இன்பத்தைக் கண்டால் மனிதன் மகிழ்கிறான். துன்பத்தைக் கண்டால் துவள்கிறான். இதே மனநிலையில் தான் இருந்தான் சிறுவனான சங்கரன். தேர்வில் மதிப்பெண் அதிகம் பெற்றால் சந்தோஷத்தில் குதிப்பான். குறைந்து விட்டால் அம்மா மீதே எரிச்சல் கொள்வான்.
ஒருநாள் அவனைப் பார்க்க கிராமத்தில் இருந்து பாட்டி வந்தாள். சங்கருக்கு தின்பண்டங்கள் கொடுத்தாள். ஆனால் தலைவலியால் அவதிப்பட்ட அவன் வெறுப்பை வெளிப்படுத்தினான்.
இன்ப, துன்ப அனுபங்களை யாரும் தவிர்க்க முடியாது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதை உணர்த்த பாட்டி விரும்பினாள்.
மறுநாள் காலையில் தெருவழியாக ஆற்றுக்குச் செல்லும் கழுதையைக் காட்டினாள். அதன் முதுகில் அழுக்குத் துணி மூட்டை இருந்தது. சலனம் இன்றி பாதையில் சென்றது. ‘‘சங்கரா! இந்த கழுதையை உற்றுப் பார்! மாலையில் அது திரும்பும் போது உண்மை புரியும்’’ என்றாள். பகலில் துணிகளைத் துவைத்த உலர்த்தியபின் அவற்றை மூட்டையாக கட்டி கழுதையின் மீது சுமத்தினார் துணிவெளுப்பவர். மீண்டும் மாலையில் கழுதை ஊருக்குள் வந்தது.
அதைக் கண்டதும் பாட்டி, ‘‘சங்கரா! இந்த கழுதையைப் பார்! அழுக்குத் துணியோ, வெளுத்த துணியோ எதைச் சுமந்தாலும் கழுதை அலட்டிக் கொள்வதில்லை. தன் பணியைச் சரிவரச் செய்கிறது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் இன்பமோ, துன்பமோ எது வந்தாலும் பிறரை பழிப்பதில்லை. வருத்தத்திற்கு ஆளாவதில்லை’’ என்றாள். பாட்டியின் அறிவுரை கேட்ட சங்கர் மனம் திருந்தினான்.