|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » சாமிக் குத்தம் |
|
பக்தி கதைகள்
|
|
ஏதோ ஒரு உந்துதலில் அன்று மதுரை கோயிலுக்குச் சென்று பச்சைப்புடவைக்காரியைத் தரிசிப்பதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். போக்குவரத்து அவ்வளவாக இல்லை. வைகை மேம்பாலத்தில் சென்ற போது மனதில் ஆயிரம் சிந்தனைகள். பார்க்க வேண்டிய கணக்குகள், நிலுவையில் இருந்த வழக்குகள், முடிக்க வேண்டிய புத்தகங்கள் என மனம் அலைபாய்ந்தது. வக்கீல் புதுத்தெருவிற்கு வந்து வலது புறம் திரும்பினேன். மனம் ஒருநிலையில் இல்லை. கண் முன்னால் பச்சைவிளக்கு எரிந்தது. கோயிலைக் கடந்துபோய் வண்டியை வலது புறம் திருப்பி வீட்டுக்கு வந்து விட்டேன். “இன்னிக்கு நல்ல தரிசனமா?” என மனைவி கேட்ட போது தான், தவறு புரிந்தது. பயணத்தின் நோக்கத்தை மறந்து என்னைத் தன் கொத்தடிமையாகக் கொண்டவளை மறந்து...சே! எங்கள் கிராமத்தில் சொல்வது போல ‘சாமிக் குத்தம்’ நிகழ்ந்துவிட்டதே!. அன்று பகலில் திருநெல்வேலியிலிருந்து வந்த வாடிக்கையாளர் ஒருவர், அல்வா வாங்கி வந்திருந்தார். அதை எடுத்து வர மறந்ததால் மீண்டும் அலுவலகம் சென்றேன் அல்வாவை எடுத்துக் கொண்டேன். என் அன்னையை மறந்த எனக்கு இந்த இனிப்பு ஒரு கேடா? அல்வாவை எங்கள் செக்யூரிட்டியிடம் கொடுத்தேன். வாயெல்லாம் பல்லாக வாங்கிக் கொண்டார். இரவு உணவு வேண்டாம் என மனைவியிடம் சொல்லிவிட்டு வெளியே கிளம்பினேன். மனம் போன போக்கில் நடந்தேன். இது என்ன கொடுமையான மறதி! ஒருவேளை முதுமையாகி விட்டதோ! இல்லை இது நோயின் ஆரம்பமா? நோயோ முதுமையோ என்ன கொடுமையோ, பச்சைப்புடவைக்காரியையே மறந்து வாழும் வாழ்வு எனக்கு வேண்டாம். கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தம் வரை வந்தேன். “சாமி கடலை வாங்கிக்கங்க. சூடா இருக்கு. உப்பு போட்டுப் பதமா வறுத்திருக்கேன்.” “போம்மா. இப்போ கடலை ஒண்ணுதான் குறைச்சல். ஆளை விடும்மா!” “ எப்படியப்பா நான் விடமுடியும்? என்னை நீ கைவிட்டாலும் நான் உன்னை விடமாட்டேன். மகன் மறந்தாலும் தாய் மறப்பாளா?” அவளுடைய வார்த்தைகள் சாட்டையடிகளாக என் மீது விழுந்தன. கடலைக்காரி வடிவில் இருந்த அந்தக் கனகாம்பிகையின் காலில் விழுந்தேன். “நீ செய்தது சாமிக்குத்தம் இல்லையப்பா. அப்படியே இருந்தாலும் அந்த இனிப்பை ஒரு ஏழைக்கு வழங்கிய உன் செய்கையில் அதற்கு பரிகாரம் செய்துவிட்டாய்.” “உங்களைத் தரிசிப்பதற்காக கிளம்பி வந்து உங்களைப் பார்க்க மறந்த பாவி நான். என்னைச் சமாதானம் செய்யவேண்டுமென சப்பைக்கட்டுக் கட்டாதீர்கள்.” “எது சாமிக் குத்தம் என்று நான் காட்டுகிறேன். அப்போது தான் உன் மனம் அமைதி பெறும்.” “காத்திருக்கிறேன் தாயே!” “அங்கே தெரியும் காட்சியைப் பார்.” எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலம். தஞ்சையில் செல்வந்தரான அந்தணர் ஒருவர் வேத பாராயண நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்வுக்குப் பன்னிரெண்டு வேத விற்பன்னர்கள் வந்தனர். அவர்களில் ஒருவருக்கு வயது 85. அவரால் மந்திரங்களைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. மூச்சு வாங்கியது. முடிந்தவரையில் சொல்லிக் கொண்டிருந்தார். மூச்சு வாங்கியபோது முன்னால் இருந்த லலிதாம்பிகையின் படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார். நிகழ்ச்சியை நடத்திய அந்தணர் அந்த முதியவரைச் சுட்டியபடி அருகில் நின்றவரிடம் விசாரித்தார். “ஐயோ அண்ணா! அவர் சுப்பிரமணிய கனபாடிகள். வேதவித்து. அவர மாதிரிப் படிச்சவா குறைச்சல். காஞ்சிப் பெரியவா அவரத் தனிப்பட்ட முறையில கவுரவிச்சிருக்கா.” “ஆனா அவர் உச்சாடணம் சரியா இல்லையே” “என்னண்ணா செய்யறது? வயசாயிடுத்து.” அந்தணருக்குத் திருப்தி ஏற்படவில்லை. முதியவரையே கடுப்புடன் பார்த்தார். காலையில் தொடங்கிய வேத பாராயணம் பகல் வரை நீடித்தது. வழிபாடு முடிந்து வேத விற்பன்னர்கள் சாப்பிட அமர்ந்தனர். அந்தணரின் பணியாட்கள் ஓடியாடி வேலை செய்தனர். இனிப்பு பரிமாறும் நேரம் வந்தது. அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அந்தணர். வேதவிற்பன்னர்கள் அனைவரின் இலையிலும் இனிப்பு பரிமாறப்பட்டது – முதியவரைத் தவிர. சுப்பிரமணிய கனபாடிகளின் ஒரே பலவீனம் இனிப்புதான். வறுமையில் வாடிய அவரால் அடிக்கடி இனிப்பு சாப்பிடமுடியாது. இது போன்ற நிகழ்வுகளில் சாப்பிட்டால்தான் உண்டு. “இங்க லட்டு போடலையே!” பலவீனமாகச் சொன்னார் கனபாடிகள். “நீங்க திக்கித் திணறித் தப்புத் தப்பா வேதம் சொன்னதுக்கு இதுவே போதும். லட்டு கேக்கறதோ லட்டு?” அந்தணர் சத்தம் போட்டார். அவமானத்தால் அந்த முதியவரின் கண்கள் பொங்கின. “சுப்பிரமணிய கனபாடிகள் என் மனதிற்கு இனிய மகன். அன்றிரவு அவர் என் கோயில் நடைசாத்தும் வேளையில் வந்து அழுதார். “வேதத்தச் சரியாச் சொல்ல முடியாம என் வயோதிகம் தடுக்கறது. ஆனா இந்தச் சமயத்துலயும் எனக்கு இனிப்புப் பண்டங்கள் மேல இருக்கற ஆசை போகமாட்டேங்கறதேம்மா. அந்த ஆசையால தானே இன்னிக்கு அவ்வளவு பேர் முன்னால அவமானப்பட்டேன். உன்மேல சத்தியம்மா. இனிமே சாகற வரைக்கும் எந்த இனிப்புப் பண்டத்தயும் தொடமாட்டேம்மா. வேதத்தச் சரியாச் சொல்ல முடியலேன்னா நான் உயிர் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? எனக்கு இந்த வாழ்வே வெறுத்துருத்தும்மா. என்னை உன்கிட்டக் கூட்டிக்கோ தாயி.” “அன்றிரவே சுப்பிரமணிய கனபாடிகள் காலமானார். அவர் என் சன்னதியில் சிந்திய கண்ணீர்த் துளிகளை தர்ம தேவதை கர்ம சிரத்தையாக எண்ணிக்கொண்டிருந்தது. அவர் சிந்திய ஒவ்வொரு சொட்டுக் கண்ணீருக்கும், செல்வந்தரான அந்தணர் ஒரு பிறவி எடுத்து தாளாத துன்பம் அடைய வேண்டும் என்ற விதியை தர்மதேவதை நிர்ணயம் செய்தது. நான் அதில் குறுக்கிடவில்லை. வேத பாராயணத்துக்கு ஏற்பாடு செய்த அந்தணர் என் படத்தைப் பெரிதாக வைத்து வழிபாடு செய்தார். பூஜைக்கான கிரமங்கள் எதையும் மறக்கவில்லை. என்றாலும் சக மனிதனை, அதிலும் ஒரு பலவீனமான முதியவரைப் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியது மன்னிக்க முடியாத தெய்வக்குற்றம். எனக்குச் சமாதானமாகவில்லை. “நீ செய்தது சாமிக்குத்தமே இல்லை என்பதை புரியவைக்கவே, நீ என்ன வரம் கேட்டாலும் உடனே தருகிறேன். அளப்பரிய செல்வம் வேண்டுமா? புகழ் வேண்டுமா? சொர்க்கவாசம் வேண்டுமா?” “அவற்றை விடப் பெரிய வரம் வேண்டும் தாயே. அதை கொடுத்தால்தான் சாமிக்குத்தம் செய்யவில்லை என நம்புவேன்.” “கேள்.” “இனிமேல் உங்களை மறந்து வாழும் நிலை ஏற்படுமானால் அந்நிலை வரும் முன்பு என்னை உருத்தெரியாமல் அழித்துவிடுங்கள் தாயே. என்னைப் போல் ஒருவன் வாழ்ந்தான் என்பதற்கான தடயங்களையும் அழித்துவிடுங்கள். உங்களை மறந்து வாழும் வாழ்வை விட, உங்கள் கையால் அழிவது கோடி மடங்கு சிறப்பானது என்ற உண்மை நெஞ்சைவிட்டு அகலாமல் இருக்க அருள் புரியுங்கள்.” “என்னை மறந்தாலும் குற்றமில்லை; சகமனிதர்களிடம் அன்பு காட்டுவதே முக்கியம் என என்னிடம் விடிய விடியக் கேட்டு விட்டு இப்படி வரம் கேட்கிறாயே?” “உங்களை விட அன்புதான் முக்கியம் என்கிறீர்கள். சரியா?” அவள் அழகாகத் தலையசைத்தாள். அவள் வார்த்தைகளை அவளிடமே திருப்பினேன். “அன்பு என்றால் என்ன, நீங்கள் என்றால் என்ன? அன்பு கனிந்த கனிவே சக்தி.” “கேட்ட வரத்தைத் தந்தேன்” வரம் பெற்றவன் மகிழ்ச்சியில் சிரிப்பது தானே முறை? ஆனால் எனக்கு அழுகை வந்தது.
|
|
|
|
|