|
முற்பிறவியில் புத்தரின் பெயர் போதிசத்துவர். பெரும் பணக்காரரான அவரிடம் உதவி கேட்ட யாரும் வெறுங்கையுடன் திரும்பியதில்லை. ஒருநாள் போதிசத்துவர் வெளியூர் சென்ற போது வீடே கொள்ளை போனது. அதைப் பற்றி சிந்திக்காமல், உதவி கேட்டு வருவோருக்கு என்ன சொல்வேன்? எனக் கவலை கொண்டார். நல்ல வேளையாக வீட்டில் அரிவாள் ஒன்றும், கயிறு ஒன்றும் விட்டுச் சென்றிருந்தான் திருடன். ‘‘தர்மம் செய்ய இந்த இரண்டும் போதுமே’’ என மகிழ்ந்தார். அரிவாளுடன் காட்டுக்குச் சென்று, புல் அறுத்துக் கயிற்றால் கட்டிக் கொண்டு சந்தையில் விற்றார். அதில் கிடைத்த சொற்ப பணத்தில் தர்மம் செய்தார். சில நேரம் பணம் இன்றி பட்டினியும் கிடந்தார். ஒருநாள் பணம் இல்லையே என வருந்திய போது, திவ்ய புருஷர் ஒருவர் காட்சியளித்து, ‘‘ தர்மம் செய்ய முடியவில்லையே என வருந்தும் உங்களுக்கு செல்வம் தர விரும்புகிறேன்’’என்றார். ‘‘ பணம் என்னை விட்டுப் போய் விடும். அதனால் பிறருக்கு உதவும் மனம் இருந்தால் போதும்’’ என்றார். அதைக் கேட்டு இந்திரனாக உருமாறினார் திவ்யபுருஷர். ‘‘உங்களைச் சோதிக்கவே இப்படி வந்தேன். முன்பு திருடனாக வந்தவனும் நானே தான். மன்னியுங்கள்’’ என்றான் இந்திரன். ‘‘ மன்னிக்க தேவையில்லை. உழைப்பால் கிடைத்த பணத்தில் தர்மம் செய்தால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி’’ என்றார் போதிசத்துவர். பன்மடங்கு செல்வத்தை வழங்கி விட்டு இந்திரன் மறைந்தான். அதன் மூலம் தர்மத்தை தொடர்ந்தார் போதிசத்துவர்.
|
|
|
|