|
காவிரிபூம்பட்டினத்தில் சாதுவன் என்னும் வியாபாரி இருந்தார். அவனது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழிந்தது. ஒருநாள் ஊரில் நடந்த நாடகத்திற்கு சென்றார். நாடக நடிகையின் அழகில் மயங்கி காதல் கொண்டார். மனைவியை கைவிட்டு நடிகையுடன் குடும்பம் நடத்தினார். நடிகையோ, சாதுவனின் பணத்தின் மீது குறியாக இருந்தாள். பொருள் அனைத்தும் கரைந்ததும் சாதுவனை விட்டு விலகினாள். ஆதிரைக்கு செய்த துரோகத்தால், இழிநிலை ஏற்பட்டது என வருந்திய சாதுவன் மீண்டும் பொருள் தேட விரும்பினார். அப்போது, வங்கதேசத்து வியாபாரிகள் சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். அவர்களை சந்தித்த சாதுவன் தனக்கு தெரிந்த வியாபார நுட்பங்களை எடுத்துரைத்தார். அதைக் கேட்ட அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. தங்களுடன் பாய்மரக் கப்பலில் அழைத்துச் சென்றனர். இழந்த பணத்தை மீட்ட பின் மனைவியை சந்திக்கலாம் என்ற எண்ணத்துடன் சாதுவனும் புறப்பட்டார். நடுக்கடலில் புயல் குறுக்கிடவே, கப்பல் கவிழும் என்ற நிலை ஏற்பட்டது. அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வியாபாரிகள் கடலில் மூழ்கி இறந்தனர். ஆனால் சாதுவன் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் உடைந்த பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்டான். துரோகமே செய்தாலும் கூட, தாலி கட்டிய கணவர் நலமுடன் வாழ வேண்டும் என தினமும் சிவனை வழிபடுவது ஆதிரையின் வழக்கம். அவளது பிரார்த்தனையின் பலத்தால், சாதுவன் பத்திரமாக நாகத்தீவின் கரையில் ஒதுங்கினான். இந்நிலையில் சாதுவன் சென்ற கப்பல் மூழ்கிய செய்தி ஆதிரையை எட்டியது. மயானத்தில் தீ மூட்டி, உயிர் துறக்க முடிவெடுத்தாள். ‘‘ சிவபெருமானே! அடுத்த பிறவியிலும் சாதுவனே கணவராக அமைய வேண்டும்,’ என தீயில் குதித்தாள். ஆனால் நெருப்பு சுடவில்லை. அவளுடைய கற்புத்தீ அக்னிதேவனை சுட்டது. உயிருடன் வெளியே வந்தாள். ‘‘ ஆதிரையே ! கவலை வேண்டாம்! உன் கணவர் விரைவில் உன்னை வந்தடைவார்’’ என அசரீரி கேட்டது. ஆதிரையும் மகிழ்ச்சியுடன் காத்திருந்தாள். இதனிடையே கரை ஒதுங்கிய சாதுவன், நாகத்தீவை ஆட்சி புரியும் மன்னரைச் சந்தித்தான். வாழ்வில் நடந்ததை எல்லாம் மன்னரிடம் விவரித்தார். அன்புடன் அரவணைத்த மன்னர் உண்ண மது, மாமிசம் வழங்கியதை சாதுவன் ஏற்கவில்லை. ‘‘ மன்னா! தீயபழக்கத்தால் நான் பட்ட கஷ்டங்கள் போதும். இனியும் மது, மாது, மாமிசம் வேண்டாம்’’ என மறுத்தான். சம்மதித்த மன்னரும் சாதுவனை பத்திரமாக காவிரிபூம்பட்டினம் அனுப்பினார். மீண்டும் ஆதிரையுடன் இணைந்த சாதுவன் இல்லறத்தில் ஈடுபட்டான். கற்புக்கரசியான ஆதிரை, வான மண்டலத்தில் ‘திருவாதிரை’ நட்சத்திர அந்தஸ்து பெற்றாள். அம்மையப்பனாகிய சிவனும் ஆதிரைக்கு பெருமை சேர்க்கும் விதமாக அதை தன் ஜன்ம நட்சத்திரமாக ஏற்றார். .................
|
|
|
|