|
கிராமத்து இளைஞன் கண்ணனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. அலுவலக நண்பர்கள் தங்கி இருக்கும் இடத்தில் தங்கினான். கண்ணனின் பெற்றோர் பணம் அனுப்புவான் எனக் காத்திருந்தனர். ஆனால் ஏமாற்றம் மிஞ்சியது. அலுவலகத்தில் புதியவர்களோடு பழகினான். அவர்களைப் போலவே ஆடம்பரமாக செலவழிக்கத் தொடங்கினான். சம்பளம் பணம் கரைந்தது. ஒருமாதம் கழித்து கண்ணனின் அப்பா, செலவுக்கு பணம் வாங்கலாம் என மகனைக் காண வந்தார். அப்பாவைக் கண்ட கண்ணன் பயத்துடன் நண்பர்களிடம் கடன் வாங்கி கொடுத்தனுப்பினான். நாளடைவில் கடன் ஏற்பட்டது. அவனது மனதில் மகிழ்ச்சி இல்லாமல் போனது. அவனது வாட்டம் கண்ட மேலாளர், ‘‘கண்ணா! உன் கவலைக்கான காரணத்தை தெரிஞ்சுக்கலாமா?’’ என விசாரித்தார். தன் நெருக்கடி நிலையை சொல்லி வருந்தினான். ‘‘ நீண்ட துாரம் நடந்து களைத்தவன், தாகம் தணிக்க உப்புநீரைக் குடித்த கதையாக இருக்குதே உன் நிலை! ஆடம்பர நண்பர்களோடு ஒப்பிட்டு உன் வாழ்வை தொலைக்காதே! சிக்கனமாக இருந்து முன்னேறும் வழியைப் பார்! நானும் கிராமத்தில் பிறந்து வந்தவன் தான். பதவி, பணம் வரும் போது பழசை மறந்து விடாதே! பணத்தின் அருமையை உணர்ந்து சேமிக்கும் வழியைப் பார்.’’ என்றார். அறிவுரை கேட்ட கண்ணன் திருந்தினான். |
|
|
|