|
ஒரு கிராமத்தில் வாழ்ந்த துறவியை ஊர் மக்கள் தெய்வமாக மதித்தனர். எந்த பிரச்னை குறுக்கிட்டாலும் அவரிடம் ஆலோசிப்பர். இந்நிலையில் தன் குடும்பத்தை வெறுக்கும் மனிதர் ஒருவர், கிராமத்திற்கு வந்து தங்கினார். ஓரிரு நாட்களுக்குள் துறவிக்கு நண்பரானார். இருவரும் கோயில் மண்டபத்தில் படுத்து, கிடைக்கும் உணவை சாப்பிட்டு பொழுதைக் கழித்தனர். புதியவருக்கு துறவியின் செயல்பாட்டில் நாளடைவில் சலிப்பு ஏற்பட்டது. ‘‘துறவி தினமும் காலையில் ஆற்றங்கரையில் குளிக்கிறார். அவ்வப்போது ஊராரைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்கிறார். இப்படியே போனால் வாழ்வில் என்ன பயன் இருக்க முடியும் ம்?’’ எனக் கருதினார். தன் எண்ணத்தை துறவியிடம் தெரிவித்தார். ‘‘ நீ கிளி ஜோசியம் பார்த்திருக்கிறாயா,’’ எனக் கேட்டார் துறவி. சம்பந்தமில்லாமல் ஏதோ கேட்கிறாரே எனக் கருதிய நண்பர் தலையாட்டினார். ‘‘கிளி என்ன செய்யும்?’’ எனக் கேட்டார் துறவி. ‘‘நம் எதிர்காலத்தை சொல்லும்’’ என்றார் நண்பர். ‘‘அதைத் தான் நானும் செய்கிறேன். எல்லோரின் எதிர்காலத்தையும் சொல்லும் கிளிக்கு தன்னுடைய எதிர்காலம் என்னாகும் எனத் தெரியுமா?’’ எனக் கேட்க ‘தெரியாதே’ என்றார் நண்பர். ‘‘நானும் அதுபோலத் தான்! எதிர்காலம் இப்படி இருக்கும் என கற்பனை வேண்டுமானால் செய்யலாம். ஆனால் அது எப்படியாகும் என யாரும் உறுதி சொல்ல முடியாது. நிகழ்காலமே நல்ல காலம். அதில் நம்மால் முடிந்ததை நல்லதைச் செய்ய வேண்டும். அப்படி செய்தால் நம் எதிர்காலத்தை கடவுள் பார்த்துக் கொள்வார்’’ என்றார்.
|
|
|
|