|
நிறுத்தம் ஒன்றில் பேருந்து நின்றது. தள்ளாடியபடி கம்பியைப் பிடித்தபடி பாட்டி ஒருத்தி ஏறினாள். எல்லா இருக்கையிலும் பயணிகள் இருந்தனர். ஒருவரும் பாட்டிக்கு இடம் தர முன் வரவில்லை. “பாட்டி! இதோ இந்த சீட்டில வந்து உட்காருங்க!” என எழுந்தார் கண்டக்டர். திரும்பிய பாட்டி, தளர்ந்த நடையோடு வந்து அமர்ந்தாள். “மகாராசா! பிள்ளை குட்டியோட நல்லா இருக்கணும்!” என வாழ்த்தினாள். “என்ன பாட்டி உதவி செய்துட்டேன்! இதுக்குப் போயி நீங்க....” என்றார் அவர். இதைக் கேட்டு,‘‘இந்த பயபுள்ள என்ன பண்ணிட்டான்னு கிழவி இப்படி தலை துாக்கி வெச்சு ஆடுறா! கண்டக்டருக்கே இவ்வளவு மரியாதைன்னா எனக்கு எப்படி இருக்கும்?’’ என எண்ணினார் டிரைவர். அதற்குள் அடுத்த ஸ்டாப் வந்தது. அங்கு கிழவர் ஒருவர் தள்ளாடியபடி ஏறினார். அவருக்கும் யாரும் இடம் தரவில்லை. இது தான் நேரம் என்று டிரைவர் எழுந்தார். “ஐயா! இங்க வந்து என் சீட்டில உட்காருங்க! ” என்றார் புன்னகையுடன். கண்டக்டர் பாணியில் டிரைவர் நடந்தால், பயணிகளின் நிலை என்னாகும் என யோசித்துப் பாருங்கள். இப்படித் தான் நம்மில் பலரது நிலையும் இருக்கிறது. அடுத்தவர்களைப் பார்த்து அப்படியே நடக்க விரும்புகிறோம். அவரவர் இயல்புக்கு ஏற்ப வாழாவிட்டால் விளைவு விபரீதமாகும் என்பதற்கான உதாரணம் இது.
|
|
|
|