|
கர்வம் மிக்க முனிவர் ஒருவர், யமுனாநதியின் கரையில் நின்றார். அங்கிருந்த படகோடியிடம், ‘‘அடேய்! என்னை அக்கரைக்கு அழைத்துச் செல்,’’ என உத்தரவிட்டார். அவனும் படகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.. ‘‘படகோட்டி! என்னடா இப்படி மெதுவாக போகிறாயே? வேகமாகப் போ’’ என்றார் முனிவர். படகோட்டியும் தன் முழுபலத்தையும் காட்டி படகைச் செலுத்தினான். அப்போதும் அதிருப்தியுடன் ‘‘முட்டாள்! இன்னும் வேகமா போ’’ என கோபித்தார். படகோட்டியால் அதற்கு மேல் வேகம் காட்ட முடியவில்லை. ‘‘முட்டாளே! படிக்காத உன்னால் என் உணர்வுகளை அறிய முடியவில்லை. கங்கை கரையில் வாழ்ந்த குகன் எவ்வளவு வேகமாக படகோட்டினான் தெரியுமா?’’ என்றார். ‘‘தெரியாது சாமி! முடிஞ்ச வரைக்கும் வேகமாகத் தான் நான் போறேன்,’’ ‘‘அதுபோகட்டும்! மகாபாரதத்தில் அர்ஜுனனின் அம்பு வேகமாக பாயுமே! அது மாதிரி சீறிகிட்டே போக வேண்டாமா?’’ ‘‘அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி. கோபப்படாதீங்க, சீக்கிரமா போயிடலாம்’’. ‘‘மடையா! என்ன தான் தெரியும்? உங்கள் ஊரில் யாராவது ராமாயணம், மகாபாரதம் கதாகாலட்சேபம் பண்றதை கேட்டதில்லையா?’’. ‘‘கதை கேட்க ஏது சாமி எனக்கு நேரம்? என் பிழைப்பை பார்க்க வேண்டாமா’’. முனிவர் வாய்க்குள்ளே முனங்கினார். திடீரென படகோட்டி கத்தினான். ‘‘சாமி! எல்லாம் தெரிஞ்சதா சொன்னீங்களே! நீச்சல் தெரியுமா?’’ ‘‘எதுக்குப்பா கேக்கிறே?’’ ‘‘படகு ஓட்டை ஆயிடுச்சு. கொஞ்ச நேரத்திலே தண்ணீர் உள்ளே வந்திடும். எல்லாம் தெரிஞ்ச உங்களுக்கு நீச்சல் தெரியாமலா இருக்கும்! தப்பிக்க வழிபாருங்க!’’ என்று சொல்லி படகோட்டி ஆற்றில் குதித்தான். முனிவர் செய்வதறியாமல் திகைத்தார். எல்லாம் அறிந்தவர் யாருமில்லை. |
|
|
|