|
சகலாகம பண்டிதர் என்னும் குருநாதரிடம் சீடர்கள் பாடம் கற்று வந்தனர். ஏழை, செல்வந்தர் என யாராக இருந்தாலும் குருகுலத்தில் தங்கித்தான் படிக்க வேண்டும். குருநாதர் கட்டளையிடும் வேலைகளை சீடர்கள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு செய்வார்கள். நாள் முழுவதும் வேதம், தத்துவ பாடங்களை நடத்துவார் பண்டிதர். இடையிடையே சமையல், பசு பராமரிப்பு, தோட்டம் என்று பலவித கடமைகள் சீடர்களுக்கு காத்திருக்கும். ஒருநாள் வேதாந்த பாடத்தில், ‘அகம் பிரம்மம்’... அதாவது ‘நான் கடவுள்’ என்னும் தத்துவத்தை நடத்தினார். பாடம் முடிந்ததும் சீடர்கள் அவரவர் வேலைகளைச் செய்ய கிளம்பினர். குருவுக்குப் பணிவிடை செய்ய கோவிந்தன் என்பவன் மட்டும் அவருடன் இருந்தான். நாற்காலியில் சாய்ந்தபடி ஓய்வெடுத்த பண்டிதரின் பாதங்களை பிடித்த விட்ட கோவிந்தன், ‘‘குருவே! நான் கடவுள் தானே!’’ என்றான். ‘‘ஆமாம்! நுாற்றுக்கு நுாறு உண்மை’’ என்றார். ‘‘நான் கடவுள் என நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள். கடவுளை அறிய வேண்டும் என்று இந்த குருகுலத்திற்கு நாங்கள் வர வேண்டும். நீங்கள் ஏன் பாடம் நடத்த வேண்டும்?’’ எனக் கேட்டான். அப்போது பசுக்கொட்டிலில் இருந்து பாலை எடுத்து வந்தான் மாதவன். ‘‘மாதவா! கறந்த பாலை அப்படியே வைத்தால் என்னாகும்?’’ என்றார். கேள்விக்கு பதில் சொல்லாமல், மாதவனிடம் பேசத் தொடங்கி விட்டாரே குருநாதர் என மனம் சலித்தான் கோவிந்தன். ‘‘குருவே! பச்சைப் பால் சில மணி நேரம் வேண்டுமானால் தாங்கும்! பிறகு கெட ஆரம்பிக்கும். காய்ச்சினால், பலமணி நேரம் கெடாது’’ என்றான். குரு திரும்பவும், ‘‘மாதவா! காய்ச்சிய பால் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?’’ என்றார். ‘‘மோர் உறை விட்டு தயிராக்குவோம்,’’ என்றான். அடுத்த கேள்வி என்ன கேட்பார் என ஊகித்த கோவிந்தன், ‘‘குருவே! தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்போம். வெண்ணெயை உருக்கினால் கமகமவென நெய்யாகும். நெய்யைச் சாதத்தில் விட்டால் நன்றாகச் சாப்பிடலாம்’’ என படபடவென சொல்லி முடித்தான். ‘‘சபாஷ் கோவிந்தா! கேள்விக்கான விடையை நீயே சொல்லி விட்டாய். கமகமவென மணக்கும் நெய் இந்த பாலில் தானே இருக்கிறது. இப்போது ஏன் தென்படவில்லை?’’ என்றார். இவ்வளவு நேரமும் தனக்குத் தான் பாடம் நடத்தினார் என்னும் உண்மை கோவிந்தனுக்கு புரிந்தது. ‘‘பாலில் நெய் இருப்பது போல, கடவுள் நம் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருக்கிறார். அவரை அறியும் அறிவு நம் எல்லோருக்கும் இருக்கிறது. பால் நெய்யாக மாறுவதற்கு பல படிநிலைகள் இருப்பது போல கடவுளை அறிய நமக்கும் பல இயம நியமங்கள் இருக்கின்றன. அதைத் தான் நீ்ங்கள் இங்கு கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். பால் ருசியும், மணமும் மிக்க நெய்யாவது போல, குருகுலக்கல்வி முடித்துச் செல்லும் நீங்களும் உங்களையே அறிந்த நல்ல பிள்ளைகளாக இருப்பீர்கள்’’ என்றார். சகலாகம பண்டிதரின் மாணவனாக இருப்பது பற்றி பெருமைப்பட்டான் கோவிந்தன். எங்கே வைகுண்டம் பாகவதர் ஒருவர் கஜேந்திர மோட்சம் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். ‘‘கஜேந்திரன் என்னும் தேவலோகத்து யானை தாமரை மலர் பறிக்க குளத்திற்குள் இறங்கியது. அங்கு வாழ்ந்த கூகு என்னும் முதலை, யானையின் காலைக் கவ்வி இழுத்தது. முதலையிடம் சிக்கிய யானை செய்வதறியாமல் திகைத்தது. இஷ்ட தெய்வமான மகாவிஷ்ணுவைச் சரணடைந்து ‘ஆதிமூலமே’ எனக் குரல் எழுப்பியது. அதைக் கேட்ட மகாவிஷ்ணு கருடன் மீது பறந்து வந்து காப்பாற்றினார்’’ என்ற போது அங்கிருந்த பெரியவர் ஒருவர் இடைமறித்தார். ‘‘பாகவதரே! யானையின் கூக்குரல் வைகுண்டத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவை எப்படி எட்டியது?’’ எனக் கேட்டார். பாகவதருக்கு பதில் தெரியவில்லை. ஏதோ படித்ததையும், கேட்டதையும் கொண்டு கதை சொன்ன அவர் விழித்தார். உடனே ‘‘ஐயா! உங்கள் கேள்விக்குரிய பதிலை நான் சொல்கிறேன்’’ என்றான் பாகவதரின் மகன். அதை கேட்க மக்கள் ஆர்வமாயினர். ‘‘மக்களே! எங்கோ வானத்தில் வைகுண்டம் இல்லை. கூப்பிடும் துாரத்தில் தான் வைகுண்டம் இருக்கிறது. பரம்பொருளான மகாவிஷ்ணு எங்கும் நிறைந்திருக்கிறார். நம்பிக்கையோடு அழைத்தால் அவர் இப்போதும் நம்மைக் காக்க ஓடி வருவார்’’ என்றான். பக்திக்கு அடிப்படை நம்பிக்கை என்பதை மக்கள் அறிந்தனர்.
|
|
|
|