|
விபீஷணன் வெகுவிரைவில் ராமர் படையுடன் இணைந்தான். ராவணனின் பலம், பலவீனத்தை ராமனுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு அவனுக்கு அளிக்கப்பட்டது. இருந்தாலும், தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படவில்லை. ஏற்றத்தாழ்வு கருதாமல் அனைவரிடமும் நட்புடன் பழகினான். அவனது நல்ல குணத்தை பாராட்டினாலும், மனதிற்குள் அனைவரும் சந்தேகப்படவே செய்தனர். அரக்கர் குலத்தில், ராவணனுக்கு தம்பியாக பிறந்தாலும் இத்தனை உயர்ந்த பண்புகள் இவனுக்கு எப்படி வந்தது? என யோசித்தனர். . போருக்கான செயல்களில் ஈடுபட்டான் ராமன். பாலத்தின் வழியாக இலங்கையை அடைந்தபின், அங்கிருந்து தாக்குதலை எப்படி தொடங்குவது என விபீஷணனுடன் ஆலோசித்தான். இந்த சந்தர்ப்பத்தில் லட்சுமணன், அனுமன் உள்ளிட்ட சிலருக்கு தன் மீது சந்தேகம் இருப்பது விபீஷணனுக்கு புரிந்தது. தன்னிலை குறித்து விளக்கம் அளிக்க அவனே முன்வந்தான். ‘‘நீங்கள் சந்தேகப்படுவது நியாயம் தான். ஆரம்பம் முதலே அநீதிக்கு எதிராகவே நான் வாழ்ந்திருக்கிறேன். இப்போது தான் நான் ராமனைத் தஞ்சம் அடைந்ததாக கருத வேண்டாம். இதுவரை ராமனை நான் சந்திக்கவில்லை என்றாலும், அவரது நற்குணத்தால் ஏற்கனவே கவரப்பட்டு விட்டேன் என்றே சொல்ல வேண்டும்’’ என்றான். இதைக் கேட்ட அனைவரும் விபீஷணனை உன்னிப்பாக கவனித்தனர். ‘‘என் அரண்மனை பூஜையறையில் ‘ராம’ என்று எழுதி வைத்து தினமும் தியானத்தில் ஈடுபடுவேன். என் மகளான திரிசடையும் என்னுடன் தியானம் செய்வாள்’’ ராமனை தெய்வமாகக் கருதிய வேடன் குகனைப் போன்றவன் விபீஷணன் என்பது அவர்களுக்குப் புரிந்தது. ‘‘சீதையைக் கவர்ந்து இலங்கையில் சிறை வைத்தான் ராவணன் என்ற செய்தியை கேள்விப்பட்ட நானும், என் மகளும் வருந்தினோம். முக்கியமாக எனக்கு அந்த இழப்பின் தாக்கம் எத்தகையது என்பது புரிந்தது. ஏனெனில் நான் மனைவியை இழந்தவன். இயற்கை விதியின்படி மனைவியை இழந்தேன். அது யாராலும் தவிர்க்க முடியாதது, பிரிவும் வாழ்வின் அம்சம் தான் என சமாதானம் சொன்னாலும், மனைவியின் நினைவிலேயே மீதி வாழ்நாளை கடத்த வேண்டும் என்பது சிரமமான ஒன்றே! அதனால் சீதை அபகரிக்கப்பட்ட கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. ராமனின் மனம் என்ன பாடுபடும் என கவலை கொண்டேன். அரக்க நிலையில் இருந்து மாறுபட்ட எனக்கு இந்த சம்பவம் அக்கிரமமானதாகத் தோன்றியதில் வியப்பேதும் இல்லை. ராவணனுக்கு எதிராக என் கருத்துக்களைப் பேசினேன். தர்மத்துக்குப் புறம்பாக அவன் நடப்பதை பலமுறை சுட்டிக் காட்டினேன். அது பிடிக்காததால் என்னை எதிரியாக கருத ஆரம்பித்தான் ராவணன். ஒற்றர்கள் மூலம் கண்காணித்தான். என்னுடைய மற்ற சகோதரர்களிடம், என்னை வெறுத்து ஒதுக்குமாறு கட்டளையிட்டான். ஒருமுறை என் அரண்மனைக்கே வந்து என்னை சந்தித்தான். ‘‘விபீஷணா! நீ ராமனை பூஜிக்கிறாயா? ஒற்றர்கள் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது’’ என்று சொல்லி பூஜையறைக்குள் நுழைந்தான். அங்கே ‘ராம’ என எழுதப்பட்ட பலகை இருப்பதைக் கண்டு வெகுண்டான். ‘என்ன இது? யார் இதை இங்கு வைத்தது?’ என அதிகார தொனியில் கேட்டான். பதிலளிக்க முடியாமல் நான் தயங்கினேன். அப்போது திரிசடை, ‘என்ன பெரியப்பா இப்படி கேட்கிறீர்கள்? உங்கள் தம்பி உங்களையும், பெரியம்மாவையும் தான் பூஜிக்கிறார்’’ என்றாள். குழப்பத்துடன் பார்த்தான் ராவணனிடம், ‘‘ஆமாம் பெரியப்பா! உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘ரா’, பெரியம்மா மண்டோதரியில் உள்ள முதல் எழுத்து ‘ம’. இரண்டையும் சேர்த்தால் ‘ராம’ என்று தானே வரும். அதைத் தான் அப்பா பூஜை செய்கிறார். அவரைப் போய் சந்தேகப்படலாமா?’ என சமாளித்தாள். ராவணனும் அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் கிளம்பினான். ராமன் மீதுள்ள ஈர்ப்பால் அரக்க இனத்தில் இருந்தே அறவே விலகி இப்போது சரணாகதியடைந்து விட்டேன்’’ என்றான். விபீஷணனின் விளக்கம் கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். ‘‘நாக்கு போல விபீஷணன் மிக மென்மையானவன்’’ என்றான் ராமன். ‘‘அது எப்படி?’’ என அனைவரும் கேட்டனர். ‘‘ஆமாம்! உறுதியான 32 பற்களுக்கு இடையே இருக்கும் நாக்கு போல இவன் சிறைபட்டிருந்தான்! முரட்டுத் தனமான பற்கள் உணவை மெல்ல நாக்கு உதவுகிறது. ஆனால் பற்கள் சிலசமயம் அந்த நாக்கையே கடித்து விடும். ஆனாலும் நாக்கு அமைதி காக்கும். ஏனெனில் உடலுக்கு வயதாக ஆக பற்கள் உறுதியிழந்து விழும். ஆனால் தான் மட்டும் உயிர் நீங்கும் வரை நிலைத்திருப்போம் என்பது நாக்குக்கு தெரியும். ‘‘நாக்கு போல மென்மை குணம் மாறாத பண்பாளன் விபீஷணன்’’ என்று விளக்கினான். ஆனந்தக் கண்ணீர் சிந்திய விபீஷணனைக் கண்ட அனைவரும் மனம் நெகிழ்ந்தனர்.
|
|
|
|