|
குரங்கு ஒன்று மாமரத்தில் விளையாடியது. அங்கு பறித்த பழம் ஒன்றை சுவைத்தபடியே தன் இருப்பிடம் வந்தது. பழத்தின் கொட்டையை மண்ணில் போட்டபோது யோசனை ஒன்று தோன்றியது. கொட்டையை புதைத்து மரமாக வளரச் செய்தால் இஷ்டத்திற்கு பழங்களை சாப்பிடலாமே என எண்ணியது. மாங்கொட்டையை புதைத்து தண்ணீர் விட்டது. அன்றிரவு குரங்கின் மனம் மாம்பழம் பறித்து சாப்பிடுவதில் தான் இருந்ததே தவிர மரத்தை வளர்ப்பதில் இல்லை.
காலையில் எழுந்ததும் மாமரம் முளை விட்டுள்ளதா என ஆராய்ந்தது. மண்ணைத் தோண்டி மாங் கொட்டையை எடுத்தது. கொட்டை இருப்பதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டது. மீண்டும் அதை புதைத்து நீர் ஊற்றியது. தினமும் இப்படி எடுத்துப் பார்ப்பதும், புதைப்பதுமாகவும் இருந்தது. இப்படி செய்தால் முடிவு என்னாகும்? மாமரம் முளை விடவே இல்லை. கோபம் வந்தது குரங்குக்கு. ஒருநாள் காலையில் மாங்கொட்டையை எடுத்து காட்டிற்குள் வீசியது. ஆசை நியாயமானது என்றாலும் குரங்கின் அவசரம் நியாமானதல்ல. எல்லாவற்றிற்கும் காலம் அவசியம் தேவைப்படுகிறது. செயலில் வெற்றி வேண்டுமானால் முயற்சியுடன், அதற்குரிய காலம் அவசியம்.
|
|
|
|