|
ஒருமுறை துறவி சமர்த்த ராமதாசர் சீடர்களுடன் கரும்புத்தோட்டத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது சீடர்கள் கரும்பைப் பறித்து தின்ன ஆரம்பித்தனர். இதைக் கண்ட தோட்டக்காரனுக்கு கோபம் வந்தது. ராமதாசரையும், சீடர்களையும் மரத்தில் கட்டி பிரம்பால் அடித்தான். சீடர்களின் தவறுக்காக ராமதாசருக்கும் உதை விழுந்தது. பின்னர், அங்கிருந்து புறப்பட்ட ராமதாசர், மாமன்னர் சிவாஜியின் அரண்மனையை அடைந்தார். குருநாதரைக் கண்ட சிவாஜி உபசரித்து விருந்தளித்தார். ஓய்வு எடுக்க தயாரான ராமதாசரின் முதுகில் பிரம்படி பட்டிருப்பதைக் கண்டு, ‘இக்கொடுமையைச் செய்த கயவன் யார்?’ என ஆவேசமாகக் கேட்டார் சிவாஜி.
ஆனால், ராமதாசர் உண்மையை சொல்லவில்லை. சீடர்களிடம் விசாரித்த மன்னர், தோட்டக்காரனை இழுத்து வர உத்தரவிட்டார். மன்னரின் கோபத்திற்கு ஆளானதை அறிந்த தோட்டக்காரன் பயத்துடன் வந்தான். ‘‘குருநாதா! இந்த கயவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என தீர்ப்பளியுங்கள்’’ எனக் கேட்டார் சிவாஜி. ‘‘இவரது நிலத்திற்கு இனி மேல் வரி வசூலிக்காதே. ஏனெனில் தவறை தட்டிக் கேட்கும் தைரியமும், அதற்கு தண்டனை கொடுக்கும் பக்குவமும் இவருக்கு இருக்கிறது. தவறு செய்தததால் தான் எங்களுக்கு தண்டனை கிடைத்தது. தவறே செய்யாத இவருக்கு பரிசளிப்பதே சரியான தீர்ப்பு’’ என்றார் ராமதாசர். |
|
|
|