|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அவள் கொடுத்த பதவி |
|
பக்தி கதைகள்
|
|
என் முன் அமர்ந்திருந்தவரின் முகத்தில் ஒருவித கலவரம் தெரிந்தது. சென்னையில் உள்ள ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைத் துறைத் தலைவராக இருக்கிறார். “சார் எங்க மருத்துவமனையின் தலைவர் ரிட்டயராகப் போறாரு. அவர் தான் இந்த மருத்துவமனையைக் கட்டி அத இந்த அளவுக்குப் பெரிசா வளர்த்தவரு. அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கப் போறதும் அவர்தான். போட்டி எனக்கும் இதய நோய் நிபுணர் ராஜனுக்கும்தான்.” சே! பதவி ஆசையில் உந்தப்பட்டுத்தான் என்னைத் தேடி வந்திருக்காரா? “சார் எனக்குப் பதவி ஆசையெல்லாம் கிடையாது சார்.” பிறகு என்ன பிரச்னை? “டாக்டர் ராஜன் தலைவர் ஆயிட்டா கேன்சர் டிபார்ட்மெண்ட்டையே காலி பண்ணிருவாருன்னு பேசிக்கறாங்க. அதனால நோயாளிகள் பாதிக்கப்படுவாங்கன்னு பயப்படறேன். அவருக்குக் காசு ஒண்ணே குறி. எங்க டிபார்ட்மெண்ட்ல வருமானம் ஒண்ணும் பெரிசா இல்லைன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பாரு. அவரால எனக்கும் பிரச்னை வரலாம்.“ “டாக்டர் சம்பத், இத உங்க தலைவர்கிட்டச் சொல்லிப் புரிய வைக்கலாமே!” “டாக்டர் ராஜன் எங்க தலைவரோட அண்ணன் மகன். தலைவர் ராஜனுக்கு முன்னுரிமை கொடுக்கறத யாரும் தட்டிக் கேட்கமுடியாது. எனக்காக இல்லாட்டியும் எங்க மருத்துவமனையை நம்பியிருக்கற நோயாளிங்களுக்காக உங்க பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டிக்கங்க சார்.” மறுநாள் அதிகாலையில் தேஜஸ் விரைவு வண்டியில் மதுரை செல்வதாகத் திட்டம். ரயிலில் அதிக கூட்டம் இல்லை. எனக்கு ஒதுக்கப்பட்ட ஜன்னலோர இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். “மேடம் இது என்னோட சீட்.” “உன் இருக்கையில் நான் அமரக்கூடாதா என்ன?” பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன். “யாருக்கோ தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என நீ ஏன் இந்த அதிகாலை நேரத்தில் முகத்தை மூணு முழத்துக்கு நீட்டி வைத்திருக்கிறாய்?” “இல்லை அவரைப் பார்த்தால் ... நல்லவராகத்.. “நல்லவர் தான். ஆனால் இது அவருக்குச் சோதனைக் காலம்.” “என்ன செய்வது?” “வழக்கமான தீர்வு தான். மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம் தான். நோய் அதிகமாகும் போது மருந்தின் வீரியத்தையும் அதிகமாக்க வேண்டும். துன்பம் அதிகமாகும் போது மனதில் இருக்கும் அன்பை அதிகமாக்க வேண்டும்.” அன்று மீனாட்சி கோயிலுக்கு நடைப்பயணமாகச் சென்றேன். வழியில் ஒரு பூக்காரப்பெண் பூ வாங்கும்படி வற்புறுத்தினாள். “என்னிடம் பூ வாங்கினால் அந்த மருத்துவருக்கு என்ன நடந்தது எனக் காட்டுகிறேன்.” பையில் இருந்த பணத்தையெல்லாம் பச்சைப்புடவைக்காரியிடம் கொடுத்தேன். “நான் தருவதற்கு உன்னால் விலை தர முடியுமா என்ன? இந்தா பூ.” பணத்தையும் என்னிடமே கொடுத்தாள். “அங்கே நடப்பதைப் பார்.” டாக்டர் சம்பத் பணிபுரியும் கார்ப்பரேட் மருத்துவமனை. உள்நோயாளியாகச் சிகிச்சை பெறும் ஒருவரின் நிலை மிக மோசமாக இருந்தது. புற்று நோயின் இறுதிக்கட்டம். சாவின் விளிம்பில் இருந்தார். “பேசாம வீட்டுக்கு அனுப்பலாம் சார். இங்க உயிர் போச்சுன்னா நமக்கு தேவையில்லாமக் கெட்ட பேர் வரும். தலைவர் அதை விரும்ப மாட்டாரு. அதுவும் இந்த நேரத்துல...” இதைச் சொன்ன ஜூனியர் டாக்டருக்குத் தலைவர் பதவிக்கு இருக்கும் போட்டியைப் பற்றி தெரியும். அதில் இருக்கும் உள் விவகாரங்களும் தெரியும். முதலில் அப்படியே செய்யலாம் என நினைத்தார் சம்பத். பின் நோயாளியின் மீதுள்ள அன்பால் தன் நிலையை மாற்றினார். அறையில் இருந்தவர்களை எல்லாம் வெளியே இருக்கச் சொல்லி விட்டு நோயாளியிடம் மனம் விட்டுப் பேசினார். அவரைக் காப்பாற்ற செய்த முயற்சிகளை எல்லாம் விவரித்தார். “இந்தச் சமயத்துல உங்க மனசுல இருக்கிற ஆசையைச் சொல்லுங்க. என் உயிரைக் கொடுத்தாவது நிறைவேத்துறேன்’’ “டாக்டர் எங்க பரம்பரையில இதுவரை யாருமே பட்டதாரியானதில்ல. இப்போதுதான் என் பொண்ணு டிகிரி பாஸ் பண்ணியிருக்கா. ஏப்ரல பட்டமளிப்பு விழா. அதுல என் பொண்ணு கம்பீரமா கருப்பு கவுனைப் போட்டுக்கிட்டுப் பட்டம் வாங்குறத பா்க்கணும்னு ஆசையாயிருக்கு டாக்டர்.” சம்பத்திற்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. நோயாளி இன்னும் மூன்று வாரம் இருந்தாலே அதிகம். ஏப்ரலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றனவே! “என்ன செய்யலாம்னு பாக்கறேன்” நோயாளியின் பெண் எந்தக் கல்லூரியில் படித்தாள் போன்ற விவரங்களைச் சேகரித்தார் டாக்டர் சம்பத். மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரியை அந்தக் கல்லூரிக்கு அனுப்பினார். அவர் மூலம் கல்லுாரி முதல்வரிடம் போனில் பேசினார். நோயாளி இரண்டு மூன்று வாரங்களுக்கு மேல் தாங்க மாட்டார். நாலைந்து நாளுக்குள் அந்த மருத்துவமனையிலேயே நோயாளியின் மகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக பட்டமளிப்பு விழா நடத்த முடியுமா என கல்லுாரி முதல்வரிடம் கேட்டார் டாக்டர் சம்பத். ஏதேனும் செலவாகும் என்றால் தானும் தன் நண்பர்களும் அதை ஏற்பதாகச் சொன்னார். கல்லுாரி முதல்வரும் சம்மதித்தார். ஏற்பாடு செய்ய மூன்று நாள் அவகாசம் கேட்டார். மேலும் பல விவரங்களையும் சொன்னார். மறுநாள் காலை நோயாளியைப் பார்த்தபோது நடந்ததைச் சொன்னார். “உங்க மகளுக்கு உங்க கண் எதிர்ல இங்கேயே பட்டம் கொடுக்கப் போறாங்க. காலேஜ் ப்ரின்சிபல், எங்க மருத்துவமனைத் தலைவர்,காலேஜ் டீச்சருங்க, உங்க மகளோட படிச்சவங்க சிலர் மட்டும் வருவாங்க. மருத்துவமனையில் அதற்கான அனுமதி வாங்கிட்டேன்.” நோயாளிக்குப் பேச்சே வரவில்லை. சம்பத்தின் கைகளைப் பற்றியபடி கண்ணீரை உகுக்கத்தான் முடிந்தது. ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. தன் கடைசி ஆசை நிறைவேறப் போகிறது என்ற நிம்மதியில் அன்றிரவு நன்கு துாங்கினார். துாக்கத்திலேயே உயிர் பிரிந்தது. இது நடந்து நான்கு நாள் கழித்து மருத்துவமனையின் தலைவர் கூப்பிட்டார். “டாக்டர் சம்பத், எனக்கு அடுத்து ராஜன்தான் தலைவராகணும்னு தீர்மானிச்சி அதற்கான உத்தரவையும் டைப் அடிச்சித் தயாரா வச்சிருந்தேன். அப்பதான் நீங்க அந்த பேஷண்ட்கிட்ட நடந்த முறையைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். அந்த அறையில பொருத்தியிருந்த கேமரா மூலமா நீங்க பேசினதைக் கேட்டேன். நாம டாக்டர்தான். கடவுள் இல்ல. நம்மளால வரவிருக்கற சாவத் தடுக்க முடியாது. ஆனா நோயாளி சாகறவரைக்கும் நிம்மதியத் தர முடியும். நிறைய அன்பைத் தரமுடியும். அத நீங்க ரொம்ப அற்புதமா செஞ்சிருக்கீங்க. உங்கள மாதிரி நல்ல மனசுள்ள மருத்துவர் தலைமையில இந்த மருத்துவமனை இன்னும் நல்லா வளருங்கற நம்பிக்கை வரும்.” “டாக்டர் ராஜன் இதத் தப்பா... “ “அவன்கிட்டச் சொல்லிப் புரிய வச்சிட்டேன். அவன் தனியா மருத்துவமனை ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னான். அதுக்குத் தேவையான பணத்தை அவனுக்குக் கொடுத்துட்டேன். உங்க பதவியேற்பு விழாவ பெரிசாக் கொண்டாடணும்னு விரும்பறேன். நீங்களே ஒரு நல்ல நாள் பாருங்க. உங்க சம்பளத்தை இரண்டு மடங்காக்கிட்டேன். அது போக புதுக்காரு.. “ தலைவர் அடுக்கினார். சம்பத் பிரமித்துப் போனார். தெரு என்றும் பாராமல் பூக்காரியாக நின்ற பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்தேன். “அவர் கேட்ட பதவியை அவருக்குக் கொடுத்து விட்டேன். உனக்கு என்ன பதவி வேண்டும்?” “காலமெல்லாம் உங்கள் கொத்தடிமை என்ற மாபெரும் பதவி வகிக்க ஆசி தாருங்கள் தாயே!” பச்சைப்புடவைக்காரி சிரிக்க ஆரம்பித்தாள். நான் அழ ஆரம்பித்தேன்.
|
|
|
|
|