|
அன்று வெள்ளிக்கிழமை காலையில் விசாலம், மகள் மாலாவுடன் கோயிலுக்கு கிளம்பினாள். மெல்லிய குரலில் பாடியபடி நடந்தாள். கோபுரம் கண்ணில் பட்டதும் வணங்கினாள். சுவாமி தரிசனம் முடித்து வீட்டுக்குப் புறப்பட்டனர். விசாலம் சன்னதி தெருவைத் தாண்டினாள். அருகில் கார் ஒன்று வந்து நின்றது. காரிலிருந்து கோமளா எட்டிப் பார்த்தாள். ‘‘என்னடி விசாலம்! எப்படி இருக்கே?’’ என நலம் விசாரித்தாள். ‘‘நிறைஞ்ச வெள்ளிக்கிழமையும் அதுவுமா உன்னைப் பார்த்தா மகாலட்சுமி மாதிரி இருக்கடி!’’ என்றாள். காரில் வரும்படி விசாலத்தை அழைத்தாள். பள்ளிக்கூட தோழி என்பதால் மறுக்காமல் மகளுடன் ஏறினாள். விசாலம் வீட்டை அடைந்ததும், விசாலம் தோழியை தன்னுடன் அழைத்தாள். கோமளத்தின் பட்டுப் புடவையும், நகைகளும் விசாலத்தின் மனதை சலனப்படுத்தியது. இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. டீ கொடுத்து தோழியை அனுப்பி வைத்தாள். கார் புறப்பட்டதும் விசாலத்தின் மனக்குதிரை நாலாபுறமும் ஓடத் தொடங்கியது. இருவரும் பள்ளி சென்ற காலங்கள், தனக்கு உள்ளூரில் குமாஸ்தா மாப்பிள்ளை அமைந்தது, கோமளத்திற்கு ஆபீசராக இருக்கும் டவுன் மாப்பிள்ளை அமைந்தது என நினைவுளில் மூழ்கினாள். காலை சாப்பாடு முடிந்ததும், மாலா பள்ளிக்கும், விசாலத்தின் கணவர் சதாசிவம் அலுவலகத்திற்கும் புறப்பட்டனர். இருவரும் கிளம்பியதும் தனிமையுணர்வு விசாலத்தை படுத்தியது. பூஜையறைக்குள் நுழைந்தாள். ‘‘அப்பனே! ஈஸ்வரா! தினமும் உன்னை பூஜை செய்றேன். என்னோட ஆசைகளை ஏன் பூர்த்தி பண்ண மாட்டேங்கிற. கோமளமும், நானும் எப்படியெல்லாம் சின்ன வயசுல பழகினோம். இப்போ அவளைப் பார்த்தா பொறாமையா இருக்கு! கழுத்து நிறைய நகையோட காரில ஊரைச் சுத்துறாளே! ஆனால என்னை மட்டும் இப்படி வச்சுட்டியே,’’ என ஆதங்கத்தைக் கொட்டினாள். பதினோரு மணியானதும், தினமும் பார்க்கும் நாடகத்தைப் பார்க்கலாம் என ‘டிவி’யை ஆன் செய்தாள். ஒரு சேனலில் அடியவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். அதில், ‘‘பக்தியாக இருந்தால் நினைப்பதெல்லாம் நடக்கும் என எண்ணக்கூடாது. பக்தனுக்கும் இன்பமும் துன்பமும் மாறி மாறியே வரும். கடவுள் கொடுத்ததை விரும்பி ஏற்றுக் கொண்டால் தான் நிம்மதி கிடைக்கும். இருக்கிறதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதீர்கள். கிடைத்ததில் இருக்கும் நல்லதை தேடுங்கள்,’’ என்றார். விசாலத்திற்காகவே சொல்வது போலிருந்தது. அன்பான கணவர், பாசமான மகள், அளவான வருமானம் என தனக்கு கிடைத்த நல்லதெல்லாம் கண்முன் தெரிந்தன. நன்றியுணர்வுடன் சமையல் செய்ய அடுப்படிக்குள் நுழைந்தாள். |
|
|
|