|
பாண்டவருக்கு உரிய பங்கை பெற்றுத் தரும் நோக்கத்துடன், கவுரவர்களிடம் துாது செல்ல முடிவெடுத்தார் கிருஷ்ணர். கிருஷ்ணர் வருகையை அறிந்த கவுரவர்கள் அவரை வரவேற்று விருந்துண்ண வருமாறு அழைத்தனர். ஆனால் கிருஷ்ணரோ எளிமையும், பக்தியும் நிறைந்த விதுரரின் வீட்டிற்கு சென்றார். இவர் திருதராஷ்டிரன், பாண்டுவின் சகோதரர். அதாவது துரியோதனின் சித்தப்பா முறை கொண்டவர். அங்கே விதுரரின் மனைவி மட்டும் இருந்தாள். கிருஷ்ணரைக் கண்ட அவளுக்கு தலைகால் புரியவில்லை. பக்தியுடன், ‘‘கிருஷ்ணா! இந்த ஏழையை மதித்து வந்தாயே! உனக்கு என் வந்தனங்கள்’’ என்றாள். பரபரப்புடன் வாழைப்பழங்களின் தோலை உரித்தாள். பழத்திற்கு பதிலாக தோலைக் கிருஷ்ணருக்கு கொடுத்தாள். ஆனால், கிருஷ்ணரோ தோலையும் விரும்பி சாப்பிட்டார். இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தார் விதுரர். ‘‘ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? இது தான் உபசரிக்கும் லட்சணமா இது? எனத் திட்டினார். அப்போது தான் அவளுக்கு தவறு புரிந்தது. பின்னர் கிருஷ்ணர், விதுரருக்கு உணவு அளித்தாள். அப்போது ‘‘கிருஷ்ணா! உணவு எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார் விதுரர். ‘‘ விதுரரே! அன்புடன் அளித்த வாழைப்பழத் தோலை விட, உணவின் சுவை குறைவு தான்!’’ என்றார் கிருஷ்ணர். கடவுளுக்கு என்ன கொடுக்கிறோம் என்பதை விட, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பது தான் முக்கியம்.
|
|
|
|