|
மங்களபுரியைச் சேர்ந்தவர் பண்ணையார் ராமசாமி. சிவபக்தரான அவர் தன்னை நாடி வருவோருக்கு மறுக்காமல் உதவுவார். அவரை சோதிக்க முடிவெடுத்தார் சிவபெருமான். பருவமழை பொய்த்தது. வறட்சியால் பண்ணை வருமானம் குறைய ஆரம்பித்தது. பணியாளர்கள் பலரும் பிழைப்பு தேடி வெளியூர் சென்றனர். விசுவாசம் கொண்ட சிலர் மட்டுமே அவருடன் ஒட்டியிருந்தனர். ஒரு கட்டத்தில் பண்ணையாருக்கு பணநெருக்கடி அதிகமானது. ஆனாலும் அவர் தளரவில்லை.
ஒருநாள் பண்ணையார் சாப்பிட அமர்ந்த போது, வாசலில் முதியவர் ஒருவர் பசியால் கதறினார். தன் உணவை அவருக்குக் கொடுத்த பண்ணையார், குடிப்பதற்கு தண்ணீரை எடுத்தார். உணவு பெற்ற முதியவர், தண்ணீரையும் தருமாறு கேட்டார். ஆனால், அதற்கும் மறுக்கவில்லை. தண்ணீர் குடித்த உடனே முதியவர், சிவபெருமானாக மாறி காட்சியளித்தார். ‘‘கஷ்டத்திலும் மற்றவர் மீது இரக்கம் காட்டும் உனக்கு விரும்பும் வரத்தை அளிக்க விரும்புகிறேன்’’ என்றார் சிவன்.‘‘ சுவாமி! பஞ்சம் நீங்கி ஊரெங்கும் செழிக்கவும், ஊர் மக்கள் நலமுடன் வாழவும் அருள்புரிய வேண்டும்’’ என்றார். சிவனும் வரமளித்து மகிழ்ந்தார்.
|
|
|
|