சூதாடத்தில் பங்கேற்ற தர்மர், சகுனியின் சூழ்ச்சியால் நாட்டை இழந்தார். இதை தனக்கு சாதகமாக்க விரும்பினான் துரியோதனன். தங்களுக்கு அடிமையான தர்மர், 12 ஆண்டு காலம் வனவாசம் செல்ல வேண்டும் என்றும், அதன் பின் ஓராண்டு காலம் அஞ்ஞாத வாசம் (யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்தல்) செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தான்.
இதைச் கடைபிடித்தால் மட்டுமே இழந்த நாட்டை மீண்டும் அளிப்பதாக உறுதியளித்தான். வனவாச காலத்தில் பாண்டவர் உயிர் இழந்து விடுவர் என்றும், அப்படி அவர்கள் இறந்தால், நாடு தனக்கே சொந்தமாகும் என்றும் மனதில் கணக்குப் போட்டான்.
நிபந்தனைக்கு கட்டுப்பட்டு தர்மர், தம்பிகள் மற்றும் மனைவி திரவுபதியுடன் காட்டிற்குப் புறப்பட்டார். அவர்களுடன் அந்தணர்கள், முனிவர்களும் பின்தொடர்ந்தனர். தன் மீதுள்ள நல்லெண்ணத்தால் தொடர்ந்தாலும், கங்கைக் கரையை அடைந்ததும் நாட்டுக்குத் திரும்பி விடுவர் என தர்மர் நினைத்தார்.
கங்கைக் கரையில் ‘பிரமாணம்’ என்னும் ஆலமரத்தடியை அடைந்த அவர்கள், இரவில் அங்கேயே தங்கினர். தண்ணீர் மட்டும் குடித்து விட்டு பொழுதைக் கழித்தனர். மறுநாள் காலையில் கண் விழித்த தர்மர், பசியால் துாக்கமின்றி கிடந்த அந்தணர்களைக் கண்டு வருந்தினார்.
‘‘வேதம் கற்ற உத்தமர்களே! உங்களின் அன்பைக் கண்டு நெகிழ்கிறேன். காட்டில் உண்ண காய், கனிகளை மட்டுமே கிடைக்கும். விலங்குகளின் நடமாட்டம் அதிகமிருக்கும். அரக்கர்களின் அச்சுறுதலைச் சந்திக்க நேரிடும். அதனால் உடனடியாக நாட்டிற்கு புறப்படுங்கள்’’ என வேண்டினார்.
‘‘தர்ம புத்திரரே! நாங்களும் காய், கனிகளை உண்டு வாழ்வோம். உங்களுக்கு பக்கபலமாக ஜபம், தவத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.
‘‘அந்தணர்களுக்கு உணவிட முடியாத பாவியாக இருக்கிறேனே’’ என மனதிற்குள் வருந்தினார் தர்மர். அதைப் புரிந்து கொண்ட முனிவர் தவுமியர், “தர்ம புத்திரரே! வருந்த வேண்டாம். சூரியனுக்குரிய ஆதித்ய மந்திரத்தை உபதேசிக்கிறேன். கழுத்தளவு நீரில் நின்றபடி ஜபித்தால் சூரியன் அருளால் கவலை தீரும்’’ என்றார்.
தர்மரும் அந்த மந்திரத்தை ஜபிக்க சூரியபகவானும் காட்சியளித்தார்.
‘‘உன் தேவையை நான் அறிவேன் தர்மா! இதோ... இந்த அட்சய பாத்திரம் மூலம் அனைவருக்கும் அன்னமிடும் பாக்கியம் பெறுவாய்’’ என்று சொல்லி அதைக் கொடுத்தார். திரவுபதி அந்த பாத்திரத்தில் இருந்து கிடைத்த சுவை மிக்க உணவுகளை அனைவருக்கும் பரிமாறியதோடு, தானும் சாப்பிட்டாள். அன்று முதல் நாள் தோறும் சூரியபகவானை நன்றியுடன் வழிபட்டார் தர்மர்.