|
சிம்மாசனத்தில் அமர்ந்தபடி அரசாட்சி புரிந்தன ராம பாதுகைகள். அயோத்தியில் குறை ஏதும் இல்லை என்றாலும் ராமர் இல்லாத சோகம் மட்டும் மக்களின் மனதில் இழையோடியது.
இது ராம பாதுகைகளுக்கும் புரிந்தது. ராமரை பிரிந்து பரதனிடம் வந்து விட்டதால் வருத்தம் தான். ஆனாலும் ராமரின் உத்தரவை மீற முடியாததால் நாடாளும் பொறுப்பை ஏற்றன. இன்னும் சில ஆண்டுகள் தான், பிறகு ராமர் அயோத்தி திரும்புவார் மீண்டும் அவரது பாதத்தை அடையலாம் என காத்திருந்தன.
இந்நிலையில் ஒருநாள், ராமரின் பாதம் தொட்டு பழகிய பாதுகைகள், அவர் காட்டிற்கு போகும் போது அங்குள்ள தாவரங்கள் தங்களுக்குள் பேசியதை நினைவு கூர்ந்தன. காட்டிற்கு ராமர் வரவிருப்பதை அறிந்த தாவரங்கள் மகிழ்ந்தன. தம்மை விட்டு அவர் விலகி நடக்க நினைத்தாலும், அவரது பாதம் படும் விதமாக கிளைகளை நீட்டிக் கொண்டு நின்றன. அவர் வரும் போது, சற்று வேகமாக வீசும்படி காற்றை வேண்டின. அவரது உடம்பில் படும் தென்றல் தங்களையும் தீண்டிச் செல்ல வேண்டும் என கோரின. செடி, கொடி, மரம், புல், தழை எல்லாம் தமக்குள் பேசின. ‘‘தெரியுமா உங்களுக்கு? ராமரின் பாதம் பட்டு அகலிகைக்கு விமோசனம் கிடைத்ததாம்’’ என்றது பூச்செடி ஒன்று. ‘‘ராமரின் பாதம் அல்ல, பாதத்தில் ஒட்டியிருந்த மண்துளி பட்டு தான் சாபம் தீர்ந்தது,’’ என்றது ஒரு கொடி. ‘‘அட, ராமரின் பாதத் துளிக்கே இப்படி என்றால், முழு பாதத்துக்கும் எத்தனை மகிமை இருக்கும்!’ என்றது ஆலம் விழுது ஒன்று. ‘‘உண்மைதான்,’’ அமோதித்தது ஒரு மரம். ‘‘ பாதங்களுக்கு இத்தனை பெருமை இருந்தாலும், ராமர் கர்வம் கொண்டதில்லை. அவர் நடக்கும் போது தரை அதிரவோ, வேகமாகவோ நடக்க மாட்டார், ஏனெனில் பாதங்களுக்கு அடியில் ஏதேனும் சிற்றுயிர்கள் சிக்கி பாதிப்பு ஏற்படக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வு தான்.’’ என்று ஒரு மரம் சொன்னதைக் கேட்டு மற்ற தாவரங்கள் ஆச்சரியப்பட்டன. ‘‘இதற்கே இப்படி அசையாமல் நிற்கிறீர்களே, இன்னொரு விஷயத்தைக் கேட்டால் ஆனந்தத்தில் மூழ்குவீர்கள்’’ என பீடிகை போட்டது அந்த மரம். தாவரங்கள் எல்லாம் அந்த மரத்தின் பக்கமாகச் சாய்ந்து ஆவலுடன் நின்றன. ‘‘தொட்டிலில் குழந்தையாக இருந்த ராமரைக் கொஞ்சி மகிழ்வார் தசரதர். தன் தலைக்கு மேலே துாக்கிப் பிடித்து விளையாட்டு காட்டுவார். அதைக் கண்டு தன் பிஞ்சுக் கைகளை அசைத்து மகிழ்வார் ராமர். அப்போதும் கூட அவர் ஒரு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பார்’’ குழந்தை ராமர் எந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க முடியும் என அவற்றுக்கு புதிராக இருந்தது. மரம் பெருமையாக, ‘‘எதில் எச்சரிக்கையாக இருந்தார், தெரியுமா? தன் கால்களில் தான். துாக்கிப் பிடித்தபடி விளையாட்டு காட்டும் போது ராமர் கால்களை மடக்கிக் கொள்வாராம். ஏன்? தன் பாதங்கள் தந்தையின் தலையிலோ, மார்பிலோ பட்டுவிடக் கூடாது என்ற உணர்வால் தான்!’’ ‘அட!’ என வியந்தன தாவரங்கள். மீண்டும் பாதுகைகள் தங்களின் பழைய நினைவில் மூழ்கின. கங்கைக்கரையில் ராமர் தங்கியிருந்த போது, அவரைக் காண பரதன் வந்தான். அவனுடன் ராமரின் மாமனார் ஜனகர், அமைச்சர் சுமந்திரன், படை வீரர்கள் உடன் வந்தனர். ராமரை அயோத்திக்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளனர் என்பது தெரிய வந்ததும், தங்களை விட்டு ராமர் சென்று விடுவாரே... என தாவரங்கள் கவலை கொண்டன. ஆனால், ‘அயோத்திக்கு வர மாட்டேன்’ எனத் திட்டவட்டமாக தெரிவித்தார் ராமர். ராமருக்குரிய சிம்மாசனத்தில் தானும் அமர போவதில்லை என பரதனும் மறுத்தான். முடிவு என்னாகுமோ என தவித்தன தாவரங்கள்.
இந்நிலையில் அவன், ‘‘அண்ணா! அயோத்திக்கு வர தங்களின் மனம் இடம் தரவில்லை, பரவாயில்லை போகட்டும்! தங்களின் பிரதிநிதியை முன்வைத்து ஆட்சியை நடத்துகிறேன். அந்த பிரதிநிதி யார் தெரியுமா? பாதுகைகள் தான். அருள் கூர்ந்து அவற்றை என்னிடம் கொடுங்கள்’’
அதைக் கேட்டு தாவரங்கள் திடுக்கிட்டன. ‘‘ராமரிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தது போதாது என்று இப்போது பாதுகைகளை கேட்கிறானே!’’ என கோபப்பட்டது ஒரு மரம். ‘‘பரதன் செய்ததை பாராட்டத்தான் செய்வேன்,’’ என்றது ஒரு புதர். ‘‘என்ன உளறுகிறாய்?’’ என மற்ற தாவரங்கள் கேட்டன. ‘‘ஆமாம், இனி ராமர் வெறும் பாதங்களோடு தான் நடப்பார். அதனால் அவரது பாதத்தை தீண்டும் பாக்கியம் நமக்கு கிடைக்குமே!’’ என்றது அந்தப் புதர். ‘அட, ஆமாம்!’ என எல்லா தாவரங்களும் ஒரே குரலில் ஆமோதித்தன. இந்த சம்பவங்களை நினைவு கூர்ந்த பாதுகைகள் தம் மீது ஏதோ விழுவதை உணர்ந்தன. ஆம்! அப்போது பரதன் பூக்களைத் துாவி பாதுகைகளை வணங்குவதை கண்டன. |
|
|
|