|
ஒருமுறை குபேரன் துளி நீர் கூட அருந்தாமல் பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். அவனது தவத்தைக் கண்டு வியந்த பிரம்மா நேரில் காட்சியளித்து பொன்னும், மணியும் கொட்டும் புஷ்பக விமானத்தை வழங்கினார். இதை அறிந்த ராவணன், குபேரன் மீது போர் தொடுத்து புஷ்பக விமானத்தைப் பறித்துக் கொண்டான். விமானத்தை இழந்த வருத்தத்தில் குபேரன் பலம் இழந்தவனாகிப் போனான். இது தான் சரியான நேரம் எனக் கருதிய அசுரகுருவான சுக்கிரன், குபேரனிடமிருந்த பொன், பொருளை கொள்ளையடித்தான்.
கைலாயம் சென்ற குபேரன் சிவனிடம் தன் நிலையைக் கூறி முறையிட்டான். பிறர் பொருளைக் கொள்ளையடித்த சுக்கிரனை வதம் செய்வதற்காக திரிசூலத்தைக் கையில் எடுத்தார் சிவபெருமான். ஆனால், தந்திரசாலியான சுக்கிரன் சூட்சும வடிவம் தாங்கி சிவனின் வயிற்றுக்குள் நுழைந்து வாய் வழியே வெளியேறினான். உடம்புக்குள் புகுந்து வந்ததால் சுக்கிரன், புத்திரனுக்குச் சமமாகி விட்டான். அவனைக் கொல்வது முறையல்ல என சிவனைத் தடுத்தாள் பார்வதி. அதன்பின் சிவன், “குபேரா! உன் இருப்பிடமான அளகாபுரியில் நெல்லிவனத்தை உண்டாக்கு. அம்மரம், செல்வத்திற்கு அதிபதியான திருமாலுக்கும், லட்சுமிக்கும் விருப்பமானது. அதை வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் பெறுவாய்’’ என உபதேசித்தார். அதன்படி குபேரனும் நெல்லிக் கன்றுகளை நட்டு வளர்த்தான். தினமும் விரதமிருந்து வழிபட்டதன் பலனாக பத்து மடங்கு செல்வத்தை அடைந்தான்.
|
|
|
|