|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அன்பும் அகங்காரமும் |
|
பக்தி கதைகள்
|
|
“நீங்க தான்யா என்னைக் காப்பாத்தணும். என் புருஷன் இறந்துட்டாரு. எங்களுக்கு இருக்கறது ஒரே வீடு. அத வித்து என் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணனும்னு வச்சிருத்தேன். வீட்டோட மூலப்பத்திரத்த எடுத்துக்கிட்டு வெளிய போனேன். எவனோ ஒரு பாவிப்பய திருட்டிட்டான்யா. பத்திரம் இல்லேன்னா விலையில இரண்டு லட்சம் குறைச்சிருவேன்னு சொல்றாங்கய்யா” “என்கிட்ட சொல்லிட்டீங்கள்ல? கவலைப்படாம போங்க. ரெண்டு நாள்ல பத்திரம் தன்னால கெடைக்கும் பாருங்க. எங்காத்தா கைவிடமாட்டாம்மா.” அவள் கைவிட்டுவிட்டாள். மூன்று, நான்கு நாட்கள் ஆகியும் மூலப்பத்திரம் கிடைக்கவில்லை. வீட்டை வாங்குபவர் அதற்கு மேல் பொறுக்க முடியாது என சொன்னதால் பஞ்சாயத்து செய்து விலையில் ஒன்றரை லட்ச ரூபாய் மட்டும் குறைத்துக் கொள்ள முடிவானது. பத்திரப் பதிவுக்கு நானும் சென்றிருந்தேன். “உங்காத்தா கைவிடமாட்டான்னு சொன்னீங்களேய்யா?” என்று அந்தப் பெண்மணி என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்டாள். அவளைப் பார்த்துக் கைகூப்பத் தெரிந்ததே ஒழிய பதில் சொல்லத் தெரியவில்லை. “இவங்க பத்திரம் சம்பந்தமா ஏதோ விபரம் வேணுமாம். சப் ரிஜிஸ்ட்ரார் மேடம் வரச் சொன்னாங்க.” பெரிய அறையில் நடுநாயகமாக அமர்ந்திருந்த சார்பதிவாளரான அந்த பெண்ணைப் பார்த்ததும் காரணமில்லாமல் கண்ணீர் பெருகியது. சுற்றி ஆட்கள் நின்றிருந்தார்கள். “சார் நீங்க மட்டும் முன்னால போங்க.” என்றார் கடைநிலை ஊழியர். போனேன். அந்தக் கம்பீரமான பெண்ணை வணங்கினேன். “என்னப்பா நீ சொன்னது நடக்கவில்லை என வருத்தமா?” இந்த ஒரு கேள்வி போதாதா என் எஜமானியைக் காட்டிக் கொடுக்க? “உங்கள் கொத்தடிமை சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, தாயே!” “அந்தப் பெண்ணுக்கு வாக்கு கொடுக்கும் போது இந்த அடக்கம் எங்கே போயிருந்தது?” அன்னை குரலை உயர்த்தினாள். “அகங்காரம் வந்துவிட்டால் ஆபத்தாகி விடும் என்பதால் நான் குறுக்கிடவில்லை.” “என் அகங்காரத்திற்காக அந்த ஏழைப் பெண்ணைத் தண்டிப்பது நியாயமா?”” “நியாய அநியாயங்களைப் பற்றி பேசாதே! அவள் நஷ்டத்தை எப்படி ஈடு செய்வது என எனக்கு தெரியும்.” அழகான அவளது முகத்தையே பார்த்தபடி நின்றேன். “இன்னொரு வாய்ப்பு தருகிறேன். இந்த முறையும் தவறினால்.. .” பட்டயக் கணக்காளர்களாகச் ஐம்பது பேர் சேர்ந்து குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றிருந்தோம். புதிய இடங்களைப் பார்த்தல், புதிய மனிதர்களைச் சந்தித்தல், அங்கே எங்கள் தொழிலில் இருப்பவர்களுடன் கலந்துரையாடல் என பொழுது இனிமையாகக் கழிந்தது. ஒருநாள் இரவு 11:00 மணிக்கு ஏதோ வாங்க வேண்டும் என்று தனியாகக் கிளம்பினேன். ஹோட்டல் வாசலில் ஒரு தணிக்கையாளர் குடும்பத்தினர் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை கண்டேன். தணிக்கையாளர் தன் மகனைத் திட்டிக் கொண்டிருந்திருப்பார் போலும். என்னைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டுச் சிரித்தார். அச்சிரிப்பில் உயிர் இல்லை. அவரது மகனின் முகம் வெளிறிப் போயிருந்தது. “என்னாச்சு?” தணிக்கையாளரின் மனைவி கொட்டி தீர்த்தாள். “இவன் கேமராவத் தொலச்சிட்டான் சார். அதோட மதிப்பு ஒன்றரை லட்சம். அதுகூடக் கொடுத்துரலாம். ஆனால் கேமரா எங்கது இல்ல! எங்க சம்பந்தகாரங்ககிட்டருந்து இரவல் வாங்கினது. அதுல அவங்க குடும்ப போட்டோ நிறைய இருக்கு. தப்பான ஆளுங்க கையில கெடைச்சிதுன்னா பெரிய பிரச்னையாயிரும். விஷயம் வெளிய தெரிஞ்சா ரெண்டு குடும்பத்துக்கும் இருக்கற உறவே போயிரும் சார். கேமராவ ஓசி வாங்க வேணாம்னு படிச்சிப் படிச்சிச் சொன்னேன். கேட்டாத்தானே!” தணிக்கையாளர் என் கைகளைப் பிடித்தபடி, “நீங்க வேண்டிக்கிட்டீங்கன்னா பச்சைப்புடவைக்காரி மாட்டேன்னு சொல்லமாட்டான்னு கேள்விப்பட்டேன் சார். எனக்காக. . தயவு செஞ்சி...’’ சார்பதிவாளர் வடிவத்தில் வந்து அன்னை விடுத்த எச்சரிக்கை மனதில் நிழலாடியது. என் கைகளை விடுவித்துக்கொண்டேன். “நீங்க தப்பா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க. நான் தான் பச்சைப்புடவைக்காரியோட கொத்தடிமை. அவ என்ன சொன்னாலும் அதைக் கேட்கக் கடமைப்பட்டவன். அவளுக்கு அந்த மாதிரி எந்தக் கடமையும் கெடையாது. மனமுருகிப் பிரார்த்தனை பண்ணுங்க. அப்புறம் அவ என்ன நெனைக்கறாளோ அதுவே நடக்கட்டும்ணு விட்ருங்க.” சொல்லிவிட்டு என் அறைக்குத் திரும்பினேன். என் படுக்கையில் அமர்ந்தபடி, “தாயே! உங்களிடம் இரண்டு வரங்களை வேண்டுகிறேன்.” “தொலைந்த பொருள் கிடைக்க வேண்டும் என்பது ஒன்று. இன்னொன்று என்னப்பா?” “இந்தப் பிரச்னையில் நான் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என யாருக்கும் தெரியக்கூடாது. இதனால் எனக்கு எந்தவிதமான பெயரும் புகழும் கிடைக்கக்கூடாது.” அன்னையின் சிரிப்பொலி கேட்டது. அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடிவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன். மறுநாள் நாங்கள் ஒரு பறவைகள் சரணாலயத்தைப் பார்க்கப் போவதாகத் திட்டம்.. கேமரா தொலைத்த நண்பரைக் காணவில்லை. விசாரித்தேன். முதல்நாள் போன இடங்களுக்கு போய் கேமராவைத் தேடப் போவதாகச் சொன்னாராம். முந்தைய நாள் நாங்கள் இருநுாறு ஏக்கர் பரப்பில் அமைந்த பிரம்மாண்டமான கேளிக்கை பூங்காவிற்குச் சென்றோம். தினமும் பல லட்சம் மனிதர்கள் வந்து செல்லும் இடம் அது. அங்கே போய் எப்படி கேமராவைத் தேடுவார்கள்? கேமராவைத் தொலைத்த பையன் மேலும் திட்டு வாங்கப் போகிறான். ஒரு கட்டத்தில் வேதனை தாங்காமல் அவன் ஏதாவது விபரீத முடிவு எடுத்தால்...எனக்கு வியர்த்தது. “மடியேந்திப் பிச்சை கேட்கிறேன் தாயே. எப்படியாவது உதவுங்கள்.” “எத்தனை முறை சொல்லியிருக்கிறேன், அடுத்தவர்கள் கர்மக் கணக்கில் தலையிடாதே என்று. இதுவும் ஒரு வகை அகம்பாவம்தான். நீ என்ன பெரிய ஞானியா? எல்லாம் உணர்ந்தவனா? இல்லை முற்றும் துறந்த முனிவனா?” “தாயே சங்கரர் கூட நெல்லிக்கனி கொடுத்த பெண்ணின் ஏழ்மை போக்க பாடல் பாடி பொன்மழை பொழியச் செய்தாரே!” “அவரும் நீயும் ஒன்றா?” இதற்கு அழுகையைத்தான் பதிலாக என்னால் கொடுக்க முடிந்தது. மதியம் ஒரு மணியளவில் நண்பர் ஒருவர் என்னை நோக்கி ஓடிவந்தார். “அதிசயத்தைக் கேட்டீங்களா? பாலாவுக்குக் கேமரா கெடைச்சிருச்சாம். அவர் பையன் வாடகைக்கு எடுத்த சைக்கிள்ல அந்தக் கேமராவ வச்சிட்டு மறந்துட்டான் போலிருக்கு. வெட்ட வெளியில அந்தச் சைக்கிளும் கேமராவும் ராத்திரி வரைக்கும் அப்படியே இருந்திருக்கு. யாரும் கவனிக்கல. ராத்திரி அங்க வேலை பாக்கறவங்க அதப் பாத்து ஆபீஸ்ல கொடுத்திருக்காங்க. காலையில இவங்க போனவுடன விபரம் கேட்டுட்டுக் கொடுத்துட்டாங்களாம். பெரிய அதிசயம் இல்ல? ஒன்றரை லட்ச ரூபா கேமரா லட்சம் பேர் வந்து போற பொது இடத்துல பத்து மணி நேரம் அனாமத்தாக் கெடந்திருக்கு. எல்லாம் அதிர்ஷ்டம் சார்.” “தப்பான வார்த்தைப் பிரயோகம். அதுக்குப் பேரு அதிர்ஷ்டம் இல்ல இறையருள்.” நாத்திகரான அவர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு விலகிச் சென்றார். பறவைகள் சரணாலயத்தில் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் தனியாக அமர்ந்திருந்தேன்,. சீருடை அணிந்த பெண் ஊழியர் என்னை நோக்கி வந்தாள். எனக்கு மட்டும் கேட்கும்படி, “நீ உன்னையும் அறியாமல் அற்புதம் நிகழ்த்தி விட்டாய்.” “இது எப்படி .. தாயே!’’ “முதலில் உன் மனம் அன்பால் நிரம்பியிருந்தது. பாவம் இப்படி தவிக்கிறார்களே எனக் கவலைப்பட்டாய். அதனால் மட்டும் அற்புதம் நிகழவில்லை. இரண்டாவது வரமாக இது என் மூலம் நடந்தது என்று தெரிய வேண்டாம் என பிரார்த்தித்தாயே அது தான் அற்புதம் நிகழ்த்தியது.” “ பொய் சொல்கிறீர்கள் தாயே. அபிராமி பட்டருக்காக அமாவாசையன்று நிலவை வரவழைத்தவர்களாயிறே நீங்கள்! செய்வதையெல்லாம் செய்துவிட்டு என்னிடமே அன்பு அது இது என்று கதைவிடுகிறீர்களே... நியாயமா?” “இன்னுமா உனக்குப் புரியவில்லை? நான் என்றால் என்ன அன்பு என்றால் என்ன?”.
|
|
|
|
|