|
சிவன் கோயில் தர்மகர்த்தாவான பண்ணையாரும், அர்ச்சகரும் நெருங்கிய நண்பர்கள். அர்ச்சகர் திருமணம் செய்யாமல், தன் வாழ்வை கடவுளுக்காக அர்ப்பணித்ததை எண்ணி பண்ணையார் ஆச்சரியப்படுவார். இந்நிலையில் நம் காலம் முடிவதற்குள் பழுதடைந்த கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அவ்வப்போது அர்ச்சகர் சொல்வர். பக்தர் என்றாலும் கோயிலுக்குப் பணம் செலவழிக்க யோசித்தார்பண்ணையார். நாளை பார்க்கலாம், பிறகு பார்க்கலாம் என நாட்களை கடத்தி வந்தார். திடீரென ஒருநாள் நோய்வாய்ப்பட்டார் பண்ணையார். நகரத்திலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுநீரகத்தை மாற்றினால் தான் தப்பிக்கலாம் என்ற நிலையில் உயிருக்கு போராடினார். நலம் விசாரிக்க சென்ற அர்ச்சகரைக் கண்டதும் பண்ணையார் அழுதார். ‘‘ நீ சொன்னது போல என் செல்வத்தை கோயில் திருப்பணிக்காக செலவு செய்திருந்தால் நன்றாக இருக்குமே! இப்போது நோயாளியாக விட்டேனே! காலம் ஒத்துழைக்கும் போதே திட்டமிட்ட பணியை முடிக்க வேண்டும்!’’ என்றார். தகுந்த காலத்தில் விதை ஊன்றி அந்தந்த நேரத்தில் பராமரித்தும் வந்தால் பயிர் அமோகமாக விளையும். அதுபோல நல்லதைச் செய்ய கிடைக்கும் வாய்ப்பை உடனடியாக பயன்படுத்த வேண்டும்.
|
|
|
|