|
ராவணனுடன் போர் புரிய தயாரானான் ராமன். அவனுக்கு உறுதுணையாக நிற்கும் வில்லும் புத்துணர்வு கொண்டது. ராமனின் வாழ்க்கைத் தத்துவமான ‘ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்’ என்பதில் தானும் அங்கமாக இருப்பதில் பெருமை கொண்டது! கோதண்டம் என்னும் தன்னைத் தவிர வேறொரு வில் வாழ்வில் இடம் பெறக் கூடாது என்பதற்காகவே, சிவதனுசு என்னும் வில்லையும் முறித்தானோ என மகிழ்ந்தது. ஜனகரின் நிபந்தனையின்படி ராமன் வில்லில் நாணேற்றினால் போதும்! சீதையுடன் வில்லையும் அவர் பரிசாக கொடுத்திருப்பார். ஆனால் தன்னைத் தவிர வேறொரு வில்லையும் கையில் ஏந்த மாட்டான் என்பதை நிரூபிக்கும் விதமாக ராமன் நடந்து கொண்டதில் வில்லுக்குப் பெருத்த மகிழ்ச்சி! சிவதனுசு என்னும் வில்லை முறித்தது பலத்தால் மட்டுமல்ல... சிவதனுசு தானே விரும்பி முறிந்தது. ஏன் சிவதனுசு அப்படி முறிந்தது? மிதிலாபுரி அரண்மனையில் முனிவரான விஸ்வாமித்திரர் முன் செல்ல, அவருக்குப் பின்னால் ராம, லட்சுமணர் கம்பீரமாக வந்தனர். அவர்களின் வருகையை அறிந்ததும், ஜனகர் வாசலுக்கே ஓடி வந்தார். முனிவருடன் வரும் இந்த இளைஞன் யார்? மனதை கொள்ளை கொள்ளும் அழகனாக இருக்கிறானே! முனிவரின் மாணவனாக மட்டும் இன்றி என் மருமகனாகவும் ஆவானா? அப்படியாக வேண்டுமானால் என் நிபந்தனையை நிறைவேற்ற வேண்டுமே? அரண்மனையில் சம்பிரதாய உபசரிப்புகள் எல்லாம் நடந்து முடிந்தன. “ஜனகரே... தங்களின் மகள் சீதையை மணம் புரிபவனுக்கு நிபந்தனை இருக்கிறதல்லவா?” எனக் கேட்டார் விஸ்வாமித்திரர். ‘‘ முனிவரே! முன்னோர்கள் வழியாக எனக்கு கிடைத்த சிவதனுசு என்னும் வில் ஒன்று உள்ளது. தெய்வத்தின் அருளால் எனக்கு மகளாக கிடைத்தவள் சீதை. தெய்வாம்சம் பொருந்திய ஒருவனையே அவளை மணக்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு நிபந்தனையாக சிவதனுசு வில்லில் நாணேற்றும் வீரன் ஒருவனைத் தேர்ந்தெடுக்க தீர்மானித்தேன். இதுவரை பலரும் முயற்சி செய்தும் தோல்வியே கண்டனர். அவர்களிடம் அலட்சியம், பேராசை, தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்பு எல்லாம் இருந்தன. அதனால் அனைவரும் கேலி பொருளாகி விட்டனர். இனி அதை நிறைவேற்ற யார் வரப் போகிறார்களே?’’ என்றார் ஜனகர் “இந்த வீரன் அயோத்தி சக்கரவர்த்தியான தசரதரின் மூத்தமகன் ராமன். இவனுக்குப் பின் நிற்பவன் தம்பி லட்சுமணன். சகோதரர்களான இவர்கள் மாபெரும் வீரர்கள். நான் யாகம் நடத்திய போது, இடையூறு செய்த அரக்கர்களை இவர்களே வீழ்த்தினர். அரக்கியான தாடகையை ஒரே அம்பில் சாய்த்த இவனது வீரம் கண்டு வியந்திருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை உன்னுடன் பகிர வேண்டுமானால், மிதிலையிலும் இவன் சாதனை நிகழ்த்த வேண்டும். எனவே ராமன் சிவதனுசு வில்லில் நாணேற்றினால் மகிழ்வேன்.” “ஆகா...தங்களின் சித்தம் என் பாக்கியம்! இப்போதே நாணேற்றட்டும்” என்று சொல்லிய ஜனகர், வீரர்களை நோக்கி கையசைத்தார். சற்று நேரத்தில் பிரமாண்டமான சிவதனுசு சுமந்து வந்த வீரர்கள் மேடையின் மீது வைத்தனர். வில்லைக் கண்ட ராமன் புன்னகைத்தான். சபையில் கூடியிருந்தவர்களும் ஆர்வமுடன் இருந்தனர். ‘‘இளவரசி சீதைக்கு பொருத்தமானவன் இவனே. திரண்ட தோளும், பரந்த மார்பும் கொண்ட இந்த அழகனுக்காகவே இத்தனை காலம் வில்லும் காத்திருந்தது போலிருக்கிறதே.’’ என ஒருவருக்கொருவர் பேசினர். சிவதனுசு மெல்லிய குரலில், ‘‘ராமா! இது வெறும் சம்பிரதாயம் தான். உனக்கு தான் சீதை என்ற பிராப்தம் தவறுமா என்ன? தகுதி குறைந்த யாரும் சீதையை மணம்புரியக் கூடாதே என்பதற்கான ஏற்பாடு தான் இந்தப் போட்டி. இதில் வெற்றி பெற நீ இருக்கும் போது, மற்றவர்கள் நாணேற்ற நான் சம்மதிப்பேனோ..? அதனால் தான் யாரையும் அனுமதிக்கவில்லை. ரகுகுல திலகா! நீயே என்னை ஏற்க வேண்டும்’’ என வேண்டியது. அனுமதி கேட்கும் முறையில் ராமர், முனிவரான விஸ்வாமித்திரரை பார்க்க அவரும் தலையசைத்தார். சிவபெருமானின் அம்சமான வில்லை பார்த்து வணங்கிய ராமன், வெற்றி பெற வேண்டும் என மனதில் நினைத்தான். மேடையில் இருந்த வில்லின் நடுப்பகுதியை இடது கையால் பிடித்து கீழே இறக்கினான். நாணின் ஒரு முனையை, வில்லின் கீழ்ப்பகுதி பற்றியிருக்க, அடுத்த முனையை இழுத்து மேல் பகுதியுடன் இணைக்க வேண்டும் அல்லவா? அதற்காக கீழ்ப்பகுதி தரையில் நழுவாமல் இருக்க காலால் பற்றிக் கொண்டான். நாணின் முனையை வலது கையால் மேல்நோக்கி இழுக்கத் தொடங்கினான். வில்லின் மேல்பகுதி, ராமனின் முகஅழகை ரசித்தது. அவனது கம்பீரம் கண்டு பிரமித்தது. ஆனால் அவனது பாத அழகு எப்படி இருக்கும்? தன்னால் பார்க்க முடியவில்லையே என யோசித்தது. ஆனால் வில்லின் கீழ்ப்பகுதி செய்த பாக்கியம் தான் என்ன? ராமனின் பாதத்தை தொடும் பாக்கியம் பெற்றிருக்கிறதே! கீழ்ப்பகுதி என்னைவிட பெருமை அடைவதைப் பொறுக்க முடியாது! முகம் மார்பு, இடுப்பு அழகை எல்லாம் தரிசித்தாலும் அவனது பாதத்தைச் சரணடையும் பாக்கியம் கிடைக்கவில்லையே... வில்லின் மேல்பகுதிக்கு ஆதங்கம் தாங்கவில்லை. ‘‘ மாட்டேன், நானும் ராமனின் பாதம் பணிவேன். என்னையும் அவர் திருவடி தீண்டும் பாக்கியம் வேண்டும் எனக் குனிந்தது தன்னை பாதம் தீண்டாவிட்டாலும், தானாக பாதத்தைத் தொடுவதற்காக வளைந்தது. நாணை பிடித்த ராமனின் வலதுகை மேலோங்கியது. அவ்வளவுதான். படீர் என்ற ஒலியுடன் இரண்டாக முறிந்து வீழ்ந்தது வில். ஒன்றாக இருந்த போதும் ராமனின் கை பற்றி இழுத்த போது இரண்டாகி பாதத்தைச் சரணடைந்தது. அவையில் உள்ளவர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. ராமன் வில்லை எடுத்ததைக் கண்ட அவர்கள், அடுத்த கணமே இற்றது(முறிந்தது) கேட்டு மகிழ்ந்தனர். தன் விருப்பம் நிறைவேறியதால் ஜனகர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார். ராமனின் சாதனைக்குப் பரிசாக சீதையை மணம் முடித்துக் கொடுத்தார் ஜனகர். இந்த நிகழ்வை எல்லாம் ராமனின் வில் நினைத்துப் பார்த்தது. முறிந்த சிவதனுசு மிதிலையிலேயே தங்கி விட்டது. ‘ஒரு வில் ஒரு இல் ஒரு சொல்’ என்னும் தத்துவப்படி தன்னை மட்டும் ஏந்தி நிற்கும் ராமனின் நேர்த்தி கண்டு பெருமை கொண்டது. |
|
|
|