வைணவ ஆச்சார்யரான ராமானுஜர் ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசித்து விட்டு மடத்திற்குச் சென்று கொண்டிருந்தார். தெருவில் விளையாட்டாகச் சில குழந்தைகள் கூடி ரங்கநாதர் சிலை ஒன்றை வைத்து பூஜை நடத்திக் கொண்டிருந்தனர். ஆச்சார்யர் வருவது கூடத் தெரியாமல் வழியை மறிக்கிறார்களே என சீடர் கோபம் கொண்டார். ‘‘ஆச்சாரியாருக்கு வழிவிடாமல் இப்படியா தெருவை மறைப்பீர்கள்? அந்த பக்கமாகச் செல்லுங்கள்’’ என உரக்க கத்தினார். அங்கிருந்த சிறுவன் ஒருவனுக்கு கோபம் எழுந்தது. ‘‘உங்களுக்கு வேண்டுமானால் ஆச்சாரியார் உயர்ந்தவராக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு பெருமாள் தான் உயர்ந்தவர்!’’ என்றான். சிறுவனின் பேச்சைக் கேட்ட ராமானுஜருக்கு உடம்பே சிலிர்த்தது. சிறுவர்களின் பூஜையில் தானும் பங்கேற்றார். பெருமாளுக்கு நைவேத்யம் செய்த பிராதப் பொங்கலைச் சாப்பிட்டு மகிழ்ந்தார். ‘‘சுவாமி! நீங்கள் சிறுவர்களின் பூஜையில் கூட பவ்யமாக பங்கேற்கிறீரே?’’ என்றார் சீடர் ஒருவர். ‘‘அரங்கன் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே! அன்போடு தரும் எதையும் அவன் நிச்சயம் ஏற்பான்’’ என பதிலளித்தார்.
|