|
மகாசுவாமிகளின் தரிசனத்திற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். வரிசை மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. எல்லோரும் சுவாமிகளிடம் தீர்த்தம் வாங்கும் போதே, ‘‘சுவாமி...எனக்கு வேலை கிடைக்கவில்லை, பதவி உயர்வு வரவில்லை, பெண்ணுக்கு மாப்பிள்ளை அமையவில்லை, குழந்தையில்லை’’ என ஒவ்வொருவரும் அவரவர் குறைகளை தெரிவிக்க அவர்களுக்கெல்லாம் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார் சுவாமிகள். வரிசையில் ஒரு கிராமத்துப் பெண் நின்றிருந்தாள். அவளைப் பார்த்தாலே பரமஏழை என்பது தெரிந்தது. அவள் முறை வந்ததும் மகாசுவாமிகள் முன் கண்கலங்கினாள். பிரசாதம் கொடுத்த சுவாமிகள் அவளிடம், ‘‘என்னம்மா... கஷ்டம் உனக்கு?` எனக் கேட்டார். அவள் தன் குறையைச் சொன்னதும் சுவாமிகளின் குரல் தழுதழுத்தது. இதுவரை வந்தவர்கள் சொன்னது போல அந்தப்பெண் சொல்லவில்லை. அவள் சொன்னது வித்தியாசமானதாக இருந்தது. ‘‘சாமி! நான் என்ன செய்வேன்! சாமி கும்பிட எனக்கு நேரமில்லையே? என் ஆறு குழந்தைகளும், வயதான மாமியாரும் என்னோடு இருக்கிறார்கள். என் கணவர் காலமாகிவிட்டார். வயலில் கூலி வேலை செய்து என் பிழைப்பு நடக்கிறது. காலை எழுந்ததும் சமைப்பேன். மாமியாரால் என்னால் உதவி செய்ய முடியவில்லை. நான் வேலை முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது. சாப்பிட்டதும் படுக்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது. மறுபடி மறுநாள் விடிகாலையிலேயே எழுந்து வேலை செய்ய வேண்டுமே? ஓய்வெடுக்க நேரமே இல்லையே. ஆனால் தினமும் கொஞ்ச நேரமாவது சாமி கும்பிடணும்னுதான் விரும்பினாலும் அதுக்கு நேரமில்லையே நான் என்ன செய்வது?’’ அதைக் கேட்ட சுவாமிகள்,‘‘ நம் பெண்களால் தான் பாரதப் பண்பாடு வாழ்கிறது என மகிழ்ந்தார். கணவருக்குப் பின்னும் மாமியாரைக் காப்பாற்றும் மருமகள். அதுவும் வறுமை தீர வேண்டும் என கோரிக்கை வைக்காமல், சாமி கும்பிட நேரமில்லையே என வருந்துகிறாள்’’ என மனம் குளிர்ந்தார், சுவாமிகள் அவளிடம், ‘‘உன் கடமைகளை ஒழுங்காகச் செய்கிறாய். கடமைகளைச் சரிவரச் செய்பவர்களைத் தான் கடவுளுக்கு மகிவும் பிடிக்கும். கர்ம யோகியான உனக்கு சாமி கும்பிட நேரமில்லாவிட்டால் என்ன? காலை எழுந்து கிழக்கே உதிக்கும் சூரியனைப் பார்த்து ஒரு கும்பிடு போடு; வீட்டுக்கு வந்ததும் மேற்குத் திசையைப் பார்த்து மாலையில் ஒரு கும்பிடு போடு. கடவுள் உனக்கு எல்லா நலங்களையும் அருள்வார். கவலைப்படாமல் போய்வா.`சுவாமிகளை வணங்கிவிட்டு அவள் விடைபெற்றுச் சென்றபோது அவள் மனம் நிறைந்திருந்தது. - திருப்பூர் கிருஷ்ணன் |
|
|
|