|
“நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன். கொஞ்சம் பார்த்துத் திருத்தி தருகிறாயா?” உருவெளிப்பாடாக என்முன் தோன்றிய பச்சைப்புடவைக்காரியின் திருவடிகளில் விழுந்து வணங்கினேன். ‘‘இது என்ன கொடுமை, தாயே! இந்த பிரபஞ்சத்தில் இதுவரை எழுதப்பட்ட எழுத்திற்கும், இனி வரும் எழுத்திற்கும் நீங்கள் மட்டுமே சொந்தக்காரர். நீங்கள் போய் என்னிடம்...’’ “நான் காகிதத்தில் எழுதவில்லை. காட்சியாகவே படைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்தைச் சொல்லேன்.” ஒரு நகரத்தின் பிரம்மாண்டமான கலை அறிவியல் கல்லுாரிதான் அன்னையின் கதைக்களம். நான்காயிரம் மாணவர்கள் அங்கு படிக்கின்றனர். கல்லுாரியின் முதல்வராக யாரைத் தேர்ந்தெடுப்பது என நிர்வாகக் குழு மண்டையை உடைத்துக் கொண்டிருந்தது. பணி மூப்பு, கற்பிக்கும் திறன், நிர்வாக திறமை, நேர்மை என அனைத்திலும் தகுதி பெற்றிருந்தவர் ஆங்கிலத் துறை பேராசிரியர் சுந்தரம் தான். அவரையே ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அதில் ஒரு சிக்கல். கல்லூரி குறிப்பிட்ட மதத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. முதல்வர், தாளாளர் போன்ற உயர்பதவிகளில் இருப்பவர்கள் அதே மதத்தைச் சார்ந்தவர்களாகத் தான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. நிர்வாகக்குழுத் தலைவர் சுந்தரத்தைத் தனியாகச் சந்தித்தார். “சுந்தரம், நீங்க ப்ரின்சிபல் ஆகணுங்கறதுதான் எல்லோரின் விருப்பம். ஆனா...மதம் வந்து குறுக்க நிக்குது.” “அதுக்கு என்ன சார் செய்ய முடியும்?” “எங்க மதத்துக்கு மாறினதா நடிங்க. ஒரே ஒருநாள் நான் சொல்ற இடத்துக்கு வாங்க. அங்க இருக்கறவங்க சொல்றத செய்யுங்க. நீங்க மதம் மாறியதா ரெக்கார்ட் தயார் பண்ணிக்கறோம். அடுத்த மாசமே பிரின்சிபல் ஆயிடலாம். அப்புறம் தேவைப்பட்டா ரகசியமா உங்க மதத்துக்கே மாறிடலாம்.“ “நீங்க சொல்றபடி நடந்துக்கிட்டா ரெண்டு மதத்துக்கும் உண்மையானவனா இருக்க முடியாது சார். மதம் மாறினாத்தான் முதல்வர் பதவின்னா... பதவியே வேண்டாம் சார்.” “சுந்தரம்...இன்னும் 15 வருஷ சர்வீஸ் இருக்கு. இப்ப பிரின்சிபல் ஆனா அமெரிக்காவுக்குப் போற வாய்ப்பு இருக்கு. ரிட்டயரானதும் அங்கேயே ஆயிரக்கணக்கான டாலர் சம்பாதிக்கற மாதிரி ஆசிரியர் வேலையும் ஏற்பாடு செஞ்சி தருவோம்.” “அதுக்கு மதம் மாறியாகணும் இல்லையா?” “அது ஒரு பார்மாலிட்டி. சடங்கு தான்’’ ‘‘எனக்கு ஆன்மிகம் பார்மாலிட்டி கிடையாது சார். அதுதான் என்னோட மொத்த வாழ்க்கையும். நான் மதுரைக்காரன் சார். பச்சைப்புடவைக்காரி தவிர வேற எந்த தெய்வத்தையும் வணங்காதவன். என்னால் சத்தியமா மதமாற்றத்த யோசிச்சிக்கூடப் பார்க்கமுடியாது. உங்களுக்குப் பிரச்னை வரும்னு நெனச்சீங்கன்னா ‘எனக்கு பிரின்சிபலாக இஷ்டம் இல்லை’ன்னு எழுதித் தந்துடறேன்.” “அது போதும் சுந்தரம். ரொம்ப தேங்க்ஸ்.” சுந்தரத்துக்கு அடுத்த நிலையில் இருந்த ராமலிங்கத்துக்கு வாய்ப்பு தரலாம் என நிர்வாகக்குழு தீர்மானித்தது. மதமாற்ற விஷயம் எப்படியோ வெளியில் தெரிந்துவிட்டது. இளங்கலை இலக்கியம் படிக்கும் ராஜன் கொதித்து எழுந்தான். மாணவர் சங்கத் தலைவனான அவனுக்கு மாணவர் மத்தியில் செல்வாக்கு அதிகம். அவனது தந்தையும் ஒரு அரசியல் தலைவர். மாணவர்களை அவன் அணிதிரட்டத் தொடங்கியதால் பெரியளவில் புரட்சி வெடிக்கும் என எதிர்பார்த்தனர். சுந்தரத்தை ராஜனிடம் பேச ஏற்பாடு செய்தனர். ராஜனைப் பொறுத்தவரை சுந்தரம் தான் தெய்வம். ராஜன் முதலாம் ஆண்டு படித்த போது, சக மாணவர்களுடன் சேர்ந்து அவன் வளாகத்தில் மது குடித்ததற்காக கல்லுாரியில் இருந்து நீக்கப்பட இருந்தனர். மாணவர்களின் வாழ்வை அழித்துவிட வேண்டாம் என நிர்வாகத்திடம் மன்றாடினார் சுந்தரம். “உங்களின் பொறுப்பில் மாணவர்களை எடுத்துக்கொண்டு திருத்த தயாரா? பின்னால் பிரச்னை வந்தால் உங்களையும் சேர்த்து வெளியே அனுப்புவோம்.” என நிர்வாகம் மிரட்டியது. சவாலை ஏற்ற சுந்தரம், தினமும் மாணவர்களோடு பேசி மதுவால் வரும் தீமைகளை புரியவைத்து, இலக்கியத்தில் இருக்கும் இனிய போதையை அறிமுகப்படுத்தினார். மதுவை கைவிட்ட அவர்கள், இலக்கியத்தை ஆர்வமுடன் கற்கவும் முன்வந்தனர். கல்லுாரியிலேயே இலக்கிய அமைப்பைத் தொடங்கி நாடகம், பேச்சுப்போட்டி, நடனம் என அவர்களுடைய ஆற்றலை நல்வழிப்படுத்தினார் சுந்தரம். அவர்கள் அனைவருக்கும் சுந்தரம் தான் குரு, தெய்வம் எல்லாம். “சார் எங்களுக்கு நீங்கதான் பிரின்சிபால் ஆகணும். ராமலிங்கம் வந்தாப் புரட்சி வெடிக்கும். ரத்த ஆறு ஓடும்.” “எனக்கு இஷ்டம் இல்ல.” “எங்ககிட்ட கதை விடாதீங்க. எனக்கு மதமாற்ற நிபந்தனை தெரியும். அது வெளில தெரிஞ்சா மதக்கலவரமே வெடிக்கும். ஆமா, சொல்லிட்டேன்.” இதைக் கேட்ட சுந்தரம் நடுங்கினார். சுந்தரம் – ராஜன் பேசிக்கொண்ட விஷயம் நிர்வாகக் குழுத் தலைவருக்குத் தெரிய வந்தது. “ராஜன் என்ன வேணும்னாலும் செய்வான். உயிர்ப்பலி ஆச்சுன்னா அந்தப் பாவம் உங்களுக்குத்தான். தெய்வமே உங்களச் சும்மா விடாது..” – நிர்வாகக் குழுத் தலைவர் சுந்தரத்தை போனில் மிரட்டினார். அன்று இரவு சுந்தரம் சாப்பிடவில்லை. தலையைப் பிடித்துகொண்டு அமர்ந்தார். அவரது மனைவி மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகச் சொல்லியும் ஏற்கவில்லை. “இந்த உலகத்துல நல்லவனா இருப்பது தப்புன்னு இப்போதான் தெரியுது. இனி நல்லவனா இருக்க மாட்டேன் ” எனக் கத்திவிட்டு வீட்டை விட்டு ஓடினார். மறுநாள் கல்லுாரியே கலவரப்பட்டுக் கொண்டிருந்தது காரணம்? பொறுப்பான பேராசிரியரே போதையில் மது பாட்டிலுடன் கல்லுாரிக்கு வந்தால். .. மாணவர்கள் முகம் சுளித்தனர். சக ஆசிரியர்கள் கேலியாக பார்த்தனர். தகவல் கசிந்து பத்திரிகை நிருபர்களும் வந்து விட்டனர். போதையில் மயங்கிய சுந்தரம் விழுந்து கிடந்ததை படம் பிடித்தனர். “எங்களக் குடிக்காதன்னு சொன்ன நீங்களா இப்படி?” – ராஜன் கதறினான். “போடா போக்கத்த பயலே!” “உங்களுக்காகப் போராடணும்னு நெனச்சேன் பாருங்க எனக்கு பாடம் கத்துக்கொடுத்திட்டீங்க சார்.” சுந்தரம் கைது செய்யப்பட்டார். ஊடகங்களில் அவர் பெயர் நாறிவிட்டது. வேலை பறி போனது. எங்கோ ஒரு பள்ளியில் சொற்ப சம்பளத்துக்கு ஆசிரியராக இருப்பதாக தகவல் வந்தது. “அநியாயமாக சுந்தரத்தைக் கெடுத்து விட்டீர்களே தாயே! தவறு செய்து விட்டீர்களே! நல்ல மனிதர் பிரச்னை காரணமாக மதுவிற்கு அடிமையாவதை என்னால்...”” “முட்டாள்! சுந்தரம் மதுவிற்கு அடிமையாகவில்லை. “என்னால் கலவரம் வந்து விடக்கூடாதே” என அன்றிரவு மூடியிருந்த என் கோயிலின்முன் நின்று கதறினார். ‘எனக்கு வேறு வழி எதுவும் புலப்படாவிட்டால் தற்கொலை செய்வேன்’ என்றும் சொன்னார். நான் வழிகாட்டினேன்.” “என்ன வழி?” “சுந்தரம் குடிக்கவில்லை. குடித்தது போல் நடித்தார். தன் பெயர், புகழ், வேலை என அனைத்தையும் தியாகம் செய்து ஒரு பெரிய கலவரத்தைத் தடுத்தார்.” “ஆனால் பாவம் அவர்...’’ “மனதில் இத்தனை அன்பு இருக்கும் சுந்தரம் இன்னும் சில காலத்தில் மகானாக மாறுவார். மக்கள் அவரைத் தெய்வமாக நினைத்து வழிபடுவர். உரியகாலத்தில் என்னை வந்தடைவார். அது சரி நீ ஏனப்பா அழுகிறாய்?” “என் அரைகுறை அறிவைக் கொண்டு எத்தனை முறை உங்களைப் பழித்திருக்கிறேன்? இப்போதுகூட நீங்கள் தெய்வம் என தெரிந்திருந்தும் அன்பே வடிவானவர் என அறிந்திருந்தும் நீங்கள் செய்தது தப்பு எனச் சொன்னேனே என்ன தண்டனை தரப் போகிறீர்கள்?” “அருகே வா.” சென்றேன். பச்சைப்புடவைக்காரி என் தலையில் கை வைத்து ஆசியளித்தாள். இன்னும் பெரிதாக அழ ஆரம்பித்தேன்.
|
|
|
|