|
வசிஷ்டரின் குருகுலத்தில் ராமனுடன் படித்த நண்பன் அனந்தன். ராமன் மீது அலாதி அன்பு கொண்ட அவன், ராமனின் தேவைகளை அக்கறையுடன் செய்து வந்தான். அவ்வப்போது காட்டிற்குச் சென்று தர்ப்பை பறிப்பது அனந்தனின் வேலை என்பதால் ஒருநாள் காட்டிற்கு சென்றான். அந்த நேரத்தில் படிப்பை முடித்த ராமன், குருநாதரிடம் விடைபெற்று அயோத்திக்கு புறப்பட்டான். காட்டில் இருந்து திரும்பிய அனந்தன் நண்பனைக் காணாமல் வருந்தினான்.
ராமனைக் காண அயோத்திக்கு புறப்பட்டான். ஆனால் அதிர்ச்சி காத்திருந்தது. மகரிஷி விஸ்வாமித்திரருடன் ராம, லட்சுமணர் யாகம் நடத்த காட்டிற்குச் சென்றிருந்ததால் தானும் தேடி வந்தான். அடர்ந்த காட்டின் ஊடே, ‘ராமா… ராமா…’ என கத்தியபடி அலைந்தான். வழி தவறி, ஒரு இருண்ட பகுதிக்குள் சிக்கினான். ராமனை காண முடியாததால் ‘ராமா… ராமா…’ என ஜபித்தபடி ஓரிடத்தில் அமர்ந்தான். நாளடைவில் அவன் மீது புற்று வளர்ந்தது.
காலச் சக்கரம் சுழன்றது. இதற்கிடையில் ராமாயண சம்பவம் எல்லாம் நிகழ்ந்தன. சீதையை மணம் முடித்து, தந்தைக்காக காட்டுக்குச் சென்று, சீதையைப் பிரிந்து, அனுமனின் உதவியுடன் சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியிருந்தான் ராமன். பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின. இவை ஏதும் அறியாமல் ‘ராமா… ராமா..’ என்றிருந்தான் அனந்தன்.
பட்டாபிஷேகத்தைக் காண மகரிஷிகள் சிலர் ‘ராம’ நாமம் ஜபித்தபடி காட்டுக்குள் சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தனின் தவம் கலைந்தது. அவன், ‘ராமா… நீ எங்கிருக்கிறாய்?’ எனக் கதறினான். தனக்கு வயதாகி விட்டதையும் உணரவில்லை. அப்போது ஒரு மகரிஷி, அவன் யார் என்பதை அறிந்து ஆறுதல் கூறியதோடு, பட்டாபிேஷகத்தைக் காணவும் அழைத்தார். அனந்தனும் உடன் புறப்பட்டான். அயோத்தி நகரமே விழாக்கோலமாக இருந்தது. வேதம், மங்கல இசை முழங்கின. குலகுரு வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முன்னிலை வகித்தனர். மன்னர்கள், தேவர்கள், தேவமங்கையர், மகரிஷிகள் கூடியிருந்தனர்.
மங்கல நீராடிய ராமன் புத்தாடை, ஆபரணம் அணிந்து, தாயார்களை வணங்கி விட்டு கொலு மண்டபம் நோக்கி நடந்தான். அப்போது கூட்டத்தில் நின்ற அனந்தன் ‘‘அடே ராமா! உன்னை எத்தனை காலமாக நான் தேடுகிறேன்?” எனக் கத்தினான். பரதேசிக் கோலத்தில் உள்ள ஒருவன், ‘அடே ராமா’ என அழைத்ததைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர். ராமனோ நண்பனைக் கண்டு பரவசம் கொண்டான்.
‘‘அனந்தா! உன்னிடம் சொல்லாமல் குருகுலத்தில் இருந்து வந்ததால் வருந்தியிருப்பாய். என்னை மன்னித்து விடு” என சமாதானப்படுத்தினான். தன்னைப் போலவே ராம பக்தன் ஒருவன் இருப்பதைக் கண்ட அனுமனின் கண்கள் கலங்கின. அப்போது வசிஷ்டர், ”ராமா… இவர் யார்?” எனக் கேட்டார். ” குருதேவா! இவன் தங்களுக்கு சேவை செய்த சீடன் அனந்தன் தான். ‘அடே ராமா’ என்றழைக்க தந்தை இல்லையே என ஏங்கிய குறையை போக்கினான் அனந்தன் . என் மீது அன்பு காட்டும் இவனுக்கு மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்” என்று சொல்லியபடியே அனுமனைப் பார்த்தான் ராமன்.
”பிரபு! சிம்மாசனத்தில் தாங்கள் அமரும் முன் இவரை அமர்த்தி மரியாதை செய்தால் பொருத்தமாக இருக்கும்!” என்றான் அனுமன். இத்தனை பெரிய கவுரவம் பெற தனக்கு தகுதி இல்லையே என மறுத்தான் அனந்தன். அதைக் கேளாமல் அனந்தனை சிம்மாசனத்தில் அமர்த்தி பாத பூஜை செய்தான் ராமன். அதன் பின்னரே பட்டாபிஷேக விழா நடந்தது.
|
|
|
|