|
சிவபக்தையான ஆச்சி என்பவள் அண்ணாமலையார் மீது பக்தி கொண்டிருந்தாள். மாதம் தோறும் பவுர்ணமியன்று திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வாள். ஒருமுறை கிரிவலம் செல்ல அவளிடம் பணமில்லை. ஆனாலும் கோயிலுக்குச் செல்ல அவளது மனம் பதைபதைத்தது. பவுர்ணமிக்கு இன்னும் இரண்டே நாள் தான் இருந்தது. அப்போது, ‘‘ ஆச்சி உடனே புறப்படு! மகான் ஒருவர் பவுர்ணமியன்று கிரிவலம் வருகிறார். அவர் அண்ணாமலையின் மீது எறியும் மலர்களில் ஒன்றை பெற்றுக் கொள்’’ அசரீரி கேட்டது. ஆச்சிக்கு அதிர்ச்சியாகவும், அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது. ஆச்சி மனதிற்குள், ‘‘காசு இல்லாவிட்டால் என்ன? கடவுள் கொடுத்த கால்கள் இருக்கிறதே!’’ என எண்ணிக் கொண்டாள். திருவண்ணாமலைக்கு நடந்தே சென்றாள். மலையைச் சுற்றி வந்தாள். ஓரிடத்தில் மகான் ஒருவர் தோளில் மலர்க்கூடையை கட்டியபடி சென்றார். பக்தி பரவசத்துடன் ஒவ்வொரு அடி வைக்கும் போதும் மலையை நோக்கி மலர்களை வீசியபடி சென்றார். பக்தர்கள் சிலர் அவற்றை புனிதமாக கருதி எடுக்க முயன்றனர். ஆனால் கைகள் நீட்டியதும் அவை வானத்தை நோக்கி பறந்ததோடு, சற்று நேரத்தில் காணாமல் மறைந்தன. இப்படி அதிசயம் நிகழ்த்திய அந்த மகானே, அசரீரியால் உணர்த்தப்பட்டவர் என்பது ஆச்சிக்கு புரிந்தது. அவரைப் பின்தொடர்ந்தாள். அவர் எறிந்த மலர்களை கையில் பிடிக்க முயன்றாள். ஒன்றைக் கூட பிடிக்க முடியவில்லை. அண்ணாமலையாரை மனதார வேண்டினாள். மகான் எறிந்த மலர் அவள் முன் வந்தது. அதைக் கையில் பிடித்ததும் மகான் அங்கிருந்து மறைந்தார். எங்கு தேடியும் காண வில்லை. அடுத்த மாதம் பவுர்ணமி வந்தது. அப்போதும் ஆச்சி மலையை சுற்ற வந்தாள். அப்போது வரை அவளிடம் இருந்த மலர் வாடவில்லை. கிரிவலப்பாதையில் அந்த மகான் செல்வதைக் கண்டாள். அவர் ஆச்சியை நெருங்கி வந்து, ‘‘தாயே! அண்ணாமலையார் என் கனவில் தோன்றி தங்களை பற்றி தெரிவித்தார். தங்களிடமுள்ள மலர் இத்தனை நாளாகியும் வாடாமல் இருக்கிறதே! என்னிலும் பக்தியில் உயர்ந்தவர் தாங்களே’’ என்று சொல்லி ஆச்சியை வணங்கினார். அண்ணாமலையார் உண்மை பக்தர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார். அவர்கள் எப்போதும் வாடாமலர் போல சிறந்து விளங்குவர் என்பதை உணர்த்த இப்படி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். |
|
|
|