Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அடுத்த அவதாரத்துக்கான ஒத்திகை?
 
பக்தி கதைகள்
அடுத்த அவதாரத்துக்கான ஒத்திகை?


தன்னை நம்பி ஏற்றுக் கொண்ட ராமனுக்கு எப்படி உதவலாம் என்றும், ராவணனுக்கு எதிரான போரில் என்ன உத்திகளை கையாண்டால் வெற்றி கிடைக்கும் என்றும் விபீஷணன் சிந்தித்தான். ஆனாலும் அவனது மனதில் மகள் திரிசடை குறித்து வேதனை இருக்கவே செய்தது. அவள் அசோகவனத்தில் சீதைக்கு காவல் புரிவாளா? அவளுக்கு ஆறுதல் சொல்லி தேற்றுவாளா? ராமனை நான் சரணடைந்ததால் மனபலம் குன்றியிருப்பாளா? என் மீதுள்ள கோபத்தில் ராவணன் அவளைப் பழி வாங்குவானா? என பலவிதமாக மனம் குழம்பினான்.  
ஆனால் அவள் துணிச்சலுடன் செயல்பட்டு ராவணனைச் சமாளிப்பாள் என ஒருபுறம் சமாதானமும் சொல்லிக் கொண்டான்.
அவனது எண்ண ஓட்டத்தை கவனித்த ராமன் அருகில் வந்தான்.
 ‘‘ என்ன விபீஷணா கலக்கத்தில் இருப்பது போலத் தெரிகிறதே!’’ என்றான்.
ராமனின் குரலில் தான் எத்தனை அன்பு! அதற்கும் மேலாக அவனது கருணை பொழியும் கண்கள். மற்றவரை வசீகரிக்கும் புன்னகை... இந்தப் பிறவி என்றில்லாமல் இனி எந்த பிறவி எடுத்தாலும் ராமனுடன் நெருக்கமாகும் பாக்கியம் வேண்டும் என பிரார்த்தித்தான்.
எனவே தன் கவலையை ராமனிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை எழுந்தது.
‘‘ ஐயனே.. என் மகள் திரிசடையின் ஞாபகம் வந்து விட்டது. தாயை இழந்த அவளை பரிவுடன் வளர்த்தேன். அன்பும், கருணையும் அவளிடம் இயல்பாகவே இருந்தன.  உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவள் என்பதால் அசோகவனத்தில் சீதைக்கு இப்போது வரை துணையாக இருக்கிறாள்’’ என்றான். அவன் கூறியதைக் கேட்ட ராமனிடம் சலனம் ஏதுமில்லை.  அமைதியாக நின்றான் ராமன்.
ராமனின் மவுனம் விபீஷணனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மென்மையான மனதுடையவன் ராமன். மற்றவர் துன்பம் போக்குபவன். நல்லவர்களைக் காப்பதற்காக கொடியவர்களைத் தாக்கத் தயங்காதவன். அதாவது தேவையான சமயத்தில் சட்டென்று கோபத்தை வெளிப்படுத்தி கொடியவர்களை தண்டிப்பவன். திரிசடை பற்றிய கவலை தனக்கு இருப்பதை அறிந்ததால், ராவணன் மீது கோபம் கொள்ளக் கூடியவன் தான் ராமன். ஆனாலும் இப்போது ஏன் அமைதி காக்கிறான்?  கொடிய ராவணனின் கோட்டைக்குள் சிரமப்படும் என் மகளின் வேதனை அவனுக்கு புரியவில்லையா? இப்படி புன்னகைத்தபடி என்னைப் பார்க்கிறானே….! ’’ என பலவாறு யோசித்தான்.
‘நான் விரைவில் ராவணனை வீழ்த்தி சீதையோடு உன் மகளையும் மீட்பேன்’ என்று சொல்ல மாட்டானா என எதிர்பார்த்தான்.  
விபீஷணனுக்கு புரியாத அவதார ரகசியம் ஒன்று இருந்தது. அடுத்த கிருஷ்ண அவதாரத்திற்கான ஒத்திகை தான் இது. ஆனால் விபீஷணனுக்கு அது புரியவில்லை.  
இது எப்படி ஒத்திகையாகும்?
ஆமாம், தர்மத்தை நிலைநாட்ட உறவுகள் இடையூறாக இருக்கக் கூடாது என கிருஷ்ணன் எதிர்காலத்தில் உபதேசம் செய்யப் போகிறான். குருக்ஷேத்திர போரில் எதிரணியில் பங்காளிகள் நிற்பதால் செய்வதறியாமல் வில், அம்புகளை கீழே நழுவ விட்டு அழப் போகிறான் அர்ஜுனன். அவனைத் தேற்றி, ‘எதிரே நிற்பவர்கள் உறவினர் அல்லர், அதர்மத்துக்குத் துணை போன காரணத்தால் உணர்வற்ற துாண்கள். அவற்றை அம்பெய்தி சாய்த்து விடு,’ என கீதையை உபதேசித்து தைரியமூட்டப் போகிறான் கிருஷ்ணன்.
ராமாவதாரத்தில் ஏற்கனவே இதற்காக இன்னொரு ஒத்திகையும் பார்த்தாகி விட்டது!
அது வாலியை மறைந்து நின்று கொன்ற சம்பவம்.
ஆமாம், மகாபாரதப் போரில் ‘அஸ்வத்தாமா’ என்ற யானை இறந்த போது, ‘அஸ்வத்தாமா இறந்து விட்டான்’ என தர்மரை உரக்கச் சொல்ல வைத்து, அதைக் கேட்கும் துரோணாச்சார்யார் தன் மகன் அஸ்வத்தாமன்  போரில் இறந்ததாக கருதி, மனம் கலங்கி தோல்வியடையப் போகிறாரே அந்த ‘அதர்ம’ செயலுக்கான ஒத்திகை தான் இந்த அவதாரத்தில் ‘வாலிவதம்’ என்னும் ‘அதர்ம’ நடவடிக்கை!
 உறவினரிடம் பாசம், நண்பர்களிடம் பரிவு,  உயிர்களிடம் அன்பு என இருக்கும் ராமன், அடுத்த அவதாரத்தில்  பாசம், நேசம், அன்பு எல்லாம் மாயை என உலகிற்கு எடுத்துச் சொல்லப் போகிறான்!
இதை இப்போது எப்படி விபீஷணனால் உணர முடியும்?
 அவன் தான் பட்டாபிஷேகத்தின் போது ராமனிடமிருந்து ‘சிரஞ்சீவி’ பட்டம் பெறப் போகிறானே, அப்படியானால் அவன் என்றும் நிலையாக வாழ்வான் என்று தானே பொருள்? ராமனுக்கு அடுத்து வரப்போகும் கிருஷ்ணனையும் அவனால் சந்திக்க முடியுமே! இந்த ராமாவதார ஒத்திகை அப்போது நிறைவேறுவதை உணர்ந்து கொள்வான்.
அதற்காகவே ராமன் புன்னகையுடன் அமைதி காத்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar