|
1962ம் ஆண்டு குறிப்பிட்ட ராசியில் எட்டு கிரகங்கள் ஒன்று சேர்வதாகவும், அதனால் உலகளவில் மக்கள் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று எங்கும் பேச்சு நிலவியது. ஜனவரி மாதம் தொடங்கிய பேச்சு பெரிய அளவில் மக்களிடையே பரவ எங்கும் பயம் சூழ்ந்தது. ‘‘ மக்கள் நம்பிக்கையோடு நிம்மதியாக வாழ என்ன வழி?’’ என பக்தர்கள் சிலர் சுவாமிகளிடம் கேட்டனர். வலக்கரம் உயர்த்தி ஆசியளித்த சுவாமிகள், ‘‘யாரும் கவலைப்படத் தேவையில்லை! தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் எல்லாப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு இருக்கிறது. அதை உணர்ந்து நடந்தால் சுபிட்சம் நிலவும். மங்கலம் பெருகும். இப்போது சொல்லப்படும் இந்த கிரக நிலை இப்போது தான் புதிதாக வந்ததாக நினைக்க வேண்டாம். இதுபோன்ற சங்கடங்களை உலகம் இதற்கு முன்பும் அனுபவித்திருக்கிறது. கடவுள் அருளால் அவை நீங்கியும் இருக்கிறது. விஷ்ணு சகஸ்ர நாமத்தை தினமும் படித்தால் ஆரோக்கியத்துடன் வாழலாம். கிரகக் கோளாறால் ஏற்படும் துன்பம் தீர தமிழில் எளிய பரிகாரம் இருக்கிறது. அதற்கு திருஞானசம்பந்தர் பாடிய கோளறு திருப்பதிகத்தை அனைவரும் படிக்க வேண்டும். பத்துப் பாடல்களின் தொகுப்பு அது. `வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே! என்பது அதன் முதல் பாடல். நேரமில்லாவிட்டால் இந்த பாடலை மட்டும் ஒருமுறை சொன்னாலும் போதும். நமக்கு எதெதற்கோ நேரம் இருக்கிறது. உலக நன்மைக்காக இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்ய நேரத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். இந்த நெருக்கடி நிலை சரியாகி எல்லோருக்கும் எல்லா மங்கலங்களும் உண்டாகும்’’ அருளுரை வழங்கிய சுவாமிகள் அத்துடன் நிற்கவில்லை. மடத்துச் செலவில் கோளறு திருப்பதிகத்தை அச்சடித்து இலவசமாக விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்தார். கோவில்கள், பொது இடங்கள், வீடுகள் மட்டுமின்றி பல பள்ளிக்கூடங்களில் கூட கோளறு பதிகம் சொல்லத் தொடங்கினர். இதனால் மகாசுவாமிகள் அருளால் மலை போல் இருந்த துன்பம் பனி போல விலகியது.
|
|
|
|