|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அன்பும் பொறுமையும்! |
|
பக்தி கதைகள்
|
|
அந்த ஞாயிறன்று காலை எழுந்த போதே மனம் துள்ளிக் கொண்டிருந்தது. பச்சைப்புடவைக்காரியே என்னுள் வார்த்தைப் பிரவாகமாய் இறங்கிக் கொண்டிருந்தாள். அதையெல்லாம் அப்படியே எழுத வேண்டும் என்ற துடிப்புடன் கணினியின்முன் அமர்ந்தேன். அவளை ஒரு நொடி தியானித்ததும் எழுதத் தொடங்கினேன். ஆறு பக்கங்களைச் சில நிமிடத்தில் எழுதி முடித்தேன். திடீரென கணினி மக்கர் செய்தது. அடடா! இதுவரை எழுதியதையாவது பாதுகாக்கலாம் என நினைத்தேன். அதுவும் முடியவில்லை. சில நொடிகளில் கணினி முழுவதுமாகச் செயலிழந்தது. என் கோபம் கணினி மீதில்லை; அந்தக் கனகாம்பிகையின் மீதிருந்தது. “தாயே! உங்கள் வேலையைத் தானே நான் செய்தேன்! உங்கள் அன்பை நினைத்துத் தானே உருகினேன்! என் சுயநலத்திற்காக எழுதினாலோ, அடுத்தவரைக் காயப்படுத்த முனைந்தாலோ தடைகள் வரலாம். வார்த்தைகளால் உங்களை வழிபடும் போது இடையூறு வருவது அநியாயம் அல்லவா! உங்களுக்கு ஈரமே இல்லையா?” போட்டது போட்டபடி எழுந்தேன். சட்டையை மாட்டியபடி மனம்போன போக்கில் நடந்தேன். வழியில், “சாமி! உங்களைத்தான்!” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். குப்பை கூட்டும் ஒருத்தி தன் கூடையைத் துாக்கச் சிரமப்பட்டாள். “இந்தக் கூடைய என் தலையில வையுங்க, சாமி.” அதில் மக்கிப்போன குப்பைகள் இருந்தன. கூடையையும் குப்பைக்காரியையும் மாறி மாறிப் பார்த்தேன். முகம் சுளித்தேன். “மிக அசிங்கமாக இருக்குதோ? உன் மனதிலுள்ள குப்பையை விட இது ஒன்றும் அசிங்கம் இல்லை.” பச்சைப்புடவைக்காரியின் பாதங்களில் விழுந்து வணங்கினேன். “என்னப்பா என் மீது கோபமா?” “ஆம் தாயே நான் உங்களைப் பற்றித் தானே எழுதினேன். உங்கள் கருணையை நினைத்துத் தானே கண்ணீர் சிந்தினேன். அப்போது இடைஞ்சல் தரலாமா? “சொன்னால் புரியாது. செய்முறை விளக்கம் தருகிறேன். அங்கே நடப்பதைப் பார்.” அது ஒரு மத்தியதர குடும்பம் வசிக்கும் வீடு. அதில் ஐம்பது வயதுள்ள தாயும் அவளது 25 வயதுடைய மகனும் இருந்தனர். வெளியே போய் விட்டு அவசரமாக வீட்டிற்கு வந்த தாய் வாசல்படி தடுக்கிக் கீழே விழுந்தாள். வலி தாளாமல் துடித்தாள். மகன் ஓடி வந்து தாயைத் துாக்கினான். அக்கம் பக்கத்தினர் எல்லாம் வந்து விட்டார்கள். தாயை படுக்கையில் கிடத்தினார். கால் எலும்பு முறிந்திருக்கும் எனத் தோன்றியது. அது போக கூர்மையான பொருள் ஒன்று அவள் முழங்காலில் குத்தியதால் ரத்தம் நிற்காமல் வழிந்தது. 108 ஆம்புலன்சை அழைத்தனர். அரை மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவசரச் சிகிச்சைப் பிரிவில் முதலுதவி செய்து வலிக்கு மாத்திரை கொடுத்தனர். தாய் வலியில் முனங்கினாள். எலும்பு முறிவு மருத்துவர் வந்து விடுவார் என நர்ஸ் தெரிவித்தாள். நேரமாகிக் கொண்டே போனது. மருத்துவர் வரவில்லை. அரை மயக்க நிலையில் இருந்த தாயின் முனகல் ஒலி படிப்படியாக அதிகமாக தொடங்கியது. “டாக்டர் எப்ப தாங்க வருவாரு?” பொறுமையிழந்த மகன் நர்சிடம் கத்தினான். “வார்டுல தான் இருக்காரு. இப்ப வந்துருவாரு.” ஐந்து நிமிடம் கடந்தது. இனியும் மகனால் சும்மா இருக்கமுடியவில்லை. மருத்துவரை தேடி அவருடைய வார்டுக்கு ஓடினான். அங்கே ஒரு அறையில் டாக்டரும், இன்னொருவரும் ஒரு ஸ்கேன் அறிக்கையை ஆராய்ந்து கொண்டிருந்தனர். . “டாக்டர் ப்ளீஸ்! உடனே வாங்க. எமர்ஜென்சி வார்டுல எங்கம்மா துடிச்சிக்கிட்டு இருக்காங்க. ரத்தம் கொட்டிக்கிட்டு இருக்கு.” “யாருய்யா நீ? போய் அந்த நர்ச போன் பண்ணச் சொல்லு. நான் முக்கியமான வேலையா இருக்கேன்ல?” மருத்துவர் தன் பணியைத் தொடர்ந்தார். மகன் கொதித்தெழுந்தான். பாய்ந்து சென்று மருத்துவரின் சட்டையைப் பிடித்தான். “எங்கம்மா செத்துக்கிட்டு இருக்காங்க! இங்க உக்காந்து என்னய்யா பண்ணிக்கிட்டு இருக்க? எங்கம்மாவுக்கு ஏதாவது ஆச்சு மவனே செத்திருவ!” டாக்டர் பயத்தில் காட்டுக் கூச்சல் போட்டார். அங்கே கூட்டம் கூடியது. செக்யூரிட்டி ஆட்கள் ஓடி வந்தனர். இளைஞனைக் குண்டுக்கட்டாகத் துாக்கி அறைக்கு வெளியே போட்டனர். போலீசைக் கூப்பிட வேண்டும் என மருத்துவர் வற்புறுத்தினார். இன்னொரு மருத்துவர் அவரை சமாதானப்படுத்தியதோடு, இளைனுக்கு அறிவுரையும் சொன்னார். “நீ செஞ்சது தப்புப்பா. இங்க நிக்காத. உங்கம்மாகிட்ட போ. நான் டாக்டரை வரவைக்கறேம்ப்பா. “ மருத்துவமனையின் செக்யூரிட்டி அதிகாரி அவனை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார். அவனும் தாயைப் பார்க்க ஓடிவந்தான். அவள் முனகிக் கொண்டிருந்தாள். அவளது கையைப் பற்றியபடி மகன் சொன்னான்: “டாக்டர் வந்துருவாரும்மா. என்னால முடிஞ்சத எல்லாம் செஞ்சிட்டுத் தான் வந்திருக்கேன்.” “ அவர் சட்டையப் பிடிச்சி மிரட்டினியா? நீங்க வராட்டி கொன்னுடுவேன்னு சொன்னியா? எல்லாத்தையும் நர்ஸ் சொல்லிட்டாங்கடா. அவருக்கு ஆயிரம் வேலையிருக்கும். வேற ஒரு நோயாளிக்கு அவர் இன்னும் அதிகம் தேவைப்படலாம். யார எப்போ பாக்கணும், யார் எவ்வளவு நேரம் காத்திருக்கணும்னு டாக்டர்தாண்டா முடிவு செய்யணும். உயிரக் காப்பாத்தற தொழில்ல இருக்கறவருக்குக் கொலை மிரட்டல் விட்டிருக்கியே.. நீ ஒரு மனுஷனா? உன் முரட்டுத்தனத்தால கெடைக்கற வைத்தியம் வேணாம்டா. என் விதிப்படி நடக்கட்டும்.” “என்னம்மா இப்படிப் பேசற? உனக்காகத் தானேம்மா செஞ்சேன்?” “ அம்மாவுக்கு மகன் கிட்டருந்து பாசம் கெடைக்கறது முக்கியம் தாண்டா. ஆனா அதை விட முக்கியம் மகன் நல்ல மனுஷனா இருக்கறது. நீ நல்ல மனுஷனா நடந்துக்கலையே’’. “இந்தக் காயத்தை விட உன்னை நான் நல்லவனா வளர்க்கலேங்கற நெனப்பால வர்ற வலி அதிகமா இருக்குடா. போ, அந்த டாக்டரிடம் மன்னிப்பு கேளு. அவர் அடிச்சார்னா கூட வாங்கிக்கோ. அதுக்கப்பறம் அவருக்கு விருப்பம் இருந்தா எனக்கு வைத்தியம் செய்யட்டும் இல்லேன்னா வேற ஆஸ்பத்திரிக்குப் போகலாம்.” மகன் திகைத்தான். தாய் முனகியபடியே திரும்பிப் படுத்துக் கொண்டாள். “அதுக்கு அவசியமே இல்லம்மா. இதோ வந்துட்டேன். தாமததுக்கு மன்னிக்கணும். ஆப்ரேஷன் தியேட்டர்ல இருக்கற ஒரு நோயாளிக்கு என்ன செய்யணும் டாக்டர் ஒருத்தர் கேட்டுக்கிட்டிருந்தாரு. இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ள வாழ்வா சாவான்னு முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம். அதான் லேட்டாயிருச்சி. கவலைப்படாதீங்க. பச்சைப்புடவைக்காரி இருக்கா. எல்லாம் சரியாயிரும்.” காட்சி முடிந்தது. “அந்தத் தாயின் மனநிலையில் தான் நானும் இருக்கிறேன். என்னைப் பற்றி எழுதுவதும் என் மீது அன்பைக் கொட்டுவதும் மகிழ்ச்சி தான். ஆனால் உன்னிடம் பொறுமை குறைந்து கொண்டே வருகிறது இப்படியே போனால் அடுத்தவரைப் புண்படுத்தத் தொடங்குவாய். நல்லவர்கள் பொறுமை இழந்து அசுரர்களாவது இப்படித் தான். அதனால் தான் அப்படி ஒரு நாடகம் நடத்தினேன்.” “தாயே! இனி உங்களைப் பற்றி எழுத முடியாமல் போனாலும் கவலைப்படமாட்டேன். உங்கள் அன்பைப் பற்றி எழுத வேண்டும் என நீங்கள் நினைத்தால் எழுதுகிறேன். உங்கள் கோயிலுக்கு வருவோரின் செருப்புகளை எடுத்து வைக்கும் வேலையைச் செய்ய நீங்கள் நினைத்தால் அதையே செய்கிறேன். நான் உங்கள் கொத்தடிமை என்பதை மறந்து பொறுமை இழந்து விட்டேன். இனி ஒருமுறை கூட வழி தவறாமல் இருக்க அருள்புரியுங்கள் தாயே!” தெய்வீகப் புன்னகையால் அதைத் தருவதாக தெரிவித்தாள். அருகில் இருந்த குப்பைக்கூடையைத் துாக்க முயன்றேன். அது மாயமானது. அன்னையும் மறைந்தாள். ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தேன். குளித்துவிட்டு அபிராமி அந்தாதியில் சில பாடல்களைச் சொல்லி விட்டு கணினியின் முன் அமர்ந்தேன். கணினி உயிர் பெற்றிருந்தது. நான் எழுதிய பக்கங்கள் அப்படியே இருந்தது. பத்திரப்படுத்திக் கொண்டு மீண்டும் எழுதத் தொடங்கினேன். எழுத்துக்கள் கணினித் திரையில் வந்து கொண்டிருந்தன. விழியில் இருந்து கண்ணீரும் வழிந்து கொண்டிருந்தது. |
|
|
|
|