந்து அமர்ந்தாள். சட்டென கையை என் முதுகில் வைத்தாள். உயிரே சிலிர்த்தது. “வலி அதிகமோ?” “தாயே! நீங்கள் தொட்டவுடன் போய் விட்டது. ” “போன வாரம் நீ சாலையில் நடந்தபோது யாரோ ஒருவன் உன்னை ஒட்டினாற் போல் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு போனான். உன் மீது படவில்லை. ஆனால் உன்னை இடித்து விடுவானோ என பயந்தாய். அவனை எப்படித் திட்டினாய்? அவன் பலமுறை மன்னிப்பு கேட்டும் அடங்கவில்லை. “ஆனால் இன்று? அவன் உன்னை எப்படி அடித்தான்? அதுவும் இரண்டு முறை. வலியில் உன் முகம் அஷ்ட கோணலானதை நான் பார்த்தேனே. அவன் செய்த செயலுக்கு அவன் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும். ஆனால் நீ அவனிடம் மன்னிப்பு கேட்டாயே, ஏனப்பா?” “தாயே அந்தக் கணத்தில் என் மனம் முழுவதும் நீங்கள் இருந்தீர்கள். நான் இருந்த நிலையில் யாராவது என்னைக் கத்தியால் குத்தினால் கூட அவர்களை அணைத்துக் கொண்டு அழுதிருப்பேன். அவர்கள் மடியில் படுத்தபடி உயிர் துறந்திருப்பேன். அதற்குக் காரணம் நீங்கள். உங்கள் அன்பு.” “ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை கோயிலுக்கு வரும் உனக்கே அந்தக் கதியென்றால் எப்போதும் என் சன்னதியிலேயே இருக்கும் அவன் மனதில் எத்தனை அன்பு இருக்க வேண்டும்? பின் ஏன் அவன் பிரசாதம் கேட்டவர்களைக் கண்டபடி திட்டினான்? பூஜைக்குக் குறுக்கீடு செய்பவர்களை ஏன் வாய்க்கு வந்தபடி பேசினான்? அவன் மனம் காய்ந்துவிட்டது. துளியும் அன்பு இல்லை. அதனால் தான் இந்த நிலையை கொடுத்திருக்கிறேன்.” “இனி அவனால் பூஜை பண்ண முடியாதே தாயே!” “ஆனால் இதனால் அவன் மனம் பண்படும். கால் இல்லாமல் அவதிப்படும் போது பலர் அவனுக்கு உதவி செய்வார்கள். அவனிடம் திட்டு வாங்கியவர்களே மனம் உவந்து பணிவிடை செய்வார்கள். நேரத்திற்குச் சுவையான உணவு கிடைக்கும். நல்ல உறைவிடம் கிடைக்கும். அவர்களின் அன்பில் திளைப்பான். அதில் அவன் அகக்கண் விழித்துக் கொள்ளும். வாழ்நாளை என்னை நினைத்துக் கண்ணீர் சிந்தியபடியே கழிப்பான். எல்லா மனிதர்களிடமும் அன்பு காட்டுவான். உரிய காலத்தில் என்னை வந்தடைவான். அவனை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் சொல்.” “இன்று உங்களைத் தரிசித்த போது இருந்த அன்புநிலை நிரந்தரமாக இருக்க வேண்டும். என்னைக் கொத்த வரும் பாம்பிடமும் அன்பு காட்ட வேண்டும். கத்தியால் குத்த வரும் பகைவனையும் நேசிக்க வேண்டும்.” “பெரிய ஆளப்பா நீ. அது தெய்வநிலை. அதை வரமாகத் தர முடியாது. நீ தான் உன் வாழ்க்கை முறையால் அதைப் பெற வேண்டும்.” “அப்படி வாழ உங்கள் அருள் வேண்டும் தாயே!” “தந்தேன்.”
|
|
|
|
|